இலங்கையில் இன்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரித்த தீர்மானித்துள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 466 தொற்றாளர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடனும் ஏனைய 237 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது. எனினும் இவர்களில் 20 804 பேர் குணமடைந்துள்ளனர்.

7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை 491 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை 2 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்கள் 142 ஆக உயர்வடைந்துள்ளது.

அதன்படி, உரிய முகவரி தெரியாத கொழும்பு பகுதியிலுள்ள 62 வயதான ஆண்ணொருவரே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 13 ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொவிட் தொற்றுடன், நீரிழிவு நோய் காணப்பட்டமையே உயிழப்புக்கான காரணம் என கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version