(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்மந்தனின் தவறுகள் – பகுதி-1)
1. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அல்லது அனுசரணை மகிந்தவுக்கும் தேவைப்படுகிறது. ரணிலுக்கும் தேவைப்படுகிறது.
இதற்காக அவர்கள் எப்படியும் கூட்டமைப்பைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இரண்டு தரப்புகளும் கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நம்பிக்கையளிக்கக் கூடிய வகையிலும் மதிக்கத்தக்கதாகவும் நடந்ததில்லை.
இந்த நெருக்கடிச் சூழலில் கூட தமது நலனைத் தவிர்த்து, (தங்களின் பதவிப் போட்டியைத் தவிர்த்து) நாட்டின் பிரச்சினைகள் குறித்தோ, தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் குறித்தோ சிந்திக்கவேயில்லை.
இந்த நிலையில் தமிழ்மக்களின் நிலைநின்று எந்த நிபந்தனையையும் (பேரத்தையும்) முன்வைக்காமல் சம்மந்தன் வாழாதிருக்கிறார். அதாவது அவை தமது நலனில் குறியாக உள்ளன. சம்மந்தனோ தன் மக்களின் நலனைக் குறித்து அந்தளவுக்கு அக்கறையோடிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அதையே முதன்மைப்படுத்திச் செயற்படுவார்.
2. கூட்டமைப்பு இதுவரையான வரலாற்றில் வடக்குக் கிழக்கு அரசியலையே மையப்படுத்தியது. இப்பொழுதும் அதையே செய்கிறது. பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேசிய விவகாரங்களில் அக்கறை கொள்வதில்லை.
ஆக 2010 இல் சரத் பொன்சேகாவுக்கும் 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியோடு இணைந்து ஆதரவளித்தது.
அதுவும் வடக்குக் கிழக்கு மக்களுடைய அரசியல் நிலை நின்றே. வடக்குக் கிழக்கு மக்களுக்கு விரோதமானவராகக் கருதப்படும் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க முடியாது என்ற நிலையில் மட்டுமே.
இதற்குக் கூறப்பட்ட நியாயம் ஜனநாயகத்தை வலுவாக்கம் செய்தல். மக்கள் மீதான அச்சுறுத்தலை இல்லாதொழித்தல். அரசியல் தீர்வுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்குதல் என்பதாகும். அதாவது தமிழ் மக்களின் நலன்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன என.
ஆனால், இவையெல்லாம் எதிர்பார்த்தவாறு நடக்கவில்லை. இந்த நிலையில் ரணில் தரப்புக்கு ஆதரவளிக்க முற்பட்டிருப்பது தவறன்றி வேறென்ன?
3. இதற்குக் கூறப்படும் நியாயம் நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேணும். குறைந்த பட்ச ஜனநாயகத்தையேனும் காப்பாற்ற வேணும் என்பது. அப்படியெனில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா? அவ்வாறென்றால், கடந்த காலத்தில் இந்த அரசியலமைப்பை அது எதிர்த்தது ஏன்? மட்டுமல்ல, இந்த அரசியலமைப்பு நாட்டுக்கோ மக்களுக்கோ உரியதுமல்ல.
இது அதிகாரத் தரப்புகளுக்குரியதே. இப்போது இதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் சம்மந்தனுக்கு ஏன் ஏற்படுகிறது?
அப்படியாக இருந்திருந்தால் 13 திருத்தச்சட்டத்தை அரசாங்கம் தொடர்ச்சியாகவே மீறி வந்திருக்கிறது. மாகாணத்தின் அதிகாரங்களில் மத்தி தலையிடுகிறது, கவர்னர் கட்டுப்படுத்துகிறார் என்று சொல்லப்பட்ட போதெல்லாம் ஏன் இவர்கள் நீதிமன்றத்தை நாடவில்லை?
4. இவ்வாறே இலங்கையின் ஜனநாயகம் என்பதும் மக்களுக்கானதாக இன்னும் அமையவில்லை. அது ஆளும் தரப்புகளின் நலனுடனேயே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்குரிய ஜனநாயகம் என்பது ஒரு மாயமானே. வெறும் தோற்ற மாயை மட்டுமே.
அப்படி ஜனநாயகம் இருந்திருக்குமாக இருந்தால் சிறுபான்மைச் சமூகத்தினர் எந்த வேளையிலும் அச்சத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்கள்.
படையாதிக்கத்தின் நெருக்கடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டியிருக்காது. அடிப்படிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதில் பின்தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். தற்போதைய அரசியல் நெருக்கடியே ஏற்பட்டிருக்காது.
மட்டுமல்ல, ஜனநாயகப் பேணுகையும் பாதுகாப்பும் என்பது அர்ப்பணிப்பு மிக்கதொரு ஒரு தொடர் செயற்பாடு. அது ஒரு தேசியப் பண்பாடு.
இந்த நிலையில் இதற்காக விசுவாசமாக ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணையாமல், சந்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி திருவிழாச் செய்தல் அல்ல. ஆனால், அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படியிருக்கும்போது நடைமுறையில் இல்லாத ஜனநாயகத்தை பேணுவதாகக் காட்டுவதற்கு முற்படுவது ஏமாற்றே.
ஆனால் இதை உருமறைப்புச் செய்து தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் கட்சிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எனச் சிறுபான்மையினரையும் பயன்படுத்த விளைகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாக (நியாயம்) தரப்பு நாட்டின் சுயாதிபத்தியம், சுயபொருளாதாரம், அந்நியத் தலையீடுகளுக்கான எதிர்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்று மகிந்த – மைத்திரி தமது நியாயங்களைச் சொல்கின்றன.
ஜனநாயக மேம்பாடு, சர்வதேச உறவு, அரசியலமைப்பு உறுதிப்பாடு போன்றவற்றை ரணில் – கூட்டமைப்பு உள்ளிட்டவை தமது நியாயமாக முன்வைக்கின்றன ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரணில் தரப்புச் சொல்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு தரப்பிலும் நியாயங்கள் இருப்பது போலத்தோன்றும். ஊன்றிக் கவனித்தால் இந்த நியாயத் தோற்றங்களுக்கு அடியில் அவற்றின் வர்க்க நலன் முகங்களின் சித்திரம் தெரியும்.
இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தெற்கின் ஸ்திரமற்ற – பலமற்ற அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் ஆதரவோ பங்களிப்போ தேவை. மறுப்பக்கத்தில் எதிர்க்கட்சித்தலைவரின் ஆதரவும். ஷ
இதை இன்னொரு விதமாகச் சொன்னால் சம்மந்தனின் தயவு கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலும் தேவை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் தேவை.
இந்தத் தேவையை நாடும் வரையில் சம்மந்தனுடைய கைகள் பலமானவையே. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பலமே. அது சமன் தமிழர் தப்புப் பலமாக உள்ளது எனலாம்.
சம்மந்தன் எடுக்கின்ற முடிவுகள் இன்று இலங்கையின் அரசியல் தலைவிதியை – மாற்றங்களை ஏற்படுத்தவல்லன. இலங்கைக்கு மட்டுமல்ல, தமிழ்மொழிச் சமூகங்களுக்கும் கூட. குறிப்பாக தமிழ்ச்சமூகத்தினருக்கு.
ஆனால், தன்னை அறியாமல் (தன்னுடைய பலத்தை அறிந்து கொள்ளாமல், அதற்கான துணிவைப் பெறாமல்) “அடிக்கிற காற்றுக்குப் பறக்கிற சருகாக” அல்லாடிக் கொண்டிருக்கிறார் சம்மந்தன். வயது, அனுவம், பொறுப்பு, பதவி, அதிகாரம் என அனைத்தும் இருந்தும் அவ்வளவும் பயனற்றவை என்றாகிக் கொண்டிருக்கின்றன.
எந்த நிலையிலும் விட்டுக்கொடுப்பற்ற முறையில் தமிழ்த்தேசிய நிலைப்பட்ட சுயாதிபத்தியத்தையே மைய இலக்காகக் கொண்டிருந்த கூட்டமைப்பு, கொழும்பு இன்ரஸ்ட்டுக்குள் சிக்கி தனது மையக் கோட்பாட்டைக் கைவிட்டுள்ளது.
2015 க்குப் பிறகு இத்தகைய போக்குக் கூட்டமைப்பினுள் வலுப்பெற்று வந்தாலும் இப்பொழுது அது முற்றாகவே ஐ.தே.க சார்பரசியலுக்குப் போய் விட்டது என்பதே மக்களில் பெருந்தொகுதியினருடைய அவதானிப்பாகும்.
இதனால்தான் 2015 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்புகளையெல்லாம் அது கைவிடவேண்டிதாக உள்ளது. அவற்றை அது பழுதாக்கிக் கொண்டிருக்கிறது.
– கருணாகரன்