மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த  யுவதியொருவரை, காப்பாற்ற முனைந்த நபர் நீரில் மூழ்கி மாயமானதுடன் குறித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றிய சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும் 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

” தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்து யுவதி ஒருவர் நீர்த்தேக்கத்துக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.

நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.

எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயுள்ளார். பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version