நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக  இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும்  வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கும்,   கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா, அவர்களில் 27 பேர் விடுமுறைகளில் வீடு சென்றிருந்த நிலையில், அவ்வந்த பிரதேச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி வெலிசறை கடற்படைப்  முகாமுக்குள்  அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் 68 பேர் ஆவர்.

இதனிடையே, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் கணவரான, சீதுவை இராணுவ முகாமின் கெப்டன் தர அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த முகாம் முற்றாக முடக்கப்பட்டு அங்கு சுமார் 150 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை விட, விடுமுறைக்காக தனது வீட்டுக்கு சென்றிருந்த பனாகொட இராணுவ முகாமின் சிப்பாய் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.  குருணாகல் – அலவ்வை பகுதியை சேர்ந்த குறித்த சிப்பாய்க்கு குருணாகல் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது அது உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

இந்நிலையில் இன்று 8.45 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் மொத்தமாக 25 தொற்றாளர்கள் நாடளவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்தது.

இன்று மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் இருவர்  பூரண குனமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.  அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மேலும் 358 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.  அவர்கள்   நாடளாவிய ரீதியில் 31 வைத்தியசாலைகளில்  கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 19 சுகாதார மாவட்டங்களில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இன்று காலை 10.00 மணி வரையிலான தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி  அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 154 ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக  களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும்,  புத்தளத்தில் 37 பேரும் கம்பஹா மாவட்டத்தில்  34 பேரும்  இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும்.  கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 7 பேரும், குருணாகலையில் 12 பேரும்,  கேகாலையில் ஐவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தறை, கல்முனை,பதுளை, மொனராகலை ஆகிய சுகாதார மாவட்டங்களில் தலா இருவர் வீதம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அநுராதபுரம்  சுகாதார மாவட்டத்தில் நான்கு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.    காலி, மட்டக்களப்பு,  , வவுனியா, பொலன்னறுவை, மாத்தளை, ஆகிய  மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  இன்று காலை 10.00  மணி வரையான தரவுகள் படி, அடையாளம் காணப்பட்டவர்களில் 3 வெளிநட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்ட 41 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெலிசறை கடற்படை முகாமுக்குள் கண்டறியப்பட்ட  68 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version