மே 2009ல், தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப் பட்டதை திரும்பிப் பார்க்கும் போது, அந்த நேரத்தில் அதற்கான சூழ்நிலையைப் பற்றி அதன் கடந்தகால உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நெருக்கமான சில தளபதிகளின் காட்டிக்கொடுப்பு உட்பட எதிர்பாரத அந்த உச்சக்கட்ட சோகத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்.
கிளிநொச்சி புறநகர் பகுதியான செல்வநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து முன்னாள் போராளி அங்கத்தவரான ரஞ்சினி, பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய சில தளபதிகள் இரட்டை வேடம் போடுவதில் ஈடுபட்டிருந்தார்கள் என்று சொன்னார்.
“நாங்கள் தமிழில் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று சொல்வது போல இவர்கள் நடந்து கொண்டார்கள்” என்று அவர் உவமானம் காட்டினார்.
Ranjini-Sudhan
பிரபாகரனைத் தவிர, பல உயர்மட்ட தலைவர்கள், தாங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் தாங்கள் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்ட தலைவர் என்பனவற்றைக் காட்டிலும் தங்கள் சுய சௌகரியங்கள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டினார்கள், என்று ரஞ்சினி நினைவுகூர்ந்தார்.
அந்தக் காட்டிக் கொடுப்பாளர்களின் பெயர்களைக் கூறும்படி அவரிடம் கேட்டபோது, “மன்னிக்கவும்” என்று கூறி அதை தெரிவிக்க மறுத்துவிட்டார். ஏனைய அங்கத்தவர்களைப் போலவே ரஞ்சினியும் மேற்கூறிய தோல்விக்காக பிரபாகரன் மீது பழிகூறாதபடி பார்த்துக் கொண்டார்.
“அவர் (பிரபாகரன்) இந்தக் காரணங்களுக்காக தன்னை ஒட்டுமொத்தமாக அர்ப்பணித்தார், எந்த சக்திக்கும் தலை வணங்கவில்லை, மற்றும் கடைசிவரை போராடினார், மாவீரர் குடும்பங்கள் நன்கு கவனிக்கப்படும்படியாக அவர் பார்த்துக் கொண்டார்” என்று அவர் சொன்னார்.
ஆனால் ஏனைய தலைவர்களின் ஆடம்பரமான பிரத்தியேகமான வாழ்க்கை முறையை பார்த்தபோது, தலைவருக்கு குறைந்த படிநிலையில் உள்ளவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருந்தார்கள், அதுதான் இயக்கத்தின் சரிவுக்கான இரண்டாவது மிகவும் முக்கியமான காரணம், என்றார் அவர்.
1989ல் தனது 19ம் வயதில் ரஞ்சினி தானாகவே முன்வந்து புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டதுடன் மற்றும் தொடர்ச்சியாக மிகவும் உடல் பலவீனமான காயங்கள் ஏற்படும் வரை பல யுத்தங்களில் சக தளபதியாக பங்கெடுத்துள்ளார், அந்தக் காயங்களின் விளைவாக 2000 ம் ஆண்டில் அவர் அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
‘ராதா வான்படை’(எல்.ரீ.ரீ.ஈ யின் விமான எதிர்ப்பு பிரிவு) யில் பணியாற்றிய ஒரு அங்கத்தவரை திருமணம் செய்துகொண்ட ரஞ்சினி, ஏப்ரல் 2009ல் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தார், மற்றும் ஒரு வருடத்தின் பின் புனர்வாழ்வு பெற்று விடுதலையானார்.
எல்.ரீ.ரீ.ஈயின் பெண்கள் அரசியல் பிரிவுத் தலைவர் காலஞ்சென்ற தமிழினியின் கூற்றுப்படி, அமைப்பு நிர்மூலமாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் உயர்மட்டத்தினரிடையே ஊடுருவியிருந்ததுதான்.
வெளிப்படையாக உளவாளிகள் பிரபாகரனை சுற்றியிருந்த உள்வட்டத்தினரிடையே ஊடுருவி இருந்தார்கள், என்று தமிழினி அவரது கணவர் ஜெயகுமாரன் மகாதேவாவிடம் சொல்லியிருக்கிறார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் அவரது மணத்தின் பின் பிரசுரிக்கப்பட்ட அவர் எழுதிய நூலான “கூர்வாளின் நிழலில்” என்பதில் தமிழினி உளவாளிகள் பற்றிக் குறிப்பிடவில்லை, ஆனால் உயர்மட்ட தளபதிகளின் நடமாட்டங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் துல்லியமான கணிப்பீடுகள் பற்றி எல்.ரீ.ரீ.ஈ தலைவர் திகைப்பும் மற்றும் தடுமாற்றமும் அடைந்திருப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்.
சங்கர் போன்ற மிகவும் உயர்வாக பாதுகாக்கப்பட்ட சில தலைவர்களின் நடமாட்டங்கள் மிகவும் உயர்வான இரகசியமாக பேணப்பட்டன, ஆனால் சங்கர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் நீண்ட தூர வேவுபார்க்கும் ரோந்து படையினால்(எல்.ஆர்.ஆர்.பி) தூண்டப்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் கொல்லப்பட்டார்.
“முடிவுவரை, எப்படி இராணுவம் அந்த துல்லியமான புலனாய்வு தகவலை பெற்றது என்பது பற்றி எல்.ரீ.ரீ.ஈ தலைமைக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என்று தமிழினி எழுதியுள்ளார்.
தமிழினியின் கணவர் ஜெயகுமாரன் மகாதேவாவின் கூற்றுப்படி, புலானாய்வு துறையின் தலைவர் பொட்டு அம்மானின் கடினமான நடவடிக்கை சில எண்ணிக்கையிலான மூத்த அங்கத்தவர்களை ஒதுக்கி வைத்தது. அங்கத்தவர்களின் விசுவாசம் மற்றும் நேர்மை என்பனவற்றை சோதிப்பதற்கு அவர் துன்புறுத்தும் போக்கினைக் கையாண்டார்.
“அவர் தமிழினியையும் கூடச் சோதித்தார். இறந்த பெண் அங்கத்தவர்களின் நகைகளை அவர்களது குடும்பத்தினரிடம் திருப்பிக் கொடுக்கும் கொள்கையை எல்.ரீ.ரீ.ஈ கொண்டிருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் நகைகளை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அனுப்பாது, பொட்டு அம்மான் அதை தமிழினிக்கு அனுப்பினார் அவர் அதை எடுத்து தனக்காக வைத்துக் கொள்கிறாரா என்பதைச் சோதிப்பதற்காக.
பொட்டு அம்மானின் எண்ணம் என்ன என்பதை புரிந்து கொண்ட தமிழினி ஒரு கோபமான பதிலடியாக அதை அவரிடமே திருப்பி அனுப்பினார்” ஜெயகுமாரன் அதை நினைவுபடுத்தினார்.
சிறிய வரம்பு மீறல்களுக்கு கூட கடுமையான தண்டனை வழங்கும் முறை கூட அங்கத்தவர்களை விலகியிருக்கச் செய்தது.
தமிழினி அதை எழுதியுள்ளார், ஒரு தற்கொலைப்படை பிரிவினர், அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கான கொழும்பு துறைமுகத்தை தாக்காது வன்னியில் இருந்த தலைமையகத்துக்கு திரும்பி வந்த வேளையில் அந்த படைப் பிரிவின் அங்கத்தவர்கள் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள், தண்டனைகளை தாங்க இயலாது சில அங்கத்தவர்கள் தற்கொலை கூடச் செய்து கொண்டார்கள்.
இறுதிக்கட்ட போரில் பொட்டு அம்மான் இருதயம் அற்ற முறையில் காயம் அடைந்த வீரர்களின்மீது குண்டுகளைக் கட்டி முன்னேறிவரும் துருப்புக்களை எதிர் கொள்ளும்படி அனுப்பினார்.
அந்த வழியில் காயமடைந்த அநேக வீரர்கள் தங்கள் உயிர்களைப் பலியாக்கினார்கள், என்று தமிழினி எழுதியுள்ளார். கடைசி சில நாட்களாக தப்பியோடும் தமிழ் பொதுமக்களைச் சுட்டுக் கொல்லும்படியும் பொட்டு அம்மான் உத்தரவிட்டார்.
அறிவியல் ரீதியிலான யுத்தம்
ஆனால் இவை அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை பார்த்த தமிழ் கவிஞர் செல்வராசா கருணாகரன் சொல்வது, எல்.ரீ.ரீ.ஈ தோல்வியடைந்தது காட்டிக் கொடுப்பால் அல்ல, ஆனால் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் உன்னத வளங்கள் மற்றும் தந்திரங்கள் மூலமாகத்தான் என்று.
ஸ்ரீலங்காவினர் ஒரு விஞ்ஞான ரீதியான போரை நடத்தினார்கள் என்று அவர் எக்ஸ்பிரசிடம் சொன்னார்.
“2009ன் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா படைகள், கடல் வழியாக எல்.ரீ.ரீ.ஈக்கு வரும் விநியோகங்களை தடை செய்தன. மற்றும் அவர்கள் கிழக்கு கடலை மட்டும் திறந்து விட்டு மேற்கிலுள்ள காடுகளையும் அடைத்து வைத்தார்கள்.
2007 முதல் நீடித்த போர் தேய்வடைந்து வந்தது, 2009 ஜனவரிக்குள் எல்.ரீ.ரீ.ஈ யின் பலத்தில் ஐம்பது வீதம் மறைந்து போனது. முன்னணி போராட்ட அமைப்புகளில் மீந்திருந்தது, ஆண்களில் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவும் பெண்களில் மாலதி படைப்பிரிவும் மட்டுமே.
மற்றும் 2007ல் சிறுவர்கள் கட்டாயமாக படைக்கு ஆட்சேர்புபு செய்வது ஆரம்பிக்கப்பட்டது முதல் பொதுமக்கள் இயக்கத்தில் இருந்து தனிமைப்படத் தொடங்கினார்கள், மக்களின் ஆதரவில் தங்கியிருந்த ஒரு அமைப்புக்கு அது ஒரு பெரிய பின்னடைவு என்பது நிருபணமானது என்று கருணாகரன் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயின் உள்வட்டத்தில் காட்டிக்கொடுப்பு நடந்தது ஒரு முக்கியமான விடயமாக இருந்தது என்று நினைக்கிறீர்களா என அவரிடம் கேட்டபோது, இராணுவ தலைவர்கள் மற்றும் இராணுவ திட்டங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க எல்.ரீ.ரீ.ஈ, ஸ்ரீலங்கா நிறுவனங்களுக்குள் ஊடுருவு இருந்தது போல, ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களும் எல்.ரீ.ரீ.ஈக்குள் ஊடுருவியிருந்தார்கள் என்று கருணாகரன் சொன்னார்.
“ 2002 – 2004 சமாதான நடவடிக்கையின் போதே ஆரம்பமாகிவிட்டது” என்று அவர் சொன்னார்.
விடுவிக்கப்படாத பகுதிகளில் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுமானத் திட்டங்களில் வேலைகளுக்கு சென்ற தென் பகுதியை சேர்ந்தவர்கள் புலனாய்வு பிரிவின் முகவர்களாக இருந்திருக்கக் கூடும். மற்றும் 2004ல் கிழக்கு தளபதி கருணாவின் பிளவுடன் பாதுகாப்பு படைகள் எல்.ரீ.ரீ.ஈயின் அணுகுமுறைகள், பலம் மற்றும் பலவீனம் என்பனவற்றை அறிந்திருக்க முடியும்.
இராணுவ தலைமைப் பதவியை ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்றுக்கொண்டதும் ஸ்ரீலங்கா படைகள் பழைய கோட்பாடு;களைக் கைவிட்டு அழிவேற்படுத்தும் விளைவுகளுடன் புலிகளின் தந்திரோபாயங்களை பின்தொடரத் தொடங்கினார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ முன்பு செய்ததைப் போல, இராணுவம் எட்டு பேர்கள் கொண்ட சிறிய கொமாண்டோ குழுக்களை எல்.ரீ.ரீ.ஈ ஆச்சரியப் படும்படி, எல்.ரீ.ரீ.ஈ பிடித்துள்ள பகுதிகளுக்குள் ஆழமாக ஊடுருவ அனுப்பியது, என்று கருணாகரன் சொன்னார்.
சர்வதேச ஆதரவு
ஸ்ரீலங்காவுக்கு கிடைத்த சர்வதேச ஆதரவு யுத்தத்தில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்பது கருணாகரனின் கூற்று.
“யுத்தம் ஸ்ரீலங்காவால் மாத்திரம் நடத்தப்படவில்லை. அது மற்றைய நாடுகளாலும்கூட நடத்தப்பட்டது, முதன்மையாக சீனா மற்றும் பாகிஸ்தான் என்பன ஸ்ரீலங்கா படைகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தன” என்று அவர் சொன்னார்.
சர்வதேச சமூகத்தின் தலையீடு காரணமாகத்தான் யுத்தம் நடத்தப்பட்டதில் ஏற்பட்ட போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை தீவிரமாகக் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றதாக உள்ளது என கருணாகரன் சந்தேகிக்கிறார்.
“காலம் செல்லும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுத்துப்போய்விடும் மற்றும் சான்றுகளும் காணாமற் போய்விடும்” என்று அவர் கணித்துக் கூறினார்.
-பி.கே.பாலச்சந்திரன்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
தொடர்புடைய ஆங்கில செய்தி
Downfall of LTTE: Betrayed By Insiders Or Outmaneuvered In War?