காலிமுகத்திடலில் அமைதிவழிப் போராட்டங்கள் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அது வன்முறையாக மாறலாம் என்ற அச்சம் பரவலாக இருந்து வந்தது.

 

ஒரு மாதமாக மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டம் தான், சர்வதேச கவனத்தையும், ஆதரவையும் பெற்றுக் கொடுத்தது.

அந்த அமைதிவழிப் போராட்டத்தின் மீது மஹிந்த ராஜபக்ஷ ஏவிவிட்ட வன்முறை, முழு நாட்டையும் வன்முறைக் களமாக மாற்றியது.

வன்முறைகள் தொடருமானால், அது இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்க கூடும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வெளிப்படையாகவே எச்சரித்திருந்தார்.

அதற்கு முன்னதாக, வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டதோ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து, இராணுவ ஆட்சி ஏற்படக் கூடும் என்ற அச்சமும், கவலையும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம், அவர் ஒரு இராணுவப் பின்னணியைக் கொண்டவர் என்பது மாத்திரமன்றி, இராணுவத்தின் உயர் நிலை தளபதிகள், அதிகாரிகளாக, அவர் தனக்கு ஆதரவானவர்களை வைத்திருப்பதும் தான்.

 

அரச நிர்வாகத்தில் கோட்டாபய ராஜபக்ஷ, பெருமளவில் முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமித்திருந்தார்.

அண்மைய குழப்பங்களுக்கு மத்தியில் கூட அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தன்னைச் சுற்றி இராணுவ பின்னணி உள்ளவர்கள், இருப்பதை, கோட்டாபய ராஜபக்ஷ பலமாகவே கருதினார்.

அதனால், அவர் எந்த நேரத்திலும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்து பலமாகவே இருந்து வந்தது.

அதுபோலவே, தற்போதைய பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக மாறி, வன்முறையாக வெடித்தவுடன், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

அவர் பதவி விலகியதும், இரண்டு மூன்று நாட்களாக பிரதமர் பதவியில் யாரும் இருக்கவில்லை. அரசாங்கத்தை ஒற்றை ஆளாக ஜனாதிபதியே நிர்வகித்தார்.

அந்த நிலைமை நீடித்தால், ஆட்சியை இராணுவம் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டது.

முதலில் அவசரகாலச் சட்டம், பின்னர் ஊரடங்குச் சட்டம், அதற்கு பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம், கொடுக்கப்பட்டது எல்லாமே, அதனை உறுதிப்படுத்துவது போல, அமைந்திருந்தது.

அத்துடன், கொழும்பு நகர வீதிகளில் கவச வாகனங்கள் கண்டபடி ஓடித் திரியத் தொடங்கியதும், நிலைமைகள் மோசமடைகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இதனையிட்டு அமெரிக்கா கவலை வெளியிட்டதும், உன்னிப்பாக கண்காணிப்பதாக கூறியதும், கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்

அரசியல் குழப்பங்கள் உச்சமடைகின்ற போது, இராணுவத் தலையீடு செய்வது இயல்பு. அதுபோலவே, உள்நாட்டு போர் ஏற்படுவதும் வழக்கம்.

சிரியாவில் பஷர் அல் அசாத் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்த போது, இராணுவத்தின் துணையுடன் அவர் அதனை முறியடிக்கத் தொடங்கினார்.

அதனால், அங்கு நீண்டதொரு உள்நாட்டுப் போர் தொடரும் நிலை ஏற்பட்டது. அந்த உள்நாட்டுப் போரில், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் நேட்டோ கூட்டணி என்று பல நாடுகளும், தரப்புகளும் கால் வைத்தன.

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும், அங்கு வேரூன்றின. இலட்சக்கணக்கான மக்களின் அழிவுகள், சிரியாவின் பழைமை வாய்ந்த பாரம்பரிய நகரங்கள், கட்டட அமைப்புகள், புராதன சின்னங்கள் எல்லாமே, சிதைக்கப்பட்டன.

அது போன்றதொரு நிலை இலங்கையில் ஏற்பட்டு விடக் கூடாது என்ற பதற்றம் பலரிடம் காணப்பட்டது. இன்னமும் இருக்கிறது.

அதனால் தான், தற்போதைய போராட்டங்களோ, வன்முறைகளோ இராணுவ ஆட்சிக்கு காரணமாக அமைந்து விடலாம் என்ற செய்திகள் அடிக்கடி பரவின.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், முன்னர் ஓரிரு தடவைகள் இராணுவப் புரட்சிக்கான முயற்சிகள் இடம்பெற்ற போதும், தற்போது அதற்கான அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், இராணுவ வழியில் வந்த கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதியாக இருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக முக்கியமான பதவிகளில் இராணுவத் தளபதிகள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தரப்பு, இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அவசியம் குறைவு.

ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியாக இருக்கும் போது, நாங்கள் ஏன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

தான் எதிர்பார்க்கின்றவற்றைச் செய்யக் கூடியதொரு தலைவரை நாடு கொண்டுள்ள நிலையில், இராணுவம் ஏன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தையே அவர் பிரதிபலித்திருந்தார். அது ஓரளவுக்கு உண்மை தான்.

இராணுவத்தைக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்கான ஆபத்து இருப்பது உண்மை. அது இன்னமும் நீடிக்கிறது.

ஆனால், இராணுவம் தனியாக ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழல் ஏதும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

பொருளாதார ரீதியாக நாடு செழிப்பான நிலையில் இருக்கும் போது, அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டால் ஆச்சரியமில்லை.

ஆனால் இலங்கைத் தீவு தற்போது மிகமோசமான நெருக்கடியில் இருக்கிறது. பொருளாதார நிலையில் மிக மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட அரசாங்கம் வங்குரோந்து நிலையை அறிவிக்க கூடியளவுக்கு திறைசேரியில் நிதி வளம் குன்றிப் போயிருக்கிறது.

இவ்வாறானதொரு நாட்டை இராணுவம் கைப்பற்றுவதென்பது, சாத்தியமில்லை. ஏனென்றால், இராணுவத்தினால் தனது ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி மக்களை அடக்கியாள முடியும்.

ஆனால், தேய்ந்து போன பொருளாதாரத்தை தலைநிமிர்த்தி விட முடியாது.

அதனைச் செய்வதாயின் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புகளின் உதவி கட்டாயம்.

அவ்வாறான உதவியை இலங்கை இராணுவத்தினால் பெற முடியாது. அதற்கு ஏதாவதொரு சக்திவாய்ந்த நாடாவது பின்புல ஆதரவைக் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எந்த நாடும் வெளிப்படையான உதவிகளை வழங்காது.

இவ்வாறான நிலையில் ஆட்சியைக் கைப்பற்றும் இராணுவத்தினால், அதனைத் தக்கவைக்க முடியாது போகும்.

கொழும்பு நகரில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விரட்டி விரட்டித் தாக்கப்பட்டது போன்ற நிலை இராணுவ அதிகாரிகளுக்கும் ஏற்படும்.

மக்களுக்கு இப்போது தேவைப்படுவது பொருளாதார மீட்சி. அதற்கான உதவிகள், நிவாரணங்களை இராணுவத்தினால் கொடுக்க முடியாது.

அது இராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்தும். இது ஒரு பிரச்சினை.  இந்த நிலையைச் சமாளிக்க வெளிநாடுகள், அமைப்புகளிடம் கையேந்த வேண்டும். கடன் வாங்க வேண்டும்.

இராணுவ ஆட்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைப்பது அரிது. அதனையும் மீறிக் கிடைத்தாலும், வல்லமை மிக்க நாடுகள் தடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களைக் கையில் எடுத்து தடுத்து விடும்.

இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்ற இராணுவத்தினால் இப்போதைக்கு திட்டமிட முடியாது.

அதனை மீறி அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அது இன்னொரு உள்நாட்டு போருக்கு வழி வகுப்பதாக அமைந்து விடலாம்.

அரசியல் நெருக்கடியை அரசியல் வழிமுறைகளுக்கு அப்பால் கையாள முயன்றால், இராணுவத்தின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும், அவர்களின் எதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.

அந்த நிலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருந்தால் மட்டும், இராணுவம் அரசியல் தலையீட்டை செய்ய முனையும்.

இல்லையேல் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஒரு கவசமாகத் தான் இராணுவம் இருக்குமே தவிர, அதற்கு அப்பால் செல்வதற்கு வாய்ப்புகள் அரிது.

Share.
Leave A Reply

Exit mobile version