ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்?

தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும்.

அதனால்தான், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமைச் சந்திக்க, அவர் பெருமுயற்சி எடுக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

ஜெயலலிதா, தமது அரசியலுக்காக, எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இலங்கை அரசாங்கத்தை சாட ஏதாவது காரணத்தைத் தேடிக் கொண்டே இருப்பவர்.

ஒன்றில் மீனவர் பிரச்சினை, அல்லது கச்சதீவுப் பிரச்சினை, அதுவும் இல்லாவிட்டால் தமிழீழக் கோரிக்கை என, அவர் ஏதாவது ஒன்றை வைத்து இலங்கை அரசாங்கத்தைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றார்.

அதனால், தமிழக மக்களுக்கோ அல்லது இலங்கைத் தமிழர்களுக்கோ எந்த நன்மையும் கிடைப்பதும் இல்லை. அவரைத்தான் விக்னேஸ்வரன் சந்திக்கத் துடிக்கின்றார்.

இதற்கு முன்னரும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த உடன், இறுதிப்போரின் போது இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக மாகாண சபையில் தீர்மானம் ஒன்றை, வட மாகாண முதலமைச்சர் நிறைவேற்றினார்.

பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வட பகுதியிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவதில்லை எனக் கூறியதினாலேயே, தாம் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறியருந்தார்.

இனப்படுகொலை என்பது யதார்த்தம் என்றால், அதற்காக அவ்வாறான தீர்மானமொன்றை நிறைவேற்றுவது வேறு.

அமைச்சரொருவர், தமிழ் மக்கள் விரும்பாத ஒன்றைக் கூறினார் என்பதற்காக, அதனோடு சம்பந்தமே இல்லாத ஒரு விடயம் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றுவது, அறிவுபூர்வமான அரசியல் அல்ல.

ஒரு காலத்தில் உயர் நீதிமன்ற நீதியரசராகக் கடமையாற்றும் போது, நேர்மையானவர் என்று சிங்கள தீவிரவாதிகளிடமிருந்தும் பெயர் பெற்ற விக்னேஸ்வரன், அவ்வாறு செய்வது பொருத்தமற்றதாகவே தெரிகிறது.

அதன் பின்னர், இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, 2014ஆம் ஆண்டு சர்வதேச விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறானதொரு விசாரணை வேண்டும் என, வட மாகாண சபையில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறானதொரு விசாரணையொன்று, ஏற்கெனவே நடைபெற்று வருகிறது என அப்போது அவரது கட்சியான தமிழத்; தேசியக் கூட்டமைப்பே அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது.

இப்போது மற்றுமொரு சர்ச்சையை ஆரம்பிக்கும் வகையில், அவர், ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்புகிறார்.

இது தொடர்பாக இந்தியப் பத்திரிகையொன்று குறிப்பிடுகையில், விக்னேஸ்வரனைச் சந்திக்க, இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து ஜெயலலிதா அனுமதி பெற வேண்டும் எனக் கூறியிருந்தது.

ஏனெனில், இந்திய அரசியலமைப்பின் படி வெளியுறவு என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களில் ஒன்றாகும்.

எனவே, மாநில முதலமைச்சரொருவர், வெளிநாட்டு அரசியல்வாதியொருவரை தன்னிச்சையாகச் சந்தித்து அரசியல், பொருளாதார ரீதியாக கலந்துரையாடுவதாக இருந்தால், அதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி இருக்க வேண்டும்.

ஆனால், தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா, விக்னேஸ்வரனைச் சந்திக்க அவ்வாறான அனுமதி அவசியமில்லை எனவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

இது விக்னேஸ்வரனுக்கும் பொருந்தும். ஏனெனில், இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரமும் வெளிநாட்டு அலுவல்கள் என்பது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள அதிகாரங்களில் ஒன்றாகும்.

ஆனால் தற்போதைய நிலையில், விக்னேஸ்வரனுக்கு  ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படும் என எதிர்ப்பார்க்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமாக இருந்திருந்தால், சிலவேளை அனுமதி மறுக்கப்பட்டு இருக்கக்கூடும்.

விக்னேஸ்வரன், ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்புவது தனிப்பட்ட முறையில் அல்ல. வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில், தமிழ் நாட்டு முதலமைச்சரையே, அவர் சந்திக்க விரும்புகிறார். எனவே, அவர் அவ்வாறானதொரு சந்திப்பின் போது என்ன கலந்துரையாடப் போகிறார் என்பது முக்கியமாகும்.

தமிழகத் தலைவர்கள், இலங்கை விவகாரத்தை வைத்துப் பந்தாடுவதாகவும் அதனால், இலங்கைத் தமிழர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் விக்னேஸ்வரனே 2013ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, சென்னையில் இருந்து வெளியாகும் இந்துப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருந்தார்.

‘தமிழகத் தலைவர்கள், தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காகவே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பாவிக்கின்றனர்.

அவர்கள் பந்தாடுவதைப் போல், அந்தப் புறத்துக்கும் இந்தப் புறத்துக்கும் அதனை அடித்து விளையாடுகின்றனர். அடிபடுவது நாம் தான்.

பிரிவினைதான் தீர்வு என தமிழகத் தலைவர்கள் கூறும் போது, இலங்கைத் தமிழர்கள், இந்தியாவோடு இணைந்து தனி நாட்டை உருவாக்குவார்கள் என அச்சமடைந்துள்ள பல குழுக்களைக் கொண்ட சிங்கள மக்கள் குழப்படைகின்றனர்’ என அந்த பேட்டியின் போது விக்னேஸ்வரன கூறியிருந்தார்.

அங்கு நடப்பவற்றால் இங்கு நாம் பாதிக்கப்படுகிறோம் என, அப்போது மேலும் கூறிய விக்னேஸ்வரன், உணர்ச்சிகரமான வாய்வீச்சுக்கள் காரணமாக இங்குள்ள தமிழர்களின் நிலைமை மோசமடைகிறது என்றும் கூறினார்.

‘நாம் போராடுவோம். சிலவேளை ஒன்றுபடுவோம். அடுத்த வீட்டுக்காரர் இதில் தலையிட்டு நீங்கள் பிரிந்துவிட வேண்டும், நீங்கள் பிரிந்துவிட வேண்டும், நீங்கள் பிரிந்துவிட வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அது அவரது வேலையல்ல’ என்றும் அவர், இந்து நிருபரிடம் கூறியிருந்தார்.

எனவே, தமிழகத் தலைவர்களின் அரசியலை அறிந்து தான், விக்னேஸ்வரன் இப்போது ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்கிறார்.

அவர் அன்று கூறியது முற்றிலும் உண்மையாகும். தமிழகத் தலைவர்கள், இலங்கைத் தமிழ்த் தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை இன்று ஏற்றுக் கொள்வார்கள்.   நாளை அதனை மறுப்பார்கள்.

இன்று புலிகள் அமைப்பை வரவேற்பார்கள். நாளை, புலிகளைத் திட்டுவார்கள். இன்று தமிழீழத்தை ஏற்பார்கள், நாளை அதனை மறுப்பார்கள்.

இதனை நாம், மே மாதம 11ஆம் திகதி தமிழ்மிரரிலும் குறிப்பிட்டிருந்தோம். அன்று நாம் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதியை மீண்டும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அன்று நாம் இவ்வாறு குறிப்பிட்டோம்.

‘கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றும் வரை, இலங்கை அரசாங்கம், இனச் சம்ஹாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி வந்த எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா, 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது, புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மக்களை வெளியேற இடமளித்தால், போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கலாம் எனக் கூறியிருந்தார்.

அவர், அத்தோடு நின்றுவிடவில்லை. இலங்கைப் படையினரின் நோக்கம், அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்வதல்ல என்றும் அந்த மாநாட்டின் போது ஜெயலலிதா கூறினார்.

மேலும் உரையாற்றிய அவர், போரொன்றின் போது சாதாரண மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் இந்த விடயத்தில் எந்தவொரு நாடும் விதிவிலக்கல்ல என்றும் கூறினார்.

ஆச்சரியமான முறையில், இந்த மன மாற்றமானது, தொற்று நோய் போல் தி.மு.கவிடமும் தாவியது.

இரண்டு வாரங்களில், அதாவது பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி தமது கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய கருணாநிதி, 1987ஆம் ஆண்டளவில், தமிழீழத்தில் சர்வாதிகார ஆட்சியை நிறுவும் தமது விருப்பத்தைப் பிரபாகரன் தெரிவித்ததையடுத்து, புலிகள் தமது கட்சியின் ஆதரவை இழந்துவிட்டனர் என்றும் அதன்பின்னர் தாம், புலிகளை வெறுத்துவிட்டதாகவும் கூறினார்.

ஆனால், பத்மநாபா குழுவினர் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர், அதன் பின்னர், அவரது ஆட்சியினால் புலிகளுக்கு வழங்கப்பட்ட வசதி வாய்ப்புக்களினாலேயே கொல்லப்பட்டனர் என்பது உலகம் அறிந்த உண்மை’

எனவே, விக்னேஸ்வரன், ஜெயலலிதாவைச் சந்தித்து என்ன செய்யப்போகின்றார், என்ன அரசியல் முடிவுக்கு வரலாம் என்பது தெளிவில்லாத விடயமாகவே இருக்கிறது.

மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு, தமிழீழமே ஒரே தீர்வாகும் என, ஜெயலலிதா உட்பட தமிழகத் தலைவர்கள் கூறிக்கொண்டு இருக்கும் காலம் இது.

ஆனால், பிரிவினை வேண்டாம், ஆகக் கூடுதலான அதிகாரப் பரவலாக்கலே தீர்வாகும் என்பது, விக்னேஸ்வரன் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடாகும்.

இந்த நிலையில், ஜெயலலிதாவைச் சந்தித்து. விக்னேஸ்வரன் என்ன உடன்பாட்டுக்கு வரப் போகிறார், ஒன்றில் அவர் ஜெயலலிதாவின் கருத்தை ஏற்று, தமிழீழமே தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் அல்லது தற்போதைய நிலையில் தனித்தமிழ்நாடு என்பது யதார்த்தபூர்வமான தீர்வல்ல என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளச் செய்யவேண்டும்.

ஜெயலலிதாவின் கருத்தை விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டு, அதனை ஏதாவது உத்தியோகபூர்வ மேடையில் பேசினால் அதுவே அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடப் போதுமானதாகும்.

அல்லது, அவர் அதனை மாகாண சபையில் பிரேரணையாக சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டால், 1991ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாளின் வடக்கு – கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிட்டதைப் போல், அரசாங்கம் வட மாகாண சபையை கலைத்துவிட அது போதுமானதாகும்.

விக்னேஸ்வரனுடனான உத்தேச சந்திப்பையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வாரா என்பது மறுபுறத்தில் எழுப்பப்படக்கூடிய கேள்வியாகும்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை ஏற்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால், இப்போதைக்கு அவர், தமிழீழக் கோரிக்கையிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார் என்று தான் தெரிகிறது.

ஏனெனில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதா காட்டிக் கொடுத்துவிட்டார் எனக் கூறி, அந்த நிலைமையை தமக்குச் சாதகமாகப் பாவிக்கலாம்.

வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் கூறியதைப் போல் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதாவோ ஏனைய தமிழக தலைவர்களோ பாவிக்கவில்லை.

எனவே, தமிழகத் தலைவர்கள் தொடர்ந்தும் தமிழ் ஈழத்தை வலியுறுத்துவதால், இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற கருத்தை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அதாவது, உத்தேச விக்னேஸ்வரன்-ஜெயலலிதா சந்திப்பின் மூலம், இருவருக்கும் எந்தவோர் அரசியல் உடன்பாட்டுக்கும் வரமுடியாது. இருவருக்கும் இலங்கை அரசாங்கத்தை சீண்டிவிடக் கூடிய அறிக்கையொன்றை வெளியிடுவது மட்டுமே செய்ய முடியும்.

-எம். எஸ். எம் . ஐயூப்-

Share.
Leave A Reply

Exit mobile version