இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22) கையளித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உரமானது உணவுப் பாதுகாப்புக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும் பங்களிக்கும் என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இந்தியாவுடனான நெருக்கமான உறவுகள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை வெளிப்படுத்துகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
உரம் கையளிக்கும் நிகழ்வில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விவசாயம் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.