மெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது.

இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான்.

இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார்.

சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன?

தமிழ் தலைவர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து பிரபல எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான குணா கவியழகன் முக்கியமான சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். அவரது கருத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.

“சம்பந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். பொறுப்புக் கூறல் விடயத்தில் இனிமேலும் அமெரிக்காவிடம் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதனால் என்ற கேள்வி இந்த இடத்தில் அனைவரிடமும் எழுகின்றது.

ஏனெனில் பூகோள அரசியலைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கியமான காலகட்டம். புதிய கதவுகளைத் திறப்பதோ; பூட்டுவதோ என்ற காலகட்டம்.

இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தன் வெளியிடக்கூடிய அறிக்கைகள் – பேட்டிகள் – தெரிவிக்கக்கூடிய கருத்துகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு அறிக்கை வெளியிட வேண்டிய தேவை சம்பந்தனுக்கு எதற்காக ஏற்பட்டது?

பொம்பியோவின் இந்த வருகையின்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், “அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாங்கள் வரமாட்டோம்” என்ற ஒரு கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த போதும் அதனை முடிந்தளவிற்கு தாமதித்து, 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து தங்களுடைய ராஜபக்ஷ வம்சத்தின் ஆட்சியைப் பலப்படுத்திய ஒரு பின்னணியிலேயே அமெரிக்க இராஜாங்க அமைச்சரை அவர்கள் அழைத்திருந்தார்கள்.

இதுவும் ஒரு முக்கியமான இராஜேந்திர நிகழ்ச்சி. தங்களை சட்டரீதியாக – அரியலமைப்பு ரீதியாகப் பலப்படுத்தி கொண்டுள்ள ஒரு பின்னணியிலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வருகையை அவர்கள் எதிர் கொண்டார்கள்.

சிங்கள – பௌத்த மக்களுடைய தலைமைத்துவமாக அவர்கள் இருப்பதுதான் உள்நாட்டு ரீதியாக அவர்களுடைய பலம்.

அதாவது சிங்கள பௌத்த மக்களுடைய உணர்வுகளை அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். அதுதான் அவர்களுடைய பலம். இது உள்நாட்டில் அவர்களுடைய பலம். அவருடைய சர்வதேச பலம் சீனா.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது இலங்கையின் பிரதான கொலையாளி நாடாக இருந்தது ஜப்பான் தான்.

ஜப்பான் – இலங்கை உறவு மிகவும் பலமானது. ஜப்பான் கொடுக்கக்கூடிய உதவிகளை கொண்டுதான் இலங்கை தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய நிலைமை காணப்பட்டது.

இருந்தபோதிலும் அண்மைக்காலத்தில் – கடந்த 10 வருடகாலத்தில் சீனா அந்த இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த முறையில் சர்வதேச ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு சீனாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது.

உள்நாட்டு ரீதியில் சிங்கள பௌத்த ரீதியான மன உணர்வு தங்களைப் பாதுகாக்கும் என்ற நிலைமையும், சர்வதேச ரீதியாக சீனாவுடனான உறவு தம்மைப் பாதுகாக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் ராஜபக்சக்களிடம் உள்ளது.

இந்த நிலைமையில் சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கும் கருத்து எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? உள்நாட்டு ரீதியாக பார்க்கும்போது சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச வம்சத்தைப் பலப்படுத்த வேண்டும்.

அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தக்கூடியது. இந்த வகையில் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இந்த மன உணர்வுகள் கட்டி அமைக்கப்படலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த பதட்ட உணர்வும் அச்சமும்தான், முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்று வரப்போகின்றது என்ற அச்சம்தான் ராஜபக்ச வம்சத்தை பலமான முறையில் மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

படித்த சிங்களவர்கள் கூட ராஜபக்ஷக்கள் பலமான முறையில் வந்தால் தான் இந்த நிலைமையில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியும் என்ற ஒரு கருத்தை கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான மன உணர்வுகள் சிங்கள பௌத்த திரட்டப்பட்ட கூட்டு உணர்வாக இருக்கிறது. அதுதான் அவர்களது பலம்.

இந்த நிலைமையில் சம்பந்தன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தமிழ் மக்கள் தங்களுக்கு எதிராக சர்வதேச சக்திகளுடன் கூட்டணி அமைத்து நாட்டை பிளவுபடுத்த போகின்றவர்கள், சிங்கள மக்களுடைய வாழ்க்கையைச் சிதைக்கப் போகின்றார்கள் போன்ற உணர்வுகளை – அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடியது.

அமெரிக்கா மற்றும் அதனோடு இணைந்து செயற்படக்கூடிய நாடுகளுடன் இணைந்து இந்த நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு தமிழர்கள் செயற்படுகிறார் என்ற உணர்வு ராஜபக்ஷ வம்சத்தை மேலும் மேலும் பலப்படுத்துவதுவதாக அமையும்.

அந்த வகையில் இந்த நாட்டு ஆட்சியாளர்கள் மேலும் பலம் அடைவதும் – அதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளுடன் அவர்கள் பலம் அடைவது என்பது தமிழ்மக்களுக்கு விமோசனம் அல்லது அழிவா?

அப்படியானால், ஏன் இவ்வாறான அறிக்கையை சம்பந்தன் வெளியிட்டார்?

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது இனப்படுகொலை என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து? இதனை போர்க்குற்றம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள்.

அதன் பின்னர் சர்வதேச விசாரணை என்பதை மாற்றி அமைத்து கலப்பு விசாரணை என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

அதன் பின்னர் உள்ளக விசாரணையை ஏற்றுகொள்வது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார்கள். அதன் பின்னர் ஐநா சபையின் விசாரணைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கொடுப்பது என்பதை இரண்டு தடவைகள் ஏற்றுக் கொண்டவர்களும் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான்.

முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ் மக்களுடைய தேசியப பிரச்சினையை – அதனுடைய கொதிநிலையை – அதனுடைய வாய்ப்புகளை தரமிறக்கிவந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான்.

அவ்வாறு இருக்க கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் ஒத்துழைத்த கூட்டமைப்பு, சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ற நடந்து கொண்ட கூட்டமைப்பு, இப்போது இவ்வாறான ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது, அதுவும் எந்த சர்வதேச சமூகம் இந்த அழிவுக்கு காரணமாக இருந்ததோ – இந்த அழிவுக்கு பின்னர் பௌத்த சிங்கள அரசு வளர்ச்சிக்கு அவர்கள் ஒத்துழைத்து அவர்களுடைய நலன்களைப் பெற்றுக்கொண்டார்களோ, அவர்கள் சிங்கள தரப்பினை தண்டிக்கப் போவதாக அறிக்கை வெளியிடுவது சிங்கள பௌத்த மத உணர்வை தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்புவதாக அமையும் என்பது மட்டுமன்றி, ராஜபக்ஷ வம்சத்தை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவே அமையும்.

அதேவேளையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு, சீனாவுடன் இணைந்து செல்வது சரியானதுதான் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இது உதவுவதாக அமையும்.

இல்லையென்றால் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தவறானது என்ற ஒரு கருத்து சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியிருக்கலாம்.

சிங்கள எதிர்க்கட்சிகளும், அரசுக்குள் இருக்கக்கூடிய அதிருப்தியாளர்களும் ராஜபக்‌ஷ அம்சம் தமது நலன்களுக்காக வெளியுறுவுக்கொள்கையைக் கையாண்டது தவறானது என்ற ஒரு கருத்து உருவாகியிருக்கும்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தாமல் சம்பந்தன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சிங்கள சக்திகளை ராஜபக்ஷ வம்சத்தினுடைய வெளியுறுவுக் கொள்கை -அதாவது சீனாவை கையாளுவதற்கான அவருடைய வழி சரியானதுதான் என்று ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கின்றது.

இந்த அரசாங்கத்தினுடைய உள்நாட்டு பலத்தையும் சர்வதேச பலத்தையும் மேலும் அதிகரிப்பதாக இந்தக் கருத்து அமைந்திருக்கின்றது.

அதன் மூலமாக எந்த ஒரு நல்ல விளைவையும் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. அதாவது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான ஒரு கொதி நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதாகவும், அரசாங்கத்தை பலம்பெற வைப்பதற்கும் உதவுவதாகத்தான் இந்தக் கருத்து அமைந்திருக்கின்றது.

சம்மந்தன் ஐயா எதற்காக இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டார்? இது நிச்சயமாக கட்சி அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர வேறு எதுவும் இதில் இல்லை.

கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவு ஒன்றைச் சந்தித்திருக்கின்றது. தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்று பார்த்தால் இது அவர்களுக்கு ஆபத்தே தவிர இதன் மூலமாக எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கின்றது. இந்த நிலையில், நடைபெறக்கூடிய ஒரு காரியம் தங்களுடைய இராஜதந்திர நகர்வுகள் மூலமாக தங்களுடைய வீராவேசச் செயற்பாட்டின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது என்பதைக் காட்டிக்கொள்வது ஒன்றுதான் சம்பந்தனின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். தவிர இதில் எந்த விதமான இராஜதந்திர நகர்வும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் கூட்டமைப்புத் தலைமை என்ன செய்திருக்க வேண்டும்?

தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த இடத்தில் மௌனமாக இருப்பதன் மூலமாகவே எங்களுடைய பேரத்தை நாங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கமுடியும்.

இரண்டு சக்திகள் மோதும் நிலையில் அதுதான் எமக்கு இருக்கக்கூடிய இராஜதந்திரம். சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முற்படும்.

அவ்வறான நிலையில், இலங்கை அரசாங்கம் தமிழர்களை நோக்கித் தான் வரவேண்டியிருக்கும். அதாவது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இனப்படுகொலை போன்றவற்றை அடிப்படையாக வைத்துத்தான் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் கொடுக்க முற்படும். அவ்வாறான நிலைமையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை நோக்கி தான் வர வேண்டி இருக்கும்.

அதேபோல சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொடுக்க வேண்டுமாக இருந்தால், அவர்களுக்கும் இலங்கை தமிழர்களுடன் ஆதரவுதான் அவசியம்.

ஏனென்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தலையீட்டை வேண்டி நிற்கின்றார்கள் என காட்டிக் கொள்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு அது தேவையானதாக இருந்திருக்கும்.

அந்த வகையில் இரண்டு தரப்புக்களுக்குமே தமிழ் மக்கள் தேவையாக இருக்கும் நிலை உள்ளது. இந்த நிலைமையில் மௌனமாக இருப்பதும், எந்தத் தரப்பு தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய முற்படுகிறது அவர்கள் மூலமாக நம்முடைய நலன்களைப் பேணிக் கொள்வது தான் தற்போது இருக்கக்கூடிய ஒரு இராஜதந்திரம்.

தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச தரப்பின் பக்கத்தில் நாம் நிற்பதாக காட்டிக் கொள்வதன் மூலமாக எதனையும் சாதித்துவிட முடியாது.

அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான பேரம் அதிகரிக்கும் நிலைமையில் தமிழ் மக்களுடைய பேரம் அதிகரிக்கும் அதற்காக நான் பொறுமையாக இருப்பது தான் தற்போது கையாளக்கூடிய இராஜதந்திரம். கட்சி அரசியலை இப்போது தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன்களுக்காக இவர்கள் செயற்பட வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version