சிட்னி :ஆஸ்திரேலியா 2 கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து, விலங்குகளிடம் சோதித்து வருகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக மனித குலத்திற்கு உள்ளது.சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை எட்டியுள்ளது.
47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள நிலையில், 9.5 லட்சம் மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான நாடுகளும் சமூக விலகல் மற்றும் ஊரடங்கை பிறப்பித்து, மக்களை வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தி வருகின்றன.
இருந்தும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் அதிகாரபூர்வமாக மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், மருத்துவ உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மகிழ்ச்சி தரும் செய்தியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் இனோவியோ மருந்து நிறுவனம் ஆகியவை தனித்தனியே உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்திரேலியா சோதிக்க தொடங்கியுள்ளது.
இவ்விரண்டு தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறதா, அவை மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் மதிப்பீடு செய்ய உள்ளது.
முன்னதாக கடந்த மாதம் அமெரிக்காவில் தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை பார்க்கப்பட்டது, ஆனால் அப்போது விலங்குகளுக்கு பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ferrets என்ற விலங்கு மூலம் மேற்கண்ட 2 தடுப்பூசிகள் பரிசோதனை செய்யப்பட உள்ளது.