பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது பிக் பாஸ் சீசன் 4.

கொரோனா பொது முடக்கத்தால் வழக்கத்தை காட்டிலும் இரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பரபரப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் போகும் இந்த நிகழ்ச்சி அறிவுப்பு வர தொடங்கியதிலிருந்து போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கின. பல்வேறு இணையதள சேனல்கள் சில நடிகர்களின் பெயர்களைப் பங்கேற்பாளர்களாக அறிவித்திருந்தன ஆனால் அது எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இன்று தொடங்கிய பிக் பாஸ் சீசன் 4-ன் தொடக்க நிகழ்ச்சியில் முதலில் கோவிட்-19 தொற்று காலத்தின் முன்கள பணியாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்களுடன் உரையாற்றினார் கமல் ஹாசன்.

வழக்கமாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பார்வையாளர்களுடன் சேர்ந்து போட்டியாளர்களிடம் உரையாடுவார் கமல் ஹாசன். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் டிஜிட்டல் முறையில் பங்கு பெறுவார்கள் என்று கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.

போட்டியாளர்கள் யார்?

போட்டியாளர்கள் யார்யார் என்று பொதுவாக சமூக வலைதளங்களில் வைரலான பட்டியல் அனைத்திலும் ஏறத்தாழ நடிகர் ரியோவின் பெயர் இருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக முதல் போட்டியாளராக ரியோவே மேடையில் கமல் ஹாசனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அடுத்த போட்டியாளராக நடிகை ஷனம் ஷெட்டி அறிவிக்கப்பட்டார். ஆனால் பெரிதும் பேசப்படாத போட்டியாளராக நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சின்னத்திரை நடிகை ஷிவானி, நடிகர் ஜித்தன் ரமேஷ், `பாடி பில்டர்` பாலா, பாடகர் வேல் முருகன் ஆகியோரும் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version