சில சமயங்களில் சில விசயங்களை நம்பவே கடிமான இருக்கும். ஆனால் என்ன செய்வது, அவற்றை நம்பித்தான் ஆகவேண்டும்.
ஏனென்றால் அவை மறுக்கவே முடியாத உண்மையாக இருப்பதால். இதற்கும் அப்பால் நம்முடைய விதி அப்படி.
அதாவது நம்மை அறியாமல் நாமே உருவாக்கி விடுகிற விதி. அல்லது தெரிந்து கொண்டே செய்துவிடுகிற வினைகள்.
இப்போது பாருங்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆகியோரின் கலவையாகவே இன்றைய இலங்கை ஜனாதிபதி இருக்கிறார் என்பதை. பிரபாகரன் 60 + ஜே.ஆர் 40 என்றோ பிரபாகரன் 50 + ஜே.ஆர் 50 எனவோ அல்லது பிரபாகரன் 40 + ஜே.ஆர் 60 என்றோ வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய மனதையும் அவதானத்தையும் பொறுத்தது. எப்படியிருந்தாலும் இந்தக் கலப்பின் விளைவே இன்றைய கோத்தபாய ராஜபக்ஸ.
இதில் உள்ள வேடிக்கையும் சிக்கலும் என்னவென்றால், இப்படியே கோத்தாவின் குதிரை ஓடுமென்றால் ஒரு கட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் கோத்தாவின் ஆதரவாளர்களாக மாறிவிடக்கூடிய சாத்தியங்களுண்டு. அதைப்போல ஜே.ஆரின் அபிமானிகள் கோத்தாவின் பக்கமாகச் சாயவும் வாய்ப்பிருக்கிறது.
இதை வரலாற்றின் விசித்திரம் என்பதா? அல்லது இதுதான் இலங்கையின் யதார்த்தம் என்பதா? அல்லது என்னதான் நாம் முயற்சித்தாலும் நமக்கு இப்படித்தான் வாய்க்கிறது என்பதா? அல்லது ஜே.ஆருக்கும் பிரபாகரனுக்கும் உள்ள வரலாற்றுக் கவர்ச்சியும் அதிகாரத்தை இவர்கள் இருவரும் பயன்படுத்திய விதமும் கோத்தாவை இப்படிச் சிந்திக்கத் தூண்டியதா?
ஆனால், எது எப்படியோ புதிய ஜனாதிபதி பழைய குதிரைகளிலேயே சவாரி செய்ய விரும்புகிறார். இதில் யாருக்கு வெற்றி? யாருக்குத் தோல்வி என்பது இன்னொரு கேள்வியும் வேடிக்கையுமாகும்.
அதற்கு முன்பு இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் உங்கள் தலைக்குள் கிறுகிறுக்கலாம்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு கோத்தபாயவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்போருக்கு இது சட்டெனப் புரிந்து விடும்.
இப்படி இருவேறு வழிமுறைகளின் ஊடாகப் பயணித்தாலும் அடிப்படையில் இருவரும் தமக்கான அதிகாரத்தைக் கட்டமைத்தவர்களே. இருவரும் தமது காலத்தில் அந்த அதிகாரத்தின் உச்சத்துக்குச் சென்று பார்த்தவர்கள்.
அதனுடைய ருஸியை ஒவ்வொன்றிலும் பரீட்சித்துக் கொண்டவர்கள். அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டே சில தசாப்தங்களாக தாம் விரும்பியவாறு ஆட்சி நடத்தியவர்கள்.
அதில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தவர்கள். எதிர்த்தரப்பை உடைத்துச் சிதைத்தவர்கள். அல்லது அவற்றை நலியச்செய்து தமக்குக் கீழ் படிமானமாகக் கொண்டு வந்தவர்கள்.
பின்னாளில் இதை ஓரளவுக்குச் செய்ய முயற்சித்தவர் மகிந்த ராஜபக்ஸ. ஆனாலும் அவரால் ஜே.ஆரைப்போலவும் பிரபாகரனைப்போலவும் செய்ய முடியவில்லை.
இதேவேளை ஜே.ஆரும் பிரபாகரனும் வெளியே தம்மீது ஒருவிதமான மாயக் கவர்ச்சியை உருவாக்கி வைத்திருந்தவர்கள். அதேயளவுக்கு யாராலும் எளிதில் கையாள முடியாதவர்களாகவுமிருந்தனர்.
அதே சமயத்தில் அதற்கு நிகரான ஒரு வகையான உள்ளச்சத்தையும் சனங்களிடையே உண்டாக்கியிருந்தவர்கள். தம்மை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியிருந்தவர்கள்.
இப்பொழுது கோத்தபாய ராஜபக்ஸவும் ஏறக்குறைய இதே தன்மைகளுடனேயே காணப்படுகிறார். ஒரு பக்கத்தில் தன்னை மிஞ்சி எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்.
இருந்தாலும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு கோத்தா, தனிப்பட்டதொரு நிகழ்ச்சி நிரலையே தனக்கென உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
அது அவரை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த பொதுஜன பெரமுனவுக்கோ ராஜபக்ஸ குடும்பத்தினருக்கோ அவ்வளவு உவப்பானதாக இருக்குதோ இல்லையோ, அதைப்பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படுவதாக இல்லை.
பதவியேற்றதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்டு வரும் பெரும்பாலான நடவடிக்கைகள் இதுவரையிலான அரசியல் முறைமைக்கு மாறானவை.
குறிப்பாக பொதுஜன பெரமுனவினரும் அதற்கு முன்னிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் கொண்டிராத நடைமுறைகளை கோத்தா நடைமுறைப்படுத்த விளைகிறார்.
ஏன் ராஜபக்ஸ குடும்பத்தினருடைய வழமைக்கு மாறான நடைமுறை என்று கூட இதைச் சொல்லலாம்.
எந்த நிர்வாக விடயங்களிலும் அரசியல் தலையீட்டை அனுமதிப்பதில்லை. எந்த நியமனங்களிலும் அரசியல் செல்வாக்கிற்கு இடமளிப்பதில்லை.
எல்லாவற்றையும் தகுதிவாய்ந்தவர்களைக் கொண்டே நிரப்புதல். நிபுணத்துவத்தின் அடிப்படையில், தகமைக்கு ஏற்பவே நியமனங்களைச் செய்தல்.
நாட்டை ஊழலற்ற முறையில் வைத்திருத்தல். சுகாதாரம், சுற்றாடல் பேணுகை போன்றவற்றில் உச்ச வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
உழைக்கும் திறனுடைய அத்தனைபேருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் என்று ஏராளம் (கவர்ச்சிகரமான) திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்த முயற்சிப்பது.
அரசியலில் எதையும் யாரும் அறிவித்து விடலாம். வாக்குறுதிகளைக் கூடக் கொடுக்கலாம். ஆனால், அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான வல்லமை – ஆளுமை – யும் நுட்பத்திறனும் தேவை. அதற்கான கட்டமைப்பும் ஒழுங்கும் அவசியம்.
இவை இல்லையென்றால் எத்தகைய திட்டங்களும் தோல்வியையே காணும். ஆனால், கோத்தபாய இதை மாற்றியமைக்க முற்படுகிறார் போலுள்ளது.
இதற்கு அவர் ஏற்கனவே வகித்திருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பதவியின் வழியாக உருவாக்கிக் கொண்ட அடையாளத்தைப் பயன்படுத்த விளைகிறார். அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பதவியும் அடையாளமும் சாதாரணமான ஒன்றல்ல. அது மிகமிக உச்சமானது. சற்று எச்சரிக்கை அடைய வைப்பது.
அது யுத்த காலம் என்பதால் என்ன ஏது என்று தெரியாத குழப்ப நிலையோடு இணைந்திருந்தது. அப்படியொரு குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தும் விதமாகவே அவர் அதைப் பயன்படுத்தினாரோ என்று இப்பொழுது சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது.
அன்று தனக்குக் கிடைத்திருந்த அந்தப் பதவியைக் கோத்தா பயன்படுத்திய விதத்தின் ஊடாக இன்றும் அவர் மீது ஒரு வித பயநிலை – உள்ளச்சநிலை காணப்படுகிறது.
இந்தப் பயம் அல்லது உள்ளச்சம் என்பது கண்டிப்பான ஒரு நிர்வாகியின் நடவடிக்கைகளைப் போன்றது.
இவ்வாறான ஒரு தன்மையையே பிரபாகரனும் கைக்கொண்டிருந்தார். இது ஒரு புறத்தில் விமர்சனத்தையும் மறுபுறத்தில் நிபந்தனையற்ற கவர்ச்சியையும் பெறக்கூடியது.
இவர்கள் இராணுவ வழியாக அரசியலை முன்னெடுப்பவர்கள் என்றபடியால் இத்தகைய தன்மை இருந்திருக்கலாம். அல்லது இராணுவ அடையாளத்தின் வழியாக நமது மூளை யோசிப்பதால் எமக்கு அப்படித் தோன்றலாம்.
ஆனால், இதை இவர்கள் தமக்கு வாய்ப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். கோத்தாவும் அப்படித்தான் பயன்படுத்த விளைகிறார்.
என்பதால்தான் ரணில் – மைத்திரி காலத்தில் செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பைப்பற்றிய கவலைகளை வெளியே காட்டிக் கொள்ளாமல், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற தோற்றத்தைக் கட்டமைத்திருக்கிறார் கோத்தா.
இன்று கோத்தா பெற்றிருக்கும் இடம் என்பது முன்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டிருந்த நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் என்ற தோற்றத்திற்குரியது.
சட்டபூர்வமாகவும் அரசியற் சாசன விதிமுறைகளின்படியும் அதிகார வரையறைகள் இருக்கலாம். ஆனால், வெளித்தோற்றத்தில் அவர் அந்த மட்டுப்பாடுகளைக் காட்டிக் கொள்ளவில்லை.
தன்னால் எதையும் செய்ய முடியும். எதையும் மாற்றியமைக்கக் கூடியவன் தான் என்ற மாதிரியான ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்.
பதவியேற்ற மிகச் சொற்ப காலத்திலேயே இதை அவர் மிக நுணுக்கமாகச் செய்து வெற்றியடைந்திருக்கிறார். இதற்கு அவருக்குக் கிடைத்த மிக உச்சமான மக்கள் ஆதரவும் ஒரு காரணமே.
இதை வைத்துக் கொண்டு தன்னை அவர் ஒரு சாகஸ நாயகனாக வளர்த்தெடுக்க முற்படுவது போலுள்ளது.
இலங்கையின் அரசியல் தலைவர்கள் யாரும் இதுவரையில் செய்திருக்காத, ஏன் பிரபாகரனே முயற்சிக்காத வகையில் அதிரடியாக கோத்தா அரிசிக்கடைக்குப் போகிறார்.
ஆஸ்பத்திரியில் வெளிநோயாளர் பிரிவிலுள்ள நோயாளர்களைப் போய்ச் சந்திக்கிறார். பஸ் நிலையத்தில் இறங்கி நிற்கிறார். துறைமுகத்துக்குச் செல்கிறார்.
இப்படித் திடீர் திடீரென பொதுமக்களிடங்களுக்குச் செல்வதும் பொது இடங்கள், பணியிடங்களுக்குப்போய் நிலைமைகளை அவதானிப்பதும் தனது திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும் என்பது அவருடைய நம்பிக்கை. அதாவது களத்தில் இறங்கி நிற்பது.
இதனால் எவரும் தவறுகளைச் செய்வதற்கு வாய்ப்பளிப்பதில்லை. ஜனாதிபதி எந்த நேரத்திலும் தங்களுடைய இடத்துக்கு வரலாம். எதையும் அவர் கண்காணிக்கலாம்.
கண்டறியலாம் என்ற ஒரு நிலையை – உள அச்சத்தை கோத்தா இயல்பாகவே உருவாக்குகிறார். மிக மோசமாகச் சீரழிந்து போயிருக்கும் இலங்கையின் நிர்வாகத்துறைக்கு இந்த மாதிரியான அணுகுமுறைகள் தவிர்க்கப்பட முடியாதவை.
ஆனால், இதை ஒரு பொறுப்புணர்த்தலாகவே நாம் வளர்த்தெடுப்பது பொருத்தமானது. ஜனாதிபதி தற்போது மேற்கொள்ளும் அதிரடி விஜயங்களின் வழியாக அச்சநிலையை உண்டாக்கி வென்றெடுக்கலாம். நடைமுறையாக உருவாக்கலாம் என்பது கேள்விக்குரியதே. ஆனால், வேறு வழியுமில்லை.
சனங்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இந்த மாதிரி தங்கள் பாடுகளை நேரில் வந்து பார்க்கக் கூடிய ஒரு ஆள் தலைமையில் இருக்க வேண்டும் என்பது பெரியதொரு விருப்பமே. அதை, அந்த தேவைக்கான உளவியலை கோத்தா மிகச் சரியாகப் புரிந்து கொண்டு நுட்பமாகக் காய்களை நகர்த்துகிறார்.
இதற்கு அவர் பதவியேற்ற காலத்திலிருந்து ஒரு விதமான கலவை முறையை பிரயோகிக்க முற்படுகிறார். ஒரு வகையில் இராணுவத்தனம். மறுவகையில் சிவில் தன்மை. அதாவது ஜனநாயக அரசியல் அடையாளம்.
ஒன்றை ஒன்று மேவி விடாமல், ஒன்றுக்குள் ஒன்று கரைந்து போகாமல் இரண்டையும் சம அளவில் நுட்பமாகக் கலந்து பிரயோகிப்பதற்கே கோத்தா முயற்சிக்கிறார். எனவேதான் கோத்தா செய்யும் மாற்றங்களும் நடவடிக்கைகளும் பெரும்பாலும் புலிகளின் பாணியிலானவை என்று கூற வேண்டியுள்ளது.
இது ஒரு தூயமுறையிலான நிர்வாக வடிவம். எல்லாவற்றிலும் தூயமுறையிலான அதிரடியான மாற்றங்களை உண்டாக்கும் ஒரு பொறி.
இந்தப் பொறிமுறையிலேயே கோத்தா தன்னுடைய ஆட்சிப் பணிகளைச் செய்து வருகிறார். எதிலும் அவரே நேரடியாகச் சம்மந்தப்படுகிறார். எதையும் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் அல்லது செல்வாக்கிற்குள் வைத்திருக்க முயற்சிக்கிறார். இதையே ஜே.ஆரும் செய்தார்.
வரலாற்றில் எதுவுமே புதியதல்ல. எல்லாமே தெரிந்தவையும் நடந்தவையும்தான். ஆனால், அவை புதிதாக நடக்கும்பொழுது நமக்குப் புதியதாகத் தெரிகின்றன என்பார்கள். அது உண்மைபோலவே உள்ளது.
நன்றி – எதிரொலி (அவுஸ்திரேலியா)