விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாகி பின்னர் தமிழ் மக்களின் துரோகியாகி அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகி தற்போது கோத்தபாய ராஜபக்ச அரசின் அரசியல்வாதியாகியுள்ள கேணல் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட பிரசார மேடையில் வீசிய”குண்டு’ ஒன்று இன்று நாடு முழுவதும் ஒவ்வொரு வடிவத்திலும் வெடித்துக் கொண்டிருக்கின்றது.
நாடு முழுவதும் ,அனைத்து அரசியல் தலைவர்களும் இன்று கருணாவின் பெயரைக் கூறிக் கொண்டிருப்பதற்கு அண்மைய வாரமொன்றில் அம்பாறை மத்தியமுகாம் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட கருணா அம்மான் போட்ட ” கருணா அம்மான் கொரோனைவை விடக் கொடியவன் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் என்னைப்பற்றி அறிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவினால் 9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.ஆனால் நாங்கள் ஒரு இரவில் ஆனையிறவில் 2000 முதல் 3 000 ஆமியைக் கொன்றோம்.எனவே என்னை கொரோனாவை விடவும் கொடியவன் என அவர் சரியாகத்தான் சொல்லியுள்ளார்.
அது மாதிரி ”ஜெயசிக்குறு”வில் எத்தனை ஆயிரம், கிளிநொச்சியில் எத்தனை ஆயிரம் ஆமியைக் கொன்றோம் என்று அவருக்கு தெரியாது” என்ற குண்டுதான் காரணமாகியுள்ளது.
கருணாவை கைது செய்,சிறையிலடை என்று ஒருபக்கம் எதிர்க்கட்சிகள்,பௌத்த அமைப்புக்களும் மறுபக்கம் புலிகளை தோற்கடிக்க கருணா செய்த உதவியை மறக்கக்கூடாது,
கருணாவின் குற்றங்கள் எப்பவோ மன்னிக்கப்பட்டு விட்டன என்று அரச தரப்பினரும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்க, கடந்த வியாழக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவு கருணாவை கொழும்புக்கு அழைத்து 7 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
அதேவேளை கருணாவுக்கு எதிராக நீதிமன்றிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏதோ ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கருணாவே கொன்றது போன்றும் அதனை அவர் ஒப்புதல் வாக்குமூலம் போன்றே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறியது போன்றும் தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆனால் கருணா ” நாங்கள் ஒரு இரவில் ஆனையிறவில் 2000 முதல் 3000ஆமியைக் கொன்றோம்”என்று தன் அடிமனதில் இப்போதும் இருக்கும் ”புலிப்போராளி” உணர்வுடனேயே ”நாங்கள்” என்ற வார்த்தையுடன் அதனைக் கூறியுள்ளார். எனினும் இதனைக்கூறுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.
இதில் கருணா கூறும் ” நாங்கள் ஒரு இரவில் ஆனையிறவில் 2000 முதல் 3000 ஆயிரம் ஆமியைக் கொன்றோம்” என்பதன் மூலம் ஆனையிறவு இராணுவத் தளம் மீதான தாக்குதலில் தான் பெரும் பங்கு வகிக்கவில்லையென்பதனை கருணாவே கூறியுள்ளார்.
இல்லாது விட்டால் ” நான் ஒரு இரவில் ஆனையிறவில் 2000 முதல் 3000 ஆமியைக் கொன்றேன் ” என்றுதான் கருணா கூறியிருப்பார்.
எனவே தற்போது ஆனையிறவு இராணுவத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் ”ஓயாத அலைகள் 3 ” தாக்குதல் தொடர்பிலான கவனம் மீண்டும் எழுந்துள்ளதனால் ”ஓயாத அலைகள் 3” தாக்குதல் குறித்த மீள் பார்வை ஒன்று தேவைப்படுகின்றது. அதனைப்பார்ப்போம் .
ஆனையிறவு இராணுவத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் ”ஓயாத அலைகள் 3” தாக்குதல் 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடுக்கப்பட்டது .
இது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் 3 நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம்இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பேஇராணுவத்தினரால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுச் சிங்கள குடியேற்றமாக்கப்பட்ட சில நிலப்பரப்புக்களையும் கைப்பற்றும் நோக்கோடு விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்டது.
”ஓயாத அலைகள் 3” முதலில் ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியது. விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான கேணல் ஜெயத்தின் தலைமையில் விடுதலைப்புலிகளின் படையணிகள் சில மணி நேர சண்டையின் பின்னர் இராணுவத்திடமிருந்து ஒட்டுசுட்டானை கைப்பற்றின.
இதே வேளை கேணல் சொர்ணத்தின் தலைமையிலான பிறிதொரு படையணி நெடுங்கேணியை கைப்பற்றிது.
இந்தத் தாக்குதல்கள் புலிகளினால் தொடுக்கப்பட்டிருந்த பொழுது விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா மன்னார் பகுதியில் சில படையணிகளுடன் தலைவர் பிரபாகரனின் உத்தரவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
வன்னியிலுள்ள இராணுவத்தினர் மீதான தமது தாக்குதல்களின்போது அவர்களுக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து கிடைக்கும் இராணுவ உதவிகளைத் தடுப்பதற்காகவே தலைவரினால் கருணா மன்னாருக்கு அனுப்பப்பட்டு அடுத்த உத்தரவுக்காக காத்திருந்தார்.
இதேவேளை கேணல் தீபனின் தலைமையில் சென்ற புலிகளின் படையணிகள் கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன் குளம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய படி புளியங்குளம் நோக்கி முன்னேறின.
கேணல் தீபனின் தலைமையிலான படையணிகளும், நெடுங்கேணியில் இருந்து ஒலுமடுவை கைப்பற்றிய படி முன்னேறி வந்த படையணிகளும் இணைந்து புளியங்குளத்தை கைப்பற்றின.
இதற்கு முன்னர் கேணல் சொர்ணத்தின் வழிநடத்தலில் மணலாற்றில் இருந்த ஒதிய மலைப் பகுதியும் அதை அண்டிய பல பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன .
”ஓயாத அலைகள் 3” இன் இரண்டாம் கட்டமாக கேணல் ஜெயத்தின் தலைமையிலான படையணிகள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
”ஓயாத அலைகள் 3” இன் மூன்றாம் கட்டமாக ஆனையிறவுப் பெருந் தளத்தின் மீதான முற்றுகைச் சமர் அமைந்தது.
இந்த முற்றுகைச் சமரின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவின் தலைமையிலான படையணிகள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு போன்ற பகுதிகளை கைப்பற்றின.
ஆனையிறவுத் தளத்திற்கு வன்னியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட தளங்களாகிய பரந்தன், உமையாள்புரம் போன்ற பகுதிகளை கேணல் தீபன் தலைமையிலான படையணிகள் கைப்பற்றின.
ஓயாத அலைகள் 3 என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்கு முனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது.
மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக் கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.
ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டபோது குடாரப்பு தரையிறக்கத்துக்கான மிகவும் ஆபத்தான, வெற்றி பெறும் சாத்தியம் குறைவான திட்டத்தை கேணல் பால்ராஜ் முன்வைத்து இதற்கு பிரபாகரனின் அனுமதியை கோரினார்.
குடாரப்பு தரையிறக்கம் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை.
ஆனாலும், தனது திட்டத்தில் பிடிவாதமாகவிருந்த கேணல் பால்ராஜ் இத்திட்டத்தின் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்ள முடியுமெனக் கூறியதுடன் அதற்காக 1200 பேரைக் கொண்ட சிறப்பு படையணியொன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தாக்குதலை இராணுவம் எதிர்பார்த்திருக்காதென்பதால் இத்தரையிறக்கம் வெற்றியளிக்குமெனவும் வாதிட்டார்.
கேணல் பால்ராஜின் போரியல் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் ஒருவேளை இத்தரையிறக்கம் தோல்வி கண்டுவிட்டால் அதனால் ஏற்படும் அழிவுகளைப் பற்றி பால்ராஜுக்கு தெளிவுபடுத்தினார்.
குடாரப்பில் 1200 பேரைக் கொண்ட சிறப்பு படையணி தரையிறக்கப்பட்டால் அவர்கள் திரும்பி வரவேண்டுமானால் ஆனையிறவை வெற்றி கொண்டு ஏ9 வீதியூடாகவே வரவேண்டும். ஆனையிறவை வெற்றிகொள்ள முடியாவிட்டால் மீண்டும் கடல்வழியாக திரும்பி வருவதற்கு வாய்ப்புகளில்லை.
ஏனெனில், ஆனையிறவு படைத்தளம் மூன்று புறம் கடல்நீரேரியால் சூழப்பட்டுள்ளது. புலிகளின் தரையிறக்கத்தை எதிர்பார்க்காத கடற்படை புலிகளின் சிறப்பு படையணி தரையிறங்கியவுடன் கடல்வழியூடான புலிகளின் தொடர்புகளை துண்டிக்க முற்படும்.
அவ்வாறான நிலையில் புலிகளின் தரையிறக்கத் திட்டமோ அல்லது ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலோ தோல்வியடைந்தால் தரையிறங்கிய அணி திரும்பிவருவதற்கு ஏ9 வீதியை தவிர வேறுவழியில்லை.
அதனால் தான் “1200 பேருடன் நீங்கள் குடாரப்பில் தரையிறங்கினால் ஆனையிறவு தளத்தை நாம் வெற்றிகொண்டால் மட்டுமே நீங்கள் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் நாம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என கேணல் பால்ராஜுக்கு கூறிய பிரபாகரன் குடாரப்பு தரையிறக்கத்துக்கு அனுமதி வழங்கினார்.
கேணல் பால்ராஜ்
26-03-2000 ஆம் ஆண்டு அதிகாலையில் 1200 விடுதலைப்புலிகளைக் கொண்ட சிறப்புப் படையணி கேணல் பால்ராஜ் தலைமையில் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் அதிரடியாகத் தரையிறங்கியது.
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையின் வழிகாட்டலில் கடற்புலிகளின் அதிவேகப் படகுகளான `”குருவி”கள் மூலம் இந்த சிறப்பு படையணி வெற்றிகரமாகத் தரையிறங்கி நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டி வீதியைக் குறுக்கறுத்து நிலை கொண்டது.
இதேநேரம் 26.03.2000 அன்று இரவு விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியொன்று மெதுவாக நகர்ந்து முதல் நாளே கடல்வழியாக இராணுவத்தின் பகுதிக்குள் ஊடுருவி விட்டிருந்தது.
அந்தக் கரும்புலி அணியில் ஆண் போராளிகளும் பெண் போராளிகளும் இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்தனர்.
அப்போது ஆனையிறவு இராணுவத்தினரின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ் மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது.
இவர்கள் நகர்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்து கொண்டிருந்தன.
குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான்.
பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதி. எந்த நேரமும் இராணுவத்தோடு சண்டை மூளக்கூடும். இயன்ற வரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்க வேண்டும்.
இலக்கு வரை வெற்றிகரமாக, சலனமின்றி, இராணுவம் அறியாவண்ணம் நகர வேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொரு பேர் இருந்தார்கள்.
குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள்.
அதுவும் தற்போது அணியை வழி நடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தார் .
எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள்.
இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்த நிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தூரத்தில் கரும்புலி அணியினர் இருக்கும்போது இராணுவத்தினர் சண்டையைத் தொடக்கி விடுகிறார்கள்.
இதில் அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி வீரச்சாவடைகிறார்.
மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் இராணுவத்தினர் பின்வாங்குகின்றனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்தது.
ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தார் . பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர்.
ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது.
அந்த ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.
இந்நிலையில் தரையிறங்கி நிலை கொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.
அவருக்குத் துணையாக துணைத் தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமை தாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.
வெற்றிகரமாக தரையிறங்கிய விடுதலைப்புலிகள் அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமரை தொடங்கினர்.
கேணல் பால்ராஜ் தலைமையில் தரையிறங்கிய சிறப்பு படையணியுடன் இராணுவம் 34நாட்களாக போரிட்டது.
இராணுவத்தின் யுத்தடாங்கிகளாலும் பறக்கும் டாங்கிகளென வர்ணிக்கப்படும் எம்.ஐ.24ரக யுத்தக் ஹெலிகளாலும் கேணல் பால்ராஜின் படையணியை நிலைகுலையவோ அல்லது பின்னகர்த்தவோ முடியவில்லை.
மாறாக புலிகளின் தாக்குதலில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. சிறப்பு படையணிகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.
ஆனையிறவு பெருந்தளத்தை விடுதலைப்புலிகளின் ஏனைய படையணிகள் சுற்றிவளைத்து தாக்கிக்கொண்டிருக்க, அத்தளத்தின் இதயப்பகுதிக்குள் வெறும் 1200 போராளிகளுடன் தரையிறங்கி இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய கேணல் பால்ராஜின் படைநகர்த்தல் மூலம் வன்னிக்கும் யாழ். குடாநாட்டுக்குமிடையில் பலமைல் விஸ்தீரணத்தில் பரந்து விரிந்துகிடந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் தகர்த்தழிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகை இராணுவ தளபாடங்கள் புலிகள் வசமாகின. ஆனையிறவு படைத்தளத்தில் புலிக்கொடியை தாக்குதல் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட தளபதி கேணல் பானு ஏற்றினார்.
தளபதி கேணல் பானு
இதன் மூலம் ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் பெரியளவில் சம்பந்தம் இல்லை என்பதனைக் கண்டு கொள்ள முடியும்.
அத்துடன் ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோக்களிலோ அல்லது புகைப்படங்களிலோ அனைத்து தளபதிகளும் காணப்படுகின்ற போதும் கருணாவைக் காண முடியாது.
எனவே கருணா காரைதீவு தவிசாளருக்கு வீராப்பு பேசப்போய் ஆனையிறவுக் கதையை நடிகர் வடிவேல் பாணியில் ஏதோ ”பலோ அப்பில்” அவிழ்த்துவிட அரசியல் பிரசாரத்துக்கு எதுவுமே கிடைக்காது காய்ந்து போயிருந்த தென்னிலங்கை கட்சிகள் வயிற்றில் இது பால் வார்த்ததுபோலமையேவே இப்போது கருணாவின் ஆனையிறவுக் குண்டு நாடு முழுவதும் வெடித்துக் கொண்டிருக்கின்றது.
-தாயகன்-