இலங்கையின் அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈடுபாடு அல்லது செயற்பாடுகள் உன்னிப்பான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் 15 நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பில் உள்ள 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ சர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் தனியாகவும் கூட்டாகவும் பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
பல்வேறு தகவல்களையும் அரசாங்கத் தரப்புக்கு பரிமாறிக் கொள்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, சர்வதேச சமூகம் பயன்படுத்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தை, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வெளியிட்டு வருகிறார். இது அவரது கூற்று அல்ல., சர்வதேச சமூகத்தின் கருத்து. சுமந்திரனை வைத்து கூற வைக்கப்பட்ட கருத்து.
தமது நாடுகள் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்றும் கடந்த 20ஆம் திகதி நடத்திய சந்திப்பின் போது கூட, 15 நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் கூறியிருந்தனர். சுமந்திரனே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார்.
அதுபோலவே, சர்வதேச சமூகம், இரா.சம்பந்தன் ஊடாக, மைத்திரி, மஹிந்த தரப்புகளுக்கு சில தகவல்களைப் பரிமாறியதாகவும் கூட அரசியல், ஊடகப் பரப்புகளில் பேச்சுக்கள் உள்ளன.
அதைவிட, தற்போதைய அரசியல் நெருக்கடியில், இருந்து கூட்டமைப்பும் விலகியிருக்க முடியாத ஒரு சூழலே உள்ளது.
இரண்டு தரப்புகளும் கிட்டத்தட்ட சமமான பலத்துடன் இருக்கும் நிலையில், கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் எடுக்கும் முடிவுகள் தான், அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது.
எனவே, தற்போதைய அரசியல் குழப்பநிலையில் கூட்டமைப்பின் மீதான உன்னிப்பான கவனம் அனைத்து தரப்புகளின் மத்தியிலும் அதிகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அதேவேளை, தற்போதைய அரசியல் குழப்பங்கள் சார்ந்து, சர்வதேச சமூகத்துடன் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற உறவுகளும், முன்னெடுத்து வரும் நகர்வுகளும், இரண்டு தரப்புகளுக்கும் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலாவது– மஹிந்த ராஜபக் ஷ –- மைத்திரி தரப்பு
இரண்டாவது– கூட்டமைப்புக்கு எதிரான போக்குடைய தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு.
இரா.சம்பந்தனுடன் மஹிந்த ராஜபக் ஷ நடத்திய பேச்சுக்கள் தோல்வி கண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு, மஹிந்த மைத்திரி தரப்புகளுக்கு கடும் எரிச்சலையே ஏற்படுத்தியது.
அதிலும், கடந்த வாரம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்குப் பின்னர் தான், வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திப்பதை விட்டு விட்டு மக்களைச் சந்திக்க முன்வருமாறு கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளை டுவிட்டரில் கோரியிருந்தார் நாமல் ராஜபக் ஷ.
“உங்களின் பொதுஜன முன்னணி கட்சியினர் யாரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விசாரியுங்கள்” என்று நாமலுக்கு கனேடியத் தூதுவர் பதிலடி கொடுக்க அந்த பதிவு தான் காரணம்.
சர்வதேச இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாசவும் கூட கோபமடைந்தார்.
நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும் சதித்திட்டத்துக்கு கூட்டமைப்பு துணை போவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இப்போது சர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டிய தேவை இல்லை என்றும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே, மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபய ராஜபக் ஷ, மஹிந்த சமரசிங்க, கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக் ஷ, உள்ளிட்ட பலரும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையீடு செய்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்- சர்வதேச இராஜதந்திரிகளுடனான கூட்டமைப்பின் சந்திப்பு, அரச தரப்புக்கு கடுமையான சீற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
மறுபக்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து அரசியல் செய்யும் தரப்புகளும் கூட இதனால் எரிச்சலடைந்திருக்கின்றன.
சர்வதேச சமூகத்துடனான கூட்டமைப்பின் உறவுகள் பலமடைந்திருப்பதன் எதிரொலியாக மாத்திரமன்றி, தாம் எதிர்பார்த்தவாறு கூட்டமைப்பு செயற்படவில்லை என்ற ஆதங்கத்திலும் கூட இந்த எதிர்ப்புக் கிளம்பியிருக்கலாம்.
தற்போதைய அரசியல் குழப்பத்தில், கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்பது, வடக்கில் உள்ள ஒரு தரப்பினரின் கருத்து. அவ்வாறு நடுநிலை வகிப்பதால், மஹிந்த ராஜபக் ஷ தப்பிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்பது இன்னொரு சாராரின் நிலைப்பாடு.
கூட்டமைப்பு, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
இது, கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்யும், குறுகிய காலத்தில் தேர்தல் வந்தால், தமக்கும் ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புள்ள- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்புகளை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.
அதேவேளை, பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்று தாம் கோருவது, மஹிந்த ராஜபக் ஷவைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறார்.
மஹிந்த தரப்புக்கு 96 உறுப்பினர்களும் ரணில் தரப்புக்கு 106 உறுப்பினர்களும் ஆதரவு இருப்பதாகவும், அதனைக் கொண்டே அவர்கள் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள முடியும் என்பதால், கூட்டமைப்பு இதில் தலையிட வேண்டியதில்லை என்றும் அவர் மிகப் பழைய புள்ளி விபரங்களோடு கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
அதற்குப் பிந்திய கட்சித் தாவல்கள், குதிரை பேரங்கள் பற்றி அறியாமல் அவர் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் போலத் தெரிகிறது.
பாராளுமன்றப் பெரும்பான்மைக்கு 113 ஆசனங்கள் தேவை என்பதைக் கூட, கருத்தில் கொள்ளாமல், இப்போதும், ஐ.தே.க.வே பெரிய கட்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இவரது கருத்துக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாசவின் பாணியிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இது பாராளுமன்றப் பெரும்பான்மை தொடர்பாக ஐ.தே.க.வுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உள்ள பிரச்சினை, இதில் கூட்டமைப்பு தலையிடாமல் இருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய குழப்பங்களால் நாடே குழம்பிப் போயிருக்கிறது. அப்படியான நிலையில், இதனை இரண்டு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினையாக காட்ட முனைகிறது சுதந்திரக் கட்சி. இதில் பங்கெடுக்கும் உரிமை தமிழர்களுக்கு இல்லை என்பது போல கூறியிருக்கிறார் அதன் செயலாளர்.
அதுபோன்றதொரு நிலையில் தான், தமிழர் தரப்பிலுள்ள சிலரும் இருக்கின்றனர், பேசுகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவுஸ்திரேலிய துணைத் தூதுவரைச் சந்தித்த பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை, தற்போதைய அரசியல் குழப்பங்கள் தொடர்பான அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது,
அவுஸ்திரேலிய தூதுவரிடம் தாம் முன்வைத்த சில விடயங்களை விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார். அதன்படி, தற்போதைய அரசியல் குழப்பத்தை தீர்க்க சில யோசனைகளையும் முன்வைத்திருக்கிறார்.
அதில் ஒன்று, மஹிந்த ராஜபக் ஷவையும், ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்து- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைத்து முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பது.
இது முடியாமல் போன – முடிந்து போன கதை. கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவப்பட்ட கூட்டு அரசாங்கத்தினால்- ஒருமித்துச் செயற்பட முடியாமல் தோல்வி கண்ட திட்டம் இது.
முன்னர் மைத்திரி- –ரணில் கூட்டு அரசாங்கத்தையும், அதற்கு முண்டு கொடுத்த கூட்டமைப்பையும் விமர்சித்த விக்கினேஸ்வரன், இப்போது, மஹிந்தவையும், ரணிலையும் இணைத்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் யோசனையை முன்வைத்திருப்பது ஆச்சரியம்.
அதைவிட, விக்கினேஸ்வரன் இன்னொரு விடயத்தையும் கூறியிருக்கிறார். ரணிலை பிரதமராக்கி, மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறும் அவர் முன்மொழிந்திருக்கிறார். இருவரையும் இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைத்து விட்டு, மஹிந்தவை எப்படி எதிர்க்கட்சித் தலைவராக்க முடியும்?
இது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட கருத்தா அல்லது சம்பந்தன் மீதுள்ள வெறுப்பினால்- அவரிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்ட கருத்தா என்று புரியவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொண்டாலே இப்போதைய பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால், அதனைச் செய்ய முடியாது என்று ஜனாதிபதி அடம்பிடிப்பது தான் பிரச்சினை என்பது கூட, முன்னாள் முதலமைச்சருக்குப் புரியவில்லை.
அதைவிட, ஒரு நீதியரசராக பிரச்சினையை தீர்க்க வழிமுறை கூறுவதாக சொல்லிக் கொண்டு அவர் கூறியிருக்கின்ற இன்னொரு கருத்து மிகவும் சர்ச்சைக்குரியது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள், குற்றங்கள் குறித்து விசாரிக்க அண்மையில் நியமிக்கப்பட்ட விசேட மேல்நீதிமன்றங்களின் செயற்பாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்த வேண்டும் என்பதே அது.
முன்னைய ஆட்சிக்கால கொடுமைகளுக்கு நீதி கோரும் ஒரு சமூகத்தின் சார்பில் அரசியலை நடத்திக் கொண்டே, முன்னைய ஆட்சிக்கால மீறல்கள், குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றங்களை செயலிழக்கச் செய்யும் யோசனையை முன்வைத்திருக்கிறார் விக்கினேஸ்வரன்.
இந்த மேல்நீதிமன்றங்களினால் தான், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் ஊடாக கோத்தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தினர் பலரும் தண்டிக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமே இந்த அவசர ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணம்.
கடந்த ஆட்சிக்கால முறைகேடுகள், மோசடிகள், குற்றங்களுக்கு விரைவாக நீதி வழங்கப்படவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீது இருந்தது. அந்தக் குற்றச்சாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்கூட கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில், இந்த வழக்குகளை நடத்தும் மேல் நீதிமன்றங்களை இடைநிறுத்தி வைக்குமாறு விக்கினேஸ்வரன் கூறியுள்ள யோசனை, யாருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டது என்ற கேள்வியையே எழுப்புகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நீதிமன்றங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டால், அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பவர்கள் அந்த விசாரணைகளை முன்னகர்த்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
விசேட மேல்நீதிமன்றங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதே ராஜபக் ஷவினரின் அடிப்படைத் திட்டம். அதனை அவர்கள், ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்தே கூறிவந்தனர்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற தில்லுமுல்லுகளும் தலையீடுகளும் இடமாற்றங்களும், நியமனங்களுமே, எதனை இலக்காகக் கொண்டு ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.
இப்படியான நிலையில், ஒரு முன்னாள் நீதியரசரே, விசேட மேல்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் யோசனையை முன்வைத்திருப்பது விந்தையானது.
போர்க்குற்ற விசாரணைகள் சார்ந்து இப்படி ஒரு யோசனையை சிங்கள அரசியல் தலைமைகள் முன்வைத்தால், அதனை தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்குமா? இதையேனும் அவர் சிந்திக்காமல் விட்டது ஆச்சரியமானது.
-கபில்