விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவராக இருந்தாலும் கூட அவர்  தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரை போராட்டத்தை நடத்தியவர் என்ற விதத்தில் அவர் மீது ஒரு மரியாதை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க எந்த எண்ணமும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் இன்று அவரும் அரசியலில் ஈடுபட்டிருப்பார்.

கே.பி இன்று என்ன செய்கின்றார், கருணா என்ன செய்கின்றார், பிள்ளையான் என்ன செய்கின்றார்? இவர்கள் அனைவரும் இன்றைய அரசியல் தலைவர்களின் தோழில் கைபோட்டு அரசியல் செய்வதை நாம் பார்க்கின்றோம். பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று ராஜபக்ஷக்களுடன் அரசியல் செய்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்று அரசியலில் மிகப்பெரிய சக்தியாக  இருந்திருப்பார். அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபராக இருந்திருப்பார். ஆகவே அவர் கொல்லப்பட்டதே சரியென நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சர்வதேசத்துடன் தொடர்புகள் இருந்தது. அவர்களுக்கான ஆயுத மற்றும்  நிதி உதவிகள் சர்வதேச நாடுகளின் மூலமாக கிடைத்தது.

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை. இந்தியாவிற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. இந்தியாவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டது, அவர்களின் பிரதமரும் கொல்லப்பட்டார். இந்தியா கூறியதை விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.

ஆகவே இந்தியா யுத்த நிறுத்த  விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு  உதவிகளை செய்தனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

யுத்தத்தை யாராலும் வெற்றிகொள்ள முடித்து, இதனால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலையில் இருந்தனர். சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாக பேசி சமாதான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தினர். ஆனால் யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version