இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே, இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக, கடந்த சில நாள்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, இப்பகுதி ஆராய்கிறது.

என்ன நடந்தது? 

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது எதிரியெனப் பல இடங்களிலும் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமராக நியமிப்பதாக அறிவித்தார்.

எதிரியாக மக்களிடத்தில் அவர் காட்டி வந்த ஒருவரை, பிரதமராக நியமித்தமை அதிர்ச்சியென்றால், அந்த மாற்றம் நடைபெற்ற விதம் தான், அதிக அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஏனென்றால், நாட்டின் பிரதமர் மாற்றப்பட்டுவிட்டார் என்ற தகவலை, குறுஞ்செய்திகள் மூலமாகத் தான் மக்கள் அறிந்தார்கள்.

என்ன காரணத்துக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்கியதாக, அடுத்த சுமார் 48 மணிநேரங்களுக்கு, உத்தியோகபூர்வமாக எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.

எனவே தான், பிரச்சினை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள், என்ன காரணத்தால் பிரச்சினை வந்தது என்பதையோ அதன் பின்புலத் தன்மையையோ அறிய முடியாதிருந்தது.

இப்பிரச்சினை, பெரிதளவுக்கு மாறியமைக்கு, தொடர்பாடல் இல்லாத ஒரு நிலைமை முக்கியமானது. சில வேளைகளில், என்ன காரணத்துக்காக பிரதமர் ரணிலைப் பதவியிலிருந்து நீக்குகிறார் என்பதை, ஜனாதிபதி சிறிசேன விளக்கமளித்துவிட்டு, தன்னுடைய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், இந்தளவுக்குப் பிரச்சினை எழுந்திருக்காது என்று வாதிடுவோரும் உள்ளனர்.

பிரதமரைப் பதவி நீக்குவதில் என்ன பிழை? 

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் (2015) ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வீழ்த்துவதற்காக, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து பிரிந்து வந்து, எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றிபெற்றிருந்தமை, அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மஹிந்தவின் காலத்தில், அரசமைப்பின் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவரை, ஜனாதிபதியொருவர், இரண்டு தடவைகள் தான் பதவி வகிக்கலாம் என்ற ஏற்பாடு இருந்த நிலையில், அதை இல்லாமற்செய்ததோடு மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே ஒழிப்பதாகவே, மைத்திரி – ரணில் கூட்டணி வாக்குறுதியளித்தது.

அவர்கள் வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாவிடினும், அரசமைப்புக்கான 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, மிகப்பாரிய பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டது.

அதன்போது, நிறைவேற்று அதிகார முறையில் காணப்பட்ட பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. “தன்னுடைய அதிகாரங்களை, தானாக விரும்பிக் குறைத்த முதல் தலைவர் நான்” என்ற ரீதியில், அச்செயற்பாட்டை, ஜனாதிபதி சிறிசேன, பல இடங்களிலும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.

அவ்வாறு கூறிய அதே ஜனாதிபதி தான், 19ஆவது திருத்தம் மூலமாக இல்லாமற்செய்யப்பட்டது என்று கருதப்படும் அதிகாரமொன்றைப் பயன்படுத்தி, பிரதமர் ரணிலை, பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். அதாவது, அரசமைப்பை மீறிச் செயற்பட்டிருக்கிறார் என்பது தான், இப்போதிருக்கின்ற குற்றச்சாட்டு.

பத்தொன்பதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால், ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கை, சட்டரீதியானதாகவே இருந்திருக்கும்.

 19ஆவது திருத்தத்தில் என்ன சிக்கல்? 

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, ஜனாதிபதியின் பல அதிகாரங்கள் குறைப்பட்டன. அதில் முக்கியமாக, பிரதமரை நீக்கும் அதிகாரம் இல்லாமற்செய்யப்பட்டது.

இதுவரை காலமும், பிரதமராக ஒருவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி, அவரை நீக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது, பிரதமராக எவரையும் நியமிக்கும் அதிகாரத்தை அவர் கொண்டிருந்தாலும், நீக்கும் அதிகாரத்தை இழந்துள்ளார்.

முன்னைய காலங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்து முரண்பாடு ஏற்பட்டால், தன்னிச்சையாகப் பிரதமரை நீக்கும் நடவடிக்கையை, ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புக் காணப்பட்டது.

இரண்டாயிரத்து நான்காம் (2004) ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை, இவ்வாறு பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.

இது, ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லையென்ற கருத்து, பொதுவாகவே நிலவியது. ஏனெனில், ஜனாதிபதியென்பவர் தனிநபர்.

அவரின் தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அரசாங்கத்தைக் கலைப்பது, நியாயமற்றது என்றே கருதப்பட்டது. அதிலும், 19ஆவது திருத்தத்தின் முன்னர், நாடாளுமன்றமும் ஜனாதிபதியும், தலா 6 ஆண்டுகள் பதவியைக் கொண்டிருந்தனர்.

இரண்டு தரப்பினரும், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டது.

எனவே தான், ஜனநாயகப் பண்புகளைக் கொண்டுவரும் நோக்கில், 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்படி, நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட திருத்தம் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (புதிய “பிரதமர்” மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும்) சிக்கலாக அமைந்திருக்கிறது.

இப்போதைய நிலையின்படி, தானாக இராஜினாமா செய்தல்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகல்; மரணம்; நாடாளுமன்றம் கலைக்கப்படுதல்; அமைச்சரவை கலைதல்; வரவு – செலவுத் திட்டம் அல்லது அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் அல்லது நிதியொதுக்கீட்டு அறிக்கை ஆகியன தோற்கடிக்கப்படுதல் ஆகியவற்றின் மூலமாகவே, பிரதமர் ஒருவரின் பதவி பறிபோக முடியும். எனவே, பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு, அரசமைப்புக்கு முரணானது என்ற கருத்துத் தான், அநேகமான சட்ட நிபுணர்களிடம் காணப்படுகிறது.

முடியாதென்றால் ஏன் செய்தார்கள்? 

இங்கு தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏனென்றால், அநேகமான சட்ட நிபுணர்களின் கருத்துப்படி, பிரதமரைப் பதவி நீக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லையென்று கூறப்பட்டாலும், “இல்லை, அவ்வதிகாரம் இருக்கிறது” என, ஜனாதிபதி சிறிசேனவுக்கு நெருக்கமான தரப்புகள் கூறுகின்றன.

என்றாலும், பதவியை நீக்குவதற்கான முடிவை எடுத்துவிட்டுத் தான், காரணங்களைத் தேடுகிறார்களோ என்று எண்ணுமளவுக்கு, பதவி நீக்கத்துக்கான பல்வேறு கருத்துகளைக் கூறுகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு கருத்தையும் ஆராய்வது அவசியமானது.

1. ‘தேசிய அரசாங்கம் வீழ்ந்ததால் அமைச்சரவையும் வீழ்ந்தது’ 

அரசமைப்பின் படி, தேசிய அரசாங்கம் என்றால் என்னவென்று வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. “நாடாளுமன்றத்தில் ஆகக்கூடுதலாக ஆசனங்களைப் பெறும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும், நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஓர் அரசாங்கம்” என, தேசிய அரசாங்கத்தை, அரசமைப்பு வரையறுக்கிறது.

இதிலென்ன பிரச்சினை என்றால், சாதாரண அரசாங்கமாக இருந்தால், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை, 30ஐத் தாண்டக்கூடாது. ஆனால், தேசிய அரசாங்கத்துக்கென அக்கட்டுப்பாடு இல்லை.

எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர், தேசிய அரசாங்கம் இல்லாமற்போய்விட்டது எனவும், எனவே, தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் இல்லாமற்போய்விட்டது எனவும், ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவிக்கின்றனர். அமைச்சரவை இல்லாது போனால், பிரதமர் பதவி கலையுமென்பது, அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உண்மை.

ஆனால், இதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன:

  • தேசிய அரசாங்கத்தில், அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி) தான், ஐ.ம.சு.கூவுடன் இணைந்தது.
  • இவ்விரண்டு கட்சிகளுக்கும் மேலதிகமாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரொருவரும், தேசிய அரசாங்கத்தில் உள்ளார். (கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஐ.தே.முவுடன் மு.கா இணைந்து போட்டியிட்டாலும், தனித்தும் போட்டியிட்டிருந்தது. அவ்வாறு, ஓர் ஆசனத்தை அக்கட்சி வென்றது). எனவே, ஐ.ம.சு.கூ விலகியதால், தேசிய அரசாங்கம் இல்லாமற்போனது என்பது தவறாகும். ஏனென்றால், ஐ.தே.முவும் மு.காவும் இணைந்து இருப்பதால், இதுவும் தேசிய அரசாங்கமே.
  • தேசிய அரசாங்கம் இல்லாது போனால், அமைச்சரவை இல்லாது போகுமென, அரசமைப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆகவே, மேலே கூறப்பட்ட விடயம் தொடர்பாக ஆராயவே தேவையில்லை.

2. ‘அரசமைப்பின் சிங்களப் பிரதிக்கும் ஆங்கிலப் பிரதிக்கும் இடையில் வித்தியாசமுண்டு’

அண்மைய நாள்களில் எழுப்பப்படும் முக்கியமான விவாதமாக இது மாறியிருக்கிறது. இலங்கை அரசமைப்பின் சிங்களப் பிரதிக்கும் ஆங்கிலப் பிரதிக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது எனவும், பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் உண்டென, சிங்களப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

தன்னைச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர்களிடம், இவ்விடயத்தை ஜனாதிபதி கூறினாரெனக் கூறப்படுகிறது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பேராசிரியருமான ஜி.எல். பீரிஸ் ஆகியோரும், இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், சிறிதளவு உண்மை இருக்கிறது. இலங்கை அரசமைப்பின் சிங்களப் பிரதிக்கும் ஆங்கிலப் பிரதிக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவது உண்மை தான்.

அரசமைப்பின் 48ஆவது உறுப்புரையின் 1ஆவது உப பிரிவில், “இறப்பதன் மூலம், பதவி விலகுவதன் மூலம் அல்லது வேறு வழிகளில்” என்று, ஆங்கிலப் பிரதி கூறுகிறது. ஆனால், சிங்களப் பிரதியில், “இறப்பதன் மூலம், பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம், பதவி துறப்பதன் மூலம், அல்லது வேறு வழிகளில்” என்று கூறப்படுகிறது. தமிழ்ப் பிரதியிலும், இவ்வாறு தான் உள்ளது.

“பதவியிலிருந்து அகற்றப்படுவது” என்று கூறப்படுவது, ஜனாதிபதியால் அகற்றப்படுவது தான் என்று வாதிடும் ஜனாதிபதிக்கு நெருக்கமானோர், எனவே, ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது என்கின்றனர்.

இலங்கையின் சட்டக் கட்டமைப்பில், சட்டமொன்றின் முதல் மொழிக்கும் மொழிபெயர்ப்புக்குமிடையில் வேறுபாடு காணப்பட்டால், உருவாக்கப்பட்ட மொழியே மேவும் என்ற நிலை காணப்படுகிறது. இலங்கையின் சட்டங்கள், சிங்கள மொழியிலேயே அநேகம் உருவாக்கப்படுவதால், சிங்கள மொழிக்கும் ஏனைய மொழிபெயர்ப்புகளுக்கும் இடையிலேயே இப்பிரச்சினை உருவாவதுண்டு.

ஆனால், “பதவியிலிருந்து அகற்றப்படுவது” என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஜனாதிபதியால் அகற்றப்படுவது என்று, எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பிடப்படாத ஒரு விடயத்தை, அவ்வாறு தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வாதிடுவது ஆபத்தானது.

அதிலும் குறிப்பாக, அதே அரசமைப்பில், பிரதமரை எவ்வாறு பதவி விலக்கலாம் என, தனியான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அதில், ஜனாதிபதியால் நீக்கப்படுவது என்ற நிலைப்பாடு இல்லை. எனவே, இவ்வாதமும் பலமற்றது.

அதேபோல், ஏனைய சட்டங்களில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை இருந்தாலும், அரசமைப்பிலும் அதே நிலைமையா என்பதில் உறுதியில்லை.

சில காலங்களுக்கு முன்னர், வேறு ஒரு விடயம் தொடர்பில், தமிழ் மிரருக்குக் கருத்துத் தெரிவித்த, முக்கியமான ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அரசமைப்பில் சிங்கள மொழிக்குத் தான் முன்னுரிமை என்ற நிலைமை இல்லையென வாதிட்டிருந்தார். அதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

3. ‘நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறது’

இலங்கையின் பொருள் விளக்க ஆணையின் அடிப்படையில், ஒருவரை நியமிக்கும் ஆணை கொண்ட ஒருவர், அவரை நீக்குவதற்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்ற வாதத்தை, ஜி.எல். பீரிஸ் முன்வைத்திருந்தார்.

ஆனால், அரசமைப்பென்று வரும் போது, பதவியில் நியமிப்பதற்கெனத் தனியாகவும், பதவியிலிருந்து நீக்குவதற்கெனத் தனியாகவும் ஏற்பாடுகள் உள்ள நிலையில், அரசமைப்புக்கு இது பொருந்தாது என்றே, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சட்டம் மட்டுமா? 

இப்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை, சட்டரீதியான பிரச்சினையாகவே பிரதானமாக இருந்தாலும், அதையும் தாண்டிய பிரச்சினைகளும் உண்டு. உதாரணமாக, தன் மீதான கொலை முயற்சி தொடர்பாகவும் அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி விரிவாகத் தெரிவித்தார்.

ஆனால், தன்னைக் கொல்வதற்கு, அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய அரசாங்கமும் முயன்றது என, ஜனாதிபதி சிறிசேன, முன்னர் கூறிவந்தார்.

தேர்தலில் மஹிந்த வென்றிருந்தால், ஆறடி நிலத்துக்குள் தன்னைப் புதைத்திருப்பார்கள் என்று கூறினார். ஒரு பக்கமாக, கொலை முயற்சி தொடர்பில் நடவடிக்கை எடுக்காதோர் என ஜனாதிபதி குற்றஞ்சாட்டுவோர்; இன்னொரு பக்கமாகக் கொலை செய்ய முயன்றோர் என்று ஜனாதிபதி குற்றஞ்சாட்டுவோர் என்று இரு பிரிவினர் உள்ளனர். இவர்களில், கொலை செய்ய முயன்றோர் என்று ஜனாதிபதி தெரிவித்த பிரிவினரோடு இணைந்திருப்பது, சட்டத்தைத் தாண்டி, ஜனாதிபதி உண்மையிலேயே உண்மையைத் தான் கூறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இதுவரை காலமும், ஓரளவுக்கு நேர்மையானவர் என்று கருதப்பட்ட ஜனாதிபதி சிறிசேன, அதிகாரத்துக்கான வெறியுடன், “எதிரியின் (ரணிலின்) எதிரி (மஹிந்த) நண்பன்” என்ற நிலைக்குச் சென்றுவிட்டாரோ என்று கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது.

எதிர்பார்த்திருந்தார்களா? 

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கான எதிர்ப்பை, ஜனாதிபதி சிறிசேனவும் “பிரதமர்” மஹிந்த ராஜபக்‌ஷவும் எதிர்பார்த்திருந்தார்களா என்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வியாக இருக்கிறது.

ஏனென்றால், கொழும்பு, கொள்ளுப்பிட்டியில், நேற்று முன்தினம் (30) ஒன்றுகூடிய சனத்திரள் முழுவதும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானதாக இருந்திருக்கவில்லை.

அவர்களில் பலர், ரணிலை எதிர்த்தாலும், ஜனாதிபதியின் நடவடிக்கைக்கான எதிர்ப்பு அதைவிட அதிகமாக இருப்பதாலேயே கலந்துகொண்டார்கள். எனவே, இந்தளவு எதிர்ப்பை எதிர்பார்த்திருந்தார்களா என்பது சந்தேகமே.

என்றாலும், எதிர்ப்பு ஏற்படுமென்பதை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்கள். அப்படியானால், வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடித்த பின்னர், நேரடியாகப் பதவியைக் கைப்பற்றியிருக்கலாமே? எதற்காக இந்த பின்வாயில் வழியான பதவி?

அதற்கும் காரணமிருக்கிறது. வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு, குறைந்தது 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆனால், ஐ.ம.சு.கூவுக்கு, 95 உறுப்பினர்கள் தான் உள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு வாக்கும் கிடைக்கும்.

இருந்தும், வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு, மேலும் 16 வாக்குகள் தேவையே? ஆனால், எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பது கடினமானது.

எதிரணியில் இருக்கின்ற ஒரு கட்சிக்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வருதென்பது, மிகவும் அரிதாகவே நடக்கும்.

அரசாங்கமொன்றை அமைத்துவிட்டால், அமைச்சுப் பதவிகள், ஏனைய வசதிகள் என்று, ஏராளமானவற்றை வழங்கி, மற்றைய தரப்பைக் கவர்வது இலகுவானது. எனவே தான், மக்கள் எதிர்ப்பு வந்தாலும், அரசாங்கத்தை அமைப்பது தான், பெரும்பான்மையைப் பெற ஒரே வழி என, கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஐ.தே.க உறுப்பினர்கள் சிலரை, ஏற்கெனவே தங்கள் பக்கம் இழுந்திருந்தாலும் கூட, பெரும்பான்மையைப் பெறுவதற்குள் நாடாளுமன்றம் கூட்டப்படுமாக இருந்தால், இவர்கள் போட்ட கணக்கெல்லாம் பிழைத்துப் போகவே வாய்ப்புண்டு.

<

Share.
Leave A Reply

Exit mobile version