இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறுகிய கால இடைவெளிக்குள், இரண்டாவது தடவையாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கௌரவமான, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முதல் முறையாக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நரேந்திர மோடி, கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் அதனையே கூறியிருக்கிறார்.
இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாக, மோடி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதே ஊடகச் சந்திப்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி எதுவும் கூறவில்லை. இந்தியப் பிரதமரின் கருத்துக்கான பதிலையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
கடந்த நவம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபயவிடமும், இதே வேண்டுகோளை, பகிரங்கமாக விடுத்திருந்தார் மோடி. அவரும் கூட, அந்தச் சந்தர்ப்பத்தில் மௌனமாகத் தான் இருந்து விட்டுச் சென்றிருந்தார்.
எனினும், புதுடெல்லியில் இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு அளித்த தனிப்பட்ட செவ்விகளில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, புதுடெல்லி ஊடகங்களுக்கு அளித்த செவ்விகளில், அவ்வாறான கருத்தை வெளியிடாத போதும், 13 ஆவது திருத்தச்சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் தான் இருக்கிறது என்றும், ஆனால், வடக்கு மாகாண சபை தான் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது, வடக்கு மாகாண சபைக்கு அளிக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
அவ்வாறு எந்த நிதியும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று, விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த போதும், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும், பல தடவைகள் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், மஹிந்த அந்தக் குற்றச்சாட்டை, புதுடெல்லி வரைக்கும் கொண்டு சென்று, தமது பக்கத்தில் நியாயம் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார்.
13ஆவது திருத்தச்சட்டம், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது என்று அவர் கூறியிருப்பது உண்மையே என்றாலும், மாகாண சபைகள் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறி விட்டதாக மஹிந்த கூறியிருப்பது சரியானது தானா? 13 ஆவது திருத்தச்சட்டத்தில் காணி அதிகாரங்களும் பொலிஸ் அதிகாரங்களும் கூட, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த இரண்டு அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு எந்தவோர் அரசாங்கமும் வழங்கவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்று, எல்லாச் சிங்களத் தலைவர்களும் கூறி விட்டனர்.
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது” என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில், “இப்போதும் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் தான் இருக்கிறது; அதனை மாகாண சபைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது, பித்தலாட்டமாகவே உள்ளது.
ஆனால், மகிந்த ராஜபக்ஷ அதனை நேரடியாகக் கூறாமல், ஏற்கெனவே 13 ஆவது திருத்தம் நடைமுறையில் தான் இருக்கிறது என்று புரட்டிப் போட முனைந்திருக்கிறார்.
பிரதமர் மோடியும் சரி, அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் சரி, இலங்கைத் தலைவர்கள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் , இலங்கைத் தமிழர்களுக்கு கௌரவமான நீதியான, சமத்துவமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறி வந்திருக்கின்றனர்.
ஆனால், அதனை எந்தவொரு சிங்களத் தலைவரும் ஏற்றுக்கொண்டதும் இல்லை; நடைமுறைப்படுத்த முயன்றதும் இல்லை.
புதுடெல்லியில் பகிரங்கமாக, இந்தியப் பிரதமரின் வலியுறுத்தலுக்குச் சாதகமாகப் பதிலளித்தால், சிங்கள மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்றும், அதனால் பொதுத்தேர்தலில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காமல் போகும் என்றும் ஜனாதிபதியும் பிரதமரும் கருதிக் கொண்டிருக்கலாம் என்று சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள். தேர்தல் ஆதாயத்துக்காக அவ்வாறு நடந்து கொள்வது இயல்பு தான்.
ஆனால், சிங்களத் தலைவர்கள் அனைவரும், தமிழர் பிரச்சினை விடயத்தில், எப்போதுமே பிடிகொடுக்காமல் தான் இருந்து வருகிறார்கள்.
எனவே, மோடியின் வலியுறுத்தலை அவர்கள், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கருத முடியும்.
அதேவேளை, மோடி, தமிழர்களின் அபிலாசைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருப்பினும், அவருக்கு தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
மூத்த இந்திய ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பி.பி.சிக்கு அளித்திருந்த செவ்வி ஒன்றில், “இலங்கைத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வு பற்றி, இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தாலும், அவருக்கு தமிழர் பிரச்சினையில் அக்கறையில்லை.
அவ்வாறாக அக்கறை கொண்டிருந்தால், குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இலங்கைத் தமிழர்களையும் உள்ளடக்கி இருந்திருப்பார்” என, அவர் நியாயப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் மக்களின் மீது இந்தியாவுக்கோ, இந்தியப் பிரதமருக்கோ முழுமையான அக்கறை இருந்திருந்தால், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால், இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் இந்தியா எதிர்பார்ப்பதால், அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்க முடியாத நிலையில் புதுடெல்லி இருக்கிறது.
சீனத் தலையீடுகளில் இருந்து இலங்கையைத் தமது பக்கம் திருப்பிக் கொள்வதற்கு, இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது.
அதற்காகத் தான் 450 மில்லியன் டொலர் கடனுதவியையும் அறிவித்திருக்கிறது.
இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு, பொருளாதார உறவுகளைப் பேண இந்தியா விரும்புகின்ற நிலையில், கொழும்புக்கு அழுத்தங்களைக் கொடுக்க முயன்றால், அந்த உறவுகளில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பது புதுடெல்லியின் கணிப்பு.
இந்தியாவுடன் இருந்து வந்த இடைவெளியும் அவநம்பிக்கையும் ராஜபக்ஷவினரின் புதிய அரசாங்கத்துக்குச் சவாலாகவே இருந்து வந்தது.
சீன துரும்புச்சீட்டை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா முடிவுகளை எடுக்கத் தலைப்பட்டுள்ளதால், அது கொழும்புக்கு சாதகமானதாகக் காணப்படுகிறது. இந்தியாவின் இந்தப் பலவீனத்தை, கொழும்பு அரசாங்கமும் நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு நாடுகளும் தமது பலத்தை வைத்து முடிவுகளை எடுக்கவில்லை. பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களைள எடுத்திருக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணமும் அவ்வாறான பலவீனங்களைக் கடந்து செல்வதற்கான ஒன்றாகத் தான் கருதப்படுகிறது.
அதைவிட, தனது பயணத்தின் போது அவர், இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு மூன்று ஆண்டுகள் காலஅவகாசம் கோரியிருக்கிறார்.
இந்தியாவை வைத்து ஜப்பான், சீனா போன்ற நாடுகளிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலஅவகாசத்தை நீடித்துக் கொள்ள பிரதமர் மஹிந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, இந்திய, இலங்கை அரசுகள் இரண்டுக்கும் இப்போதைய நிலையில், தமிழர் பிரச்சினை முக்கியமல்ல. அதனை இரண்டு தலைவர்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.