நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது.

‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக, ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகளும் மாற்று அணியினரும் மேற்கொள்வது வழமை.

ஆனால், ஆட்சியின் பங்காளிகளாக இருப்பவர்களே, ஆட்சியை அழிப்பதற்குத் தலைமை ஏற்பது என்பது, அபத்தங்களின் உச்சம். அதுவும், ஆட்சித் தலைவனே அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபடுவது என்பது, வரலாற்றின் கரும்புள்ளி.

அதனை மைத்திரியின் ஒக்டோபர் 26, சதிப்புரட்சியின் மூலம் இலங்கை மக்கள் எதிர்கொண்டார்கள். அதனால், 50 நாள்களுக்கும் மேலாக அரசாங்கமற்ற நிலையில் நாடு தள்ளாடியது. 

நீதித்துறையின் ஆணையின்படி, அரசமைப்பு காப்பாற்றப்பட்டு, அரசாங்கம் மீள நிறுவப்பட்டாலும், அந்த அரசாங்கம் உடைந்த துண்டுகளால் ஒட்டப்பட்ட குடுவை போன்றிருந்தது.

அந்தக் குடுவையைக் கொண்டு, மீதமுள்ள ஆட்சிக் காலத்தை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்று ரணில் நினைத்தார். அதனால், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில், பாராமுகமாக அவர் இருந்திருக்கிறார்.

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில், பிரதம அமைச்சர் என்கிற அடிப்படைகளோடு ரணில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், தன்னை ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு, ஜனாதிபதி அழைக்கவில்லை  என்பதை, மக்களிடம் வெளிப்படுத்துவதற்கு அவருக்கு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தேவைப்பட்டிருக்கின்றன.

மைத்திரியின் அசட்டுத் தனங்களை, தனிப்பட்ட ரீதியில் ரணில் பொறுத்துக் கொள்வதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவரது விருப்பம்.

ஆனால், நாட்டின் இறைமையின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளை வகிக்கும் போது, அரசமைப்புக்கும், நிர்வாக நடைமுறைகளுக்கும் அப்பாலான சகிப்புத்தன்மை என்பது அவசியமற்ற ஒன்று. அதனை, ரணில் எந்தக் காரணத்துக்காகவும் கடைப்பிடிக்க முடியாது.

சதிப்புரட்சிக்குப் பின்னராக நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தன்னுடைய பொறுப்புகள் சார்ந்து சரியாகச் செயற்பட்டிருக்கவில்லை.

அரசமைப்பின் பிரகாரம், சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி வைத்துக் கொள்ள முடியாது என்கிற விடயம் இருக்கும் போது, மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்.

ஆனால், ஆட்சியை மீளப்பெறுவதற்காக எடுத்த நடவடிக்கைகளின் எந்தவொரு கட்டத்தையும் சட்டம், ஒழுங்கு அமைச்சினை மீளப்பெறும் விடயத்திலோ, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் தனக்குள்ள பொறுப்பை நிறைவேற்றும் கட்டங்களிலோ ரணில் நிறைவேற்றவில்லை.

எப்போதுமே ஆட்சிக்குள்ளேயோ, நிர்வாகக் கட்டமைப்புக்குள்ளேயோ இரட்டைத் தலைமை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே இருந்திருக்கின்றன.

எவ்வளவு இணக்கமாகச் செயற்பட்டாலும், ஏதாவது ஒரு விடயத்திலாவது முட்டல், மோதல் வரலாம். ஆனால், மைத்திரியும், ரணிலும் தங்களுக்கு அரசமைப்பு வழங்கியிருக்கின்ற அதிகாரங்களின் போக்கில் செயற்பட்டிருந்தாலே சிக்கல்களின் அளவைக் குறைத்திருக்கலாம்.

எப்போதுமே, தங்களை முட்டாள்களாக வெளிப்படுத்தும் நபர்கள் தவறிழைக்கும் போது, அது கவனம் பெறுவதைக் காட்டிலும், தங்களைப் புத்திசாலிகளாகப் காட்டும் நபர்கள் தவறிழைக்கும் போது, அது மக்களிடம் அதிக கவனம் பெறும்; விமர்சிக்கப்படும்.

மைத்திரியும், ரணிலும் தங்களை எப்படி மக்கள் முன், கடந்த சில காலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதன் பிரகாரம், அதன் எதிர்வினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்; மக்களின் கோபத்தைச் சந்திக்கிறார்கள்.

ராஜபக்‌ஷக்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, அந்த ஆட்சிக்குள் இருந்து வெளியேறி வந்த போது, மைத்திரியைச் சாமானிய மக்களின் நம்பிக்கையாக நாடு பார்த்தது. அதுதான், அவ்வளவு அடக்கு முறைகளுக்கு அப்பால் நின்று, அவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது.

ஆனால், இலங்கை என்றைக்குமே சுமூகமான கட்டங்களில் பயணிப்பதை விரும்புவதில்லை. தன்னுடைய இயல்பு என்பது, முரண்பாடுகள், குழப்பங்களின் வழியே என்பதை சிறிய காலத்துக்குள்ளேயே நிரூபித்துவிடும். மைத்திரி விடயத்திலும் அதுவே நிகழ்ந்தது.

அது, ராஜபக்‌ஷக்களின் காலத்தில் நாடு சந்தித்த பேரழிக்கு ஒப்பான நிலையை நோக்கி, நாட்டைத் தள்ளிவிட்டிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான அனைத்து உண்மைகளையும் அறியும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.

குறித்த தாக்குதல்கள் தொடர்பில் யார் யாரெல்லாம் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இருக்கின்றார்களோ, அவர்கள் எல்லோரும் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.

அதனைவிடுத்து, தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றாது, இன்னொருவர் மீது பொறுப்புகளைச் சுமத்திவிட்டுத் தப்பிக்க நினைப்பது என்பது, அயோக்கியத்தனமானது. அப்படியான கட்டத்திலேயே, மைத்திரி இன்றைக்கு இருக்கிறார்.

தன்னுடைய தவறுகளுக்காக மற்றவர்களைப் பகடைக்காய்களாக மாற்ற நினைக்கிறார். அவரின் நடவடிக்கைகளை வெளிப்படுத்த முயலும் மூலங்களை, எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்கிற ஒற்றைச் சிந்தனையோடு இன்றைக்கு செயற்படுகின்றார்.

அதன்போக்கிலேலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து விசாரித்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கலைத்துவிடுமாறு வலியுறுத்துகிறார்.

இன்றைக்கு அது, மீண்டும் அமைச்சரவையை ஸ்தம்பிக்கச் செய்து, அரசாங்கம் இல்லாத நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது.

6-6
மைத்திரி தன்னுடைய தவறுகள் தொடர்பில் என்றைக்குமே பொறுப்பேற்பதிலிருந்து தவறிவிட்டு, அசட்டுத்தனத்தோடு மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதில் குறியாகவே இருந்து வந்திருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர் வெளிப்படும் தேசிய பாதுகாப்புச் சபையின் நடைமுறைகள் குறித்த விடயங்கள், மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன.   

தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கான எந்தவொரு நிர்வாகப் பொறிமுறையோ, வழக்கமோ கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், அது மைத்திரியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் போக்கில், ஏனோதானோ என்று நடத்திருக்கின்ற என்பதும் அச்சமூட்டுகின்றன.

மைத்திரி தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பை, அரசியல் நிகழ்ச்சி நிரலை, தேசிய பாதுகாப்பு என்கிற மிக உயரிய விடயத்திலும் பொறுப்புணர்வின்றி கடைப்பிடித்திருக்கிறார் என்பதை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஒவ்வொருநாள் அமர்வும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தன்னுடைய தன்முனைப்பு (ஈகோ) மனநிலையால், நாட்டின் பாதுகாப்புக்கு உலை வைக்கப்பட்டிருக்கின்றது என்கிற விடயம் வெளிவர ஆரம்பித்ததும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களில் மீண்டும் தலையிட மைத்திரி முயல்கிறார்.

தெரிவுக்குழுவைக் கலைத்துவிடுமாறு சபாநாயகருக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்துவதும், தெரிவுக்குழு தன்னுடைய செயற்பாடுகளை கைவிடும் வரையில், அமைச்சரவையையும் நாடாளுமன்றத்தையும் கூட்டுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று மைத்திரி முரண்டுபிடித்துக் கொண்டிருப்பதும், ஒக்டோபர் சதிப்புரட்சிக்கு ஒப்பான ஒன்று.   

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், மற்றவர்களின் குற்றங்களை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் குறியாகவே இருப்பார்கள்.

அப்படியான நிலையிலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில், தற்போதைக்கு ரணில் இறங்கி வரப்போவதில்லை.

அது, அவரது அரசியல் நலன்கள் சார்ந்தது. ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் ஊடகங்களின் முன்னிலையில், ஆராய முற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அது, இறுதிவரை காக்கப்பட வேண்டியதுமாகும்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை முன்வைத்துத் தற்போது மைத்திரிக்கும் ரணிலுக்கும் எழுந்துள்ள பிரச்சினைகள், அடிப்படையில் தனிப்பட்ட அரசியல் நலன்கள் சார்ந்தவை; தேர்தல்களை இலக்காகக் கொண்டவை. அடுத்தடுத்த நாள்களில் அது, அரசாங்கத்துக்குள் இன்னும் இன்னும் இழுபறிகளை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு மகள் ஒருத்தி தன்னுடைய தந்தையைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதினாள். அதில், “…என்னுடைய அப்பாவை கோபப்படுத்திய அப்பப்பாவைப் பழிவாங்குவதற்காக, அப்பப்பாவின் வயலை, அப்பா தீ வைத்து எரித்தார். அப்பாவின் கோபம் பொல்லாதது.” என்று சிலாகித்திருந்தாள்.

அந்த மகளின் தந்தையிடம் அகப்பட்ட வயல் போல, எரிந்துகொண்டிருக்கின்றது நாடு. காக்க வேண்டியவர்களோ, எரிந்த வயலில் இருந்து தப்பிக்கும் எலிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

-புருஜோத்தமன் தங்கமயில்-

Share.
Leave A Reply

Exit mobile version