ilakkiyainfo

`அவன் பசியை நீ அறிவாய். அதன் பிறகு தருமம் புரிவாய்’ – உலகம் முழுமையும் கொண்டாடும் ரமலான் பண்டிகை!

ஐந்து வேளைத் தொழுகை இறைக்கட்டளை. அதேவேளை வெறும் வரட்டுப் பட்டினி அல்ல, இறைவன் எதிர்பார்ப்பது.

ஒவ்வொரு மனிதனும் தவமாய்த் தவமிருந்து செய்ய வேண்டிய உள்முக பயணம்தான் அவன் எதிர்பார்ப்பது.

நோன்புப் பெருநாள் என்றும் ஈகைத் திருநாள் என்றும் இஸ்லாமியர்களால் மகிழ்வோடு கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை ரமலான் பண்டிகை.

ஆண்டு முழுவதும் படித்து அயர்வுற்ற மாணவர்களின் மூளைக்கு ஒரு மாத ஓய்வு கொடுக்கும் பள்ளிக்கூட ஆண்டு விடுமுறைபோல, மனிதன் உண்ணும் உணவை ஆண்டு முழுவதும் செரித்துக் களைத்த வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கும் மாதம் ரமலான்.

மொத்த உடலையும் புத்துணர்வாக்கி அடுத்த ஆண்டை ஆரோக்கியமாக எதிர் கொள்ள இது உதவும். வைகரை தொட்டு அந்திவரை உண்ணாமல், பருகாமல் வாய்க்குப் பூட்டிட்டு வயிற்றைக் காய வைத்துப் பட்டினி இருப்பது உடலுக்குப் பல நன்மைகளைத் தரலாம்.

ஆனால் எத்தனை நன்மைகள் உடலுக்கு எனக் கணக்குப் பார்த்து இஸ்லாமியர்கள் நோற்பதில்லை. எல்லாம் வல்ல இறைவனின் கட்டளை அது என்ற ஒரே காரணத்திற்காக நோன்பு நோற்கிறார்கள்.

ஐந்து வேளைத் தொழுகையில் யோகாசனத்தில் கிடைப்பது போல பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.

எனினும் அதுவல்ல தினமும் தொழுவதற்கான காரணம். அது இறைக்கட்டளை என்பது மட்டும்தான் ஒரே காரணம்.

வெறும் வரட்டுப் பட்டினி அல்ல, இறைவன் எதிர்பார்ப்பது. ஒவ்வொரு மனிதனும் தவமாய்த் தவமிருந்து செய்ய வேண்டிய உள்முக பயணம்தான் அவன் எதிர்பார்ப்பது.

பொய், புறம், கோள், பொய் சத்தியம், காமப்பார்வை முதலான அனைத்து விடயங்களும் நோன்பை முறித்து விடும் என்றும் எவர் பொய் சொல்வதையும் போலி வாழ்க்கை வாழ்வதையும் விடவில்லையோ அவரது நோன்பிற்கு இறைவனிடம் எப்பயனும் கிட்டாது என்று எச்சரிக்கிறார் இறைதூதர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் ‘தனித்திரு, பசித்திரு, விழித்திரு’ என்ற தத்துவம் இங்கே நினைவு கூறத்தக்கது.

ஓர் இறைநம்பிக்கை, தொழுகை நோன்பு, ஏழை வரி, ஹஜ் யாத்திரை இந்த ஐந்தும்தான் இஸ்லாம் என்ற மாளிகை நிற்கின்ற தூண்கள்.

மனத்தூய்மைதான் இத்தூண்களைத் தாங்குகின்ற நிலம். நிலம் இல்லாமல் தூண்களும் இல்லை வாழ்க்கையும் இல்லை.

திருமறையும், நபிமொழியும் நோன்பை ‘அல் – ஸவ்ம்’ என்று குறிப்பிடுகிறது. ‘தடுத்துக் கொளல்’ என்பது இதன்பொருள்.

உணவிலிருந்து உடலையும் தீமையிலிருந்து மனதையும் பாதுகாத்துக்கொள்வது. ரமலான் என்றால் ‘எரிப்பவன்’ என்று பொருள்.

இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் ‘ரமலான்.’ இறைவனுக்கே ‘ரமலான்’ என்று ஒரு திருநாமம் இருப்பதாக நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

குப்பைக் கூளங்களைக் கூட்டிக் குவித்து நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கி விடும் போகிப்பண்டிகை போல மனிதர்களின் பாவ குப்பைகளையும் இறைவன் சுட்டெரித்து சாம்பலாக்கி விடுவதால் ரமலான் என்று பெயரானது என்பார்கள்.

இவ்வுலகம் உய்ய வழி காட்ட வந்த திருமறை குர்ஆன் அருளப்பட்டதும் இம்மாதத்தில்தான்.

யானைத்தீ நோயால் (பசி) பீடிக்கப்பட்டோருக்கு அட்சய பாத்திரத்தில் அன்னமிட்டாள் பௌத்த மணிமேகலை.

‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்றான் பாரதி.

‘பசித்தவனுக்கு ரொட்டி துண்டின் வடிவில் வருபவன்தான் கடவுள்’ என்றார் விவேகானந்தர்.

சத்திய தருமசாலை மூலம் அணையா அடுப்பெரித்து அனைவருக்கும் உணவு வழங்கச் சொன்னார் வள்ளலார்.

உன்னத லட்சியங்களை அடைய வேண்டிய மனித இனம் உறுபசியால் வாடக் கூடாது என்பதே எல்லோரும் எண்ணியது.

ஏழையின் பசியை செல்வந்தன் உணர்ந்தால் தானே ‘ஈ’ என இறந்து வாழக் கூசுபவர்களின் தேவை அறிந்து ஈகை செய்யமுடியும்.

‘அவன் பசியை நீ அறிவாய். அதன் பிறகு தருமம் புரிவாய்’ என்ற தத்துவத்தின் அடிப்படைதான் ரமலான் நோன்பு பெருநாளாகவும் ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.


ரமலான் கொண்டாட்டம்

மேட்டின் அருகே பள்ளம் இருப்பதை நீ பார்க்கவில்லையா, மேட்டை சரித்து பள்ளத்தை கொஞ்சம் நிரப்பு. அது உன் செல்வத்தை ஒருபோதும் குறைக்காது.

அபிவிருத்தி ஆக்கும் என்று பணக்காரர்களுக்கு பரிந்துரைக்கிறது இஸ்லாம். தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவனின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பவர்களை நபியே நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள் என்பதே இறை வசனம்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் பசித்திருக்க, தான் மட்டும் உணவு உண்பவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அறிவிக்கிறார்

நபிகள் நாயகம். பசியிலிருந்தும், வறுமை கொடுமையிலிருந்தும் மீண்டு வருவது தானே அனைத்துலக நாடுகளின் லட்சியமாக இருக்கிறது. அது லட்சியமாகவே என்றும் இருப்பது நன்றன்று என்று செயல்படத் தூண்டுகிறது இஸ்லாம்.

இந்த ரமலான் நன்னாளில் மனிதம் போற்றுவோம். பசித்திருக்கும் மனிதர்கள் இல்லாத உலகம் சமைக்க சபதம் ஏற்போம். உலக மக்கள் அனைவருக்கும் அந்த இறைவன் எல்லா மகிழ்ச்சிகளையும் வெற்றிகளையும் அளித்து சரியான பாதையில் வழி நடத்துவாராக.

 

Exit mobile version