சபாநாயகர் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றுவரும் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுவருகின்றது.

இக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுமந்திரன் ஆகியோர் மெய்நிகர் ( சூம் ) மூலம் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் குறித்த கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும் என்றும், அதன் பின்னர் குறுகிய காலத்திற்கு சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு ஜனாதிபதி, பிரதமர் உடன் பதவி விலக வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

இதேவேளை, ஜனாதிபதி ,பிரதமர் பதவி விலகாவிடின் நாட்டில் பாரதூரமான விளைவுகளை இனிவரும் நாட்களில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் மைத்திரிபால சிறிசேன கட்சி தலைவர் கூட்டத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை  நியமிக்கும் யோசனைக்கு சுயாதீன கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்நிலையில், கோட்டா கோ ஹோம்  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷவிற்கு எதிரானது, நோ டீல் கம பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரானது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தால் மக்கள் பாராளுமன்றத்தை தரை மட்டமாக்குவார்கள் என  கட்சி் தலைவர் கூட்டத்தில் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, பிரதமரையும் ஜனாதிபதியையும் ராஜினாமா செய்யுமாறு கட்சி தலைவர் கூட்டத்தில் கோரப்பட்ட போதிலும் , பிரதமர் இதற்கு உடன்படவில்லை. எவ்வாறாயினும் , பெருமளவானோரின் வேண்டுகோளுக்கமைய  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையுமே பதவி விலகுமாறு கோருவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜபக்‌ஷர்களின் பாதுகாவலராக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சி தலைவர் கூட்டத்தில்

1.ஜனாதிபதி , பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்

2.சபாநாயகர் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்

3.ஜனாதிபதியொருவரை பாராளுமன்றம் தெரிவு செய்யும்

4.குறுகிய காலத்திற்குள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.அது வரையில் பாராளுமன்றம் தெரிவு செய்பவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

<div

Share.
Leave A Reply

Exit mobile version