முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் சச்சின் காலே. இவரது மனைவி அஸ்வினி (வயது25). கடந்த சில மாதங்களாக அஸ்வினிக்கு முன்னாள் காதலனுடன் செல்போனில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அஸ்வினி தனது காதலனுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டார்.

அஸ்வினியின் கள்ளக்காதல் விவகாரம் கணவரின் வீட்டினருக்கு தெரியவந்தது. அஸ்வினியை அவரது கணவர் உள்ளிட்டவர்கள் கண்டித்து உள்ளனர்.

ஆனால் அஸ்வினி தனது கணவர் சச்சன் காலேவை விட்டு பிரிந்து காதலருடன் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். இது பற்றி சச்சின் காலே தனது மனைவியை மீட்டு தருமாறு போலீசில் புகார் அளித்தார்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த புகாரின் படி போலீசார் அஸ்வினியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுத்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்த தம்பதியினர் சம்பவத்தன்று இரவு ஒன்றாக படுத்து இருந்தனர். அப்போது பழைய பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சச்சின் காலே மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் தூங்கி கொண்டு இருந்த மனைவி அஸ்வினியின் முகத்தில் தலையணையை அமுக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சின் காலேவை கைது செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version