“உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்”

கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் கூறிய விடயமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை இலங்கையை தாக்க ஆரம்பித்துவிட்டது. புதிய கொத்தணி தொற்றுகள் அதிகரித்துவிட்டன.

அண்மையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் புதிய தொற்றானது அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதென கூறியுள்ளமை எம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இத்தொற்றிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத விலையில், தனிமைப்படுத்தலை முன்னிறுத்திய செயற்பாடுகளே மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இத்தனிமைப்படுத்தல் செயற்பாடானது பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

1.தனிமைப்படுத்தல் முகாம்கள்

2.வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தல்

3.சுய தனிமைப்படுத்தல்

நோய் அடையாளம் காணப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, பரிசோதனையின் பின்னர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் வீட்டிலேயே சிலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுவதாக இருந்தால் சுயமாகவே தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.

இந்த தனிமைப்படுத்தல் அனைவருக்கும் ஒரேயளவான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதற்கு பல கதைகள் உண்டு.

குறிப்பாக ராஜாவுடன் பணியாற்றிய 24 பேரில் ஒருவருக்கு கடந்த மாதம் 15ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோர் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முதலில் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு அதில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர் தனது கதையை இவ்வாறு கூறுகின்றார்.

“கொரோனா சந்தேகம் ஏற்பட்ட பின்னர் உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது.

இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன். எம்மை அழைத்துச் செல்லும்போது சுமார் 7, 8 மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

எம்மால் சிறுநீர் கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டோம். அங்கு சென்றபின்னர், 3 அல்லது 4 பேருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

நாம் பணிபுரிந்த இடத்தின் முதலாளியும் எம்முடன் தனிமைப்படுத்தப்பட்டதால் எமக்கு தேவையான கொத்தமல்லி, மஞ்சள் போன்ற மூலிகைகள், உணவு வகைகளை கொண்டுவந்து வெளியில் வைத்துவிட்டு சென்றார்கள்.

அவற்றை எடுத்து பயன்படுத்திக்கொண்டோம். வீட்டிலுள்ளவர்களை ரீலோட் போடுமாறு கோரி கையடக்க தொலைபேசியில் சமூக வலைத்தளங்கள் அல்லது பாடல்களை கேட்போம். காரணம் 24 மணித்தியாலங்களும் ஒரே இடத்தில் கழிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம்.

புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த ஓரிரு நாட்களின் பின்னர் எம்மை அருகிலுள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலை கட்டிமொன்றிற்கு மாற்றிவிட்டார்கள்.

நாம் அங்கு இருக்கும்போது மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியோர் மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றியோரையும் கொண்டுவந்துவிட்டார்கள்.

அப்போது அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. தொற்று உள்ளதா இல்லையா என தெரியாது. ஆனால், அங்குதானே கொத்தணியாக பரவின.

ஆகையால் ஒருவேளை அவர்கள் தொற்றாளர்கள் என்றால் எமக்கும் பரவும் ஆபத்து உண்டு. ஒரே குளியலறை மற்றும் மலசலகூடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது மிகவும் ஆபத்தானது. இறுதியில் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு எமது முதலாளி கேட்டுக்கொண்டார். அதன் பினனர் கடந்த 28ஆம் திகதி புத்தளத்தில் இராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள விடுதிக்கு மாற்றப்பட்டோம்.

இங்கு ஒருநாள் வாடகை ஒரு அறைக்கு 7000 ரூபாவாகும். இரண்டு பேருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. வழமையான உணவுகள் வழங்கப்படுகின்றன.

அத்தோடு, எழுமிச்சை, இஞ்சி, கொத்தமல்லி போன்ற மூலிகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்ல முடியாது.

சி.சி.ரி.வி. மூலம் கண்காணிக்கப்படுகின்றது. ஆகவே தொலைபேசியில் கதைத்துக்கொள்வோம். ஓரிரு தினங்களுக்கு முன்னர் இங்கிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சற்று மனதுக்கு சங்கடமாக உள்ளது. எமது முதலாளியின் தயவால் நாம் பணம் செலுத்தி தங்கும் விடுதிக்கு வந்தாலும், ஏனையோருக்கு அந்த வசதியில்லை” என்றார்.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஏனையோருடன் உரையாட முடிந்ததா என்று கேட்கும்போது, “புதிதாக வருபவர்கள் எல்லோரும் கொரோனா நோயாளர்கள் என எம்மிடம் கூறிவிடுவார்கள்.

அந்த பயத்திலேயே அவர்கள் அருகில் செல்ல மாட்டோம். அதேபோல் அவர்களிடமும் நாம் கொரோனா நோயாளர்கள் என்று கூறியிருப்பார்கள் என நினைக்கின்றேன்.

காரணம் எம்மை கண்டாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள். இப்படித்தால் யாரைக் கண்டாலும் சந்தேகமும் பயமும் கலந்த எண்ணத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது” என்றார்.

இதேவேளை, திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவருடன் நேரடி தொடர்பிலிருந்த சிலரை அங்கு கடந்த மாதம் 27ஆம் திகதி தனிமைப்படுத்தியுள்ளனர்.

பின்னர் 31ஆம் திகதி அவர்களை மொரவேவ பகுதியுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். அவ்வாறான ஒருவரை தொடர்புகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்தான் விமலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரிடம் அங்குள்ள விடயங்கள் பற்றி வினவியபோது,

“பாதுகாப்பு கருதி வீட்டிலுள்ளவர்களுடன் அல்லது வெளியாருடன் கதைக்க அனுமதி இல்லை. ஆனால், அருகிலுள்ளவர்களுடன் கதைக்கமுடியும்.

நோய் பயத்தால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் பதற்றமான மனநிலையுடனேயே உள்ளனர். எனது பி.சி.ஆர். பரிசோதனை இன்னும் வரவில்லை. ஒவ்வொரு விநாடியும் பதற்றமாகவே உள்ளது” என்றார்.

மினுவாங்கொடை கொத்தணி ஏற்பட்டு சில நாட்களில் பேலியகொடை மீன் சந்தையில் பாரியளவில் தொற்று ஏற்பட்டது.

அங்கு மீன்களை வாங்கி வியாபாரம் செய்யும் மருதானையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர் தற்போது பொலனறுவை தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளதோடு, மனைவியும் பிள்ளைகளும் மட்டக்களப்பிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்றில்லையென பி.சி.ஆர். பரிசோதனையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் தற்போது வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் குறித்த தாய், கணவனின் தொழிலுக்கு மேலதிகமாக தையல் வேலைகள் செய்து நான்கு குழந்தைகளை படிக்க வைக்கின்றார்.

அத்தோடு, வாடகை வீட்டிலேயே வசிக்கின்றார். 14 நாட்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாதென அறிவுறுத்தப்பட்டு வீட்டில் கொண்டுவந்து விட்டதாகவும் தற்போது பொலிஸ் அல்லது சுகாதார பரிசோதகர்கள் அடிக்கடி வந்து கண்காணித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

“யாராவது ஏதேனும் பொருட்களை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுச் செல்வார்கள். யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதால், கிடைப்பதை சாப்பிட்டு வாழ்கிறோம்.

மனதளவில் ஒவ்வொரு நொடியும் அழுகின்றேன். எனது கணவனுக்கு என்ன நடக்குமோ எமக்கு இனிவரும் காலம் எவ்வாறு அமையுமோ என்ற வேதனை காணப்படுகின்றது. பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்ற மிகவும் சிரமமாக உள்ளது” என்றார்.

தனிமைப்படுத்தல் முறை சரியாக பின்பற்றப்படுகின்றதா என்பதை அரசாங்கம் இடையிடையே கண்காணித்து வருகின்றமை சிறப்பான விடயம்.

ஆனால், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய முடியாமல் உள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் இதுவரை சுமார் 5000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான ஷிரான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவில் பணியாற்றினார்.

தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம் கள பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இத்தொற்று ஏற்பட்டதாக குறிப்பிட்ட ஷிரான் தமக்கு எவ்வித அறிகுறிகளும் ஏற்படவில்லை என்றார்.

நான்கு வயது குழந்தையும் மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஷிரான், தன்னை பிரிந்திருப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமான விடயம் எனக் குறிப்பிட்டார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது,

‘’கொரோனா தொற்றை சாதாரணமாக இனங்காண முடியாது. மினுவாங்கொடையில் அடையாளம் காணப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சாதாரண தடிமன், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மாத்திரமே இருந்துள்ளது.

அப்போது பரசிற்றமோல் போன்ற மாத்திரைகளை பாவித்துள்ளனர். அப்போது சுகமாகிவிட்டதாக உணர்வோம்தானே. அவ்வாறுதான் இருந்துள்ளார்கள். எனினும், பெருமளவானோருக்கு இவ்வாறு ஏற்பட்ட பின்னர்தான் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவருக்கு இதனை பரப்பாமல் இருக்க தனிமையாக இருக்குமாறு கூறுகின்றோம். இதனை கடைப்பிடிக்கின்றனரா இல்லையா என நாம் வீட்டிற்கு வீடு கண்காணிப்பாளரை நியமிக்க முடியாது தானே? ஆகவே மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.

தனிமைப்படுத்தல் தொடர்பாக ஒரு வீட்டில் பதாகை ஒட்டினால், தம்மையும் பாதுகாத்துக்கொண்டு அவர்களுக்கும் உதவ வேண்டும். தனிமைப்படுத்தல் மற்றும் கைகளை கழுவி எம்மை சுத்தமாக வைத்துக்கொள்வதே இப்போது காணப்படும் ஒரே வழி” என்றார்.

தனிமைப்படுத்தலே தற்போது இத்தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி எனக் காணப்படும் போது, தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் நிலைகுறித்து அதிக கவனம் செலுத்துவது அவசியம். தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்கவும் தொற்றாளர்கள் தம்மை பயமின்றி வெளிக்காட்டிக்கொள்ளவும் இவ்விடயங்கள் உதவும்.

கொரோனா தொற்றிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தலை உலக நாடுகள் கடைப்பிடிப்பதோடு எங்கும் முடக்கல் நிலைகள் தொடர்கின்றன.

சமூகத்திற்குள் ஊடுருவி பெருமளவானோர் பாதிக்கப்பட்டால், குறிப்பாக இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு அதனை எதிர்கொள்ள முடியாது போகும்.

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

 

Share.
Leave A Reply

Exit mobile version