இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா கையாண்ட துருப்புச் சீட்டுத்தான் யுத்தக் குற்ற விசாரணை என்பது.
இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிவாரணம் கோரி சர்வதேசத்தை நாடியதும் அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி பல தடவைகள் ஐ.நாவுக்குப் பிரேரணையைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றவும் செய்தது.
இந்த விவகாரத்தில் ஐ.நாவை முன்நிறுத்தி தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் முயற்சிக்கின்றனவா அல்லது தமிழர்களின் பின்னால் ஒளிழிந்து கொண்டு மஹிந்த அரசைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனவா என்று அப்போதே கேள்விகள் எழுந்தன.
இந்தக் கேள்விக்கு ஆட்சி மாற்றத்தின் பின் விடை கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
புதிய அரசு மஹிந்தவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு முரணான அரசாக-சர்வதேசத்துடன் எல்லாவிதத்திலும் ஒத்துப் போகக்கூடிய அரசாக இருப்பதால் இலங்கை மீதான சர்வதேசத்தின் இறுக்கம் தனிந்துகொண்டு போவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலைப்பாடு தமிழருக்கு ஆபத்தானதாகும்.
தமிழர்களின் உதவியைக் கொண்டு இந்த ஆட்சி உதயமாகியபோதிலும்,அது முழுக்கமுழுக்க சிங்களவர்களின் நலனைப் பாதிக்காது பயணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
தமிழர்கள் செய்த உதவிக்கு ஏதாவது செய்து நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று இந்த அரசு விரும்புவதையும் தமிழர்கள் விரும்புகின்ற எல்லாவற்றையும் செய்வதற்கு இந்த அரசு தயாரில்லை என்பதையும் அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் காட்டுகின்றன.
மஹிந்த அரசிடம் மேற்கு நாடுகள் அப்போது எதை எதிர்பார்த்ததோ அது இப்போது இந்த அரசிடம் கிடைப்பதால் அதற்கு பிரதியுபகாரமாக இந்த அரசின் விருப்பத்துக்கு ஏற்ப மேற்குலகம் செயற்படும் என்பதை இப்போது உணர முடிகிறது.
குறிப்பாக,யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பில் மேற்குலகத்தினதும் ஐ.நா சபையினதும் பழைய நிலைப்பாடுகள்-கடும்போக்கு சற்றுத் தளர்ந்துகொண்டு போவதை அவதானிக்கலாம்.
2015 இல் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசு இணை அனுசரணையாளராக செயற்பட்டதன் மூலம் அமெரிக்காவையும் ஐ.நாவையும் இலங்கை அரசு தன் பக்கம் வளைத்துப் போட்டது.
இதனால்,யுத்தக் குற்ற விசாரணை தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவோ அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவதற்கு இலங்கைக்கு அமெரிக்காவும் ஐ.நாவும் வழி விட்டுள்ளன.
உள்ளக பொறிமுறை மூலம்தான் யுத்தக் குற்ற குற்ற விசாரணை என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவும் ஐ.நாவும் ஆதரவு தெரிவித்தன.இதனைத் தொடர்ந்து இலங்கை வந்த மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசுக்கு இன்னும் சாதகமாக செயற்பட்டார்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை யுத்தக் குற்றங்களா அல்லது மனித உரிமை மீறல்களா என்று தீர்மானிக்கும் பொறுப்பை இலங்கை அரசிடமே அவர் விட்டதோடு சர்வதேச விசாரணையை நிராகரித்து உள்ளக விசாரணையை ஏற்றுக்கொண்டார்.
இந்த இரண்டு விடயங்களும் தமிழரின் நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டவையாகும்.தமிழர்கள் இறுதி யுத்த நிகழ்வை யுத்தக் குற்றங்கள் என்று கூறுவதோடு அவை சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.
ஆனால், சர்வதேசம் ஆட்சி மாற்றத்தோடு பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
இலங்கை அரசு தங்களின் விருப்பம்போல் ஆடுவதால்-தங்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதால் இலங்கை அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அந்த நாடுகள் துணை போகின்றன.
இந்த அரசு மீதான சர்வதேசத்தின் நெகிழ்வுத் தன்மையே இதற்குக் காரணம்.இலங்கையின் இந்த நிலைப்பாட்டுக்கும் சர்வதேசம் ஆதரவு வழங்கும் என்று சொல்லலாம்.
மஹிந்த அரசில் தமிழருக்கு நீதி வேண்டும் என்று தொண்டை கிழியக் கத்திய சர்வதேசம் இன்று இலங்கை அரசு கொடுப்பதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று தமிழர்களை மிரட்டுவதுபோல் செயற்படுகின்றது.
சர்வதேசத்துடனான இலங்கை அரசின் இந்தப் பண்டமாற்று வர்த்தகம் வெற்றியளித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இலங்கை அரசு தமக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் அதற்குப் பிரதியுபகாரமாக இலங்கைத் தமிழர் விவகாரத்தை இலங்கை அரசு விருப்பம்போல் கையாள்வதற்கு சர்வதேசம் வழிவிடுகின்றது.
படையினரின் தொடர்ச்சியான அதிருப்தியைச் சம்பாதித்து வரும் மைத்திரி-ரணில் அரசு இந்த விவகாரத்தைக் கொண்டுதான் படையினரைத் திருப்திப்படுத்தப் போகின்றது-அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றது.
ஒட்டுமொத்த படையினரையும் இலங்கை அரசின் விசுவாசமிக்க படையினராக மாற்றுவதற்கு இறுதியும் மிகப் பெரியதுமான வாய்ப்பாக இது இலங்கை அரசுக்கு அமையப் போகின்றது.
ஆகவே,இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை அரசு படையினரும் சிங்கள மக்களும் திருப்திப்படும் வகையில்தான் முடித்து வைக்கப் போகின்றது.
இந்த நிலையில்தான் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.
மஹிந்தவின் ஆட்சியில் என்றால் இவ்வாறான கூட்டத் தொடர்களை தமிழர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால்,இப்போது கவலையுடன்தான் எதிர்பார்க்கின்றனர்.
உள்ளகப் பொறிமுறை தொடர்பாக இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு விளக்குவார்.
மனித உரிமை ஆணையாளரோ இலங்கையில் அவரது அவதானிப்புக்களை ப் பட்டியலிடுவார்.
இவற்றைத் தவிர இலங்கை அரசின் கழுத்தை நெரிக்கும் வகையில்,எந்தவொரு நடவடிக்கையும் அங்கு முன்னெடுக்கப்படாது என்பதை .உறுதியாகக் கூறலாம்.
இவ்வாறு இந்தப் பேரவை கூடுவதால் தமிழருக்கு என்ன நன்மை ஏற்படப் போகின்றது என்று தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
(எம்.ஐ.முபாறக் )