இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஒசான் வெடகே பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.

ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு வெளியில் இவ்வாறான சான்றுகள் முதன்முறையாக இலங்கையிலேயே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மிருகங்களின் எலும்புகளில் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி, மிருகங்களை வேட்டையாடியமைக்கான ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பாயங்கல பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

1986ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த ஆய்வின் முதலாவது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், அந்த காலப் பகுதியில் போதிய தொழில்நுட்பம் காணப்படாமையினால் மீண்டும் அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவின் கீழ் தம் தலைமையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக ஒசான் வெடகே கூறினார்.

அகழ்வுப் பணிகளின் போது பெற்றுகொள்ளப்பட்ட தொல்பொருள்கள் ஆய்விற்காக ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் போதுமான ஆய்வு வசதிகள் இல்லாமையை அடுத்தே, இந்த தொல்பொருட்கள் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒசான் வெடகே கூறினார்.

மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையமானது, மனிதப் பரிணாம வளர்ச்சி தொடர்பிலான ஆய்வுகளை செய்யும் தலைசிறந்த ஆராய்ச்சி நிலையம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஆய்வுகளின் ஊடாகவே பல தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பழமை அடையாளங்கள் குறித்து தகவல் அறிய முடிந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மிருகங்களின் எலும்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட வில் மற்றும் அம்புகள் இவற்றில் காணப்பட்டதாக மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க யுகத்திலிருந்து மனிதர்கள் வெளியில் வருகை தந்த பின்னர் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகள் இவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சுமார் 48,000 வருடங்களுக்கு முன்னர் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு மிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளமை இந்த ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெடகே கூறினார்.

குறிப்பாக ஈர வலயக் காடுகள் (மழைக் காடுகள்) அமைந்துள்ள பகுதிகளிலேயே ஆதிவாசிகள் இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்துள்ளதாக நம்ப முடிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆயுதங்களின் ஊடாக அந்த மனிதர்கள் சிறு மற்றும் மத்திய அளவிலான மிருகங்களையே வேட்டையாடியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பாக அணில், குரங்கு போன்ற மிருகங்களே இவர்களால் வேட்டையாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

அணில் மற்றும் குரங்கு போன்ற மிருகங்கள் மிக வேகமாக நகர்வதால் அவற்றை இலகுவாக வேட்டையாட முடியாது என்பதை கண்டறிந்துள்ள அந்த மக்கள், அம்பு போன்ற கூர்மையான ஆயுதங்களை தயாரித்துள்ளதாக நம்ப முடிகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த அம்பானது, மிருகமொன்றின் எலும்பை பயன்படுத்தி முதலில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மிருகங்களின் எலும்புகளை மிகக் கூர்மையாக்கி அவற்றின் ஊடாகவே இந்த வேட்டையாடும் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் வேறொரு பகுதியில் மிருகங்களின் எலும்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடிய மிக பழமையாக சந்தர்ப்பம் இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒசான் வெடகே கூறினார்.

இலங்கையில் இயற்கையுடன் இணைந்ததாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் இதன் ஊடாக கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையில், ஈர வலயப் பகுதிகளில் தொடர்ச்சியான மழைப் பொழிவு வீழ்ச்சி, மிருகங்களின் நடமாட்டம் குறைவு, அடர்ந்த காடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த மக்கள் ஈர வலயப் பகுதிகளில் வாழ்வதற்கு பெரிதும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என அவர் கூறுகிறார்.

எனினும், நாட்டின் மத்தியப் பகுதிக்கு இந்த மக்கள் வருகை தந்துள்ளமையினால் வாழ்க்கை கட்டாயங்கள் காரணமாகவே, இவ்வாறான ஆயுதங்களை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் குறித்த பகுதியுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் அவர்கள் இவ்வாறான ஆயுதங்களை செய்து, வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கை என்ன?

பல வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் தற்போதே கிடைக்க ஆரம்பித்துள்ளதாக ஒசான் வெடகே தெரிவிக்கிறார்.

இதுவொரு ஆரம்பம் மாத்திரமே என கூறிய அவர், எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் மேலும் பல ஆய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முடியுமானளவு ஆய்வுகளை நடத்த வேண்டும் எனவும், அதனூடாக பல பெறுபேறுகளை பெற்றுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

உதாரணமாக ஐந்து வருடங்கள் அகழ்வுகள் நடக்குமானால், சுமார் 15 வருடங்கள் அதனை ஆய்வு செய்தற்குத் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தமது அர்ப்பணிப்பினால் பெறுபேறுகளை இயலுமான அளவு விரைவில் பெற்றுகொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த ஆய்வின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கும் பெறுமதி என்ன?

ஆதி மனிதர்கள் ஈர வலய காடுகளுக்குள் ஒன்றிணைந்து வாழ்ந்ததன் ஊடாக மிருகங்களின் எலும்புகளைக் கொண்டு ஆயுதங்கள் தயாரித்தமை தொடர்பிலான சான்றுகள் முதன் முறையாக இலங்கையில் கிடைத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த சந்தர்ப்பம் என ஒசான் வெடகே தெரிவிக்கின்றார்.

அத்துடன், இலங்கையில் ஆதி மனிதர் சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போது உறுதியாகியுள்ளமையும் பெறுமதியான ஒரு விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஆய்விற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பத்மலால் உள்ளிட்ட குழுவினர் ஆரம்பம் முதல் செயற்பட்டிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version