இரசியா தனது ஆக்கிரமிப்பு போரை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்ததில் இருந்தே உக்ரேன் இஸ்ரேலிடம் Iron Dome, Iron Beam, Barak-8, Patriot, David’s Sling, Arrow Systems ஆகிய வான் பாதுகாப்பு முறைமைகளை வழங்கும் படி வேண்டுகோள்கள் பல விடுத்தது.

ஒரு வல்லரசு நாடாகிய இரசியாவின் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத இஸ்ரேல் இரசியாவிற்கு எதிராக பாவிக்கக் கூடிய எந்த ஒரு படைக்கலன்களையும் வழங்கத் தயங்கியமைக்கான காரணங்கள்:

1.இஸ்ரேல் உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கினால் இரசிய-ஈரானிய உறவு மேலும் வலிமையடையும் என இஸ்ரேல் கருதுகின்றது.

2. தனது இறைமையையும் இருப்பையுமிட்டு என்றும் அதிக கரிசனையுடன் இருக்கும் இஸ்ரேல் ஒரு வல்லரசு நாட்டுடன் பகைமையை விரும்பவில்லை.

3. இஸ்ரேலிய சட்டங்களின் படி இஸ்ரேலின் எதிரியாக அறிவிக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக மட்டுமே இஸ்ரேல் பொருளாதாரத் தடை விதிக்க முடியும்.

3. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனைச் சூழவுள்ள பல பெருஞ்செல்வந்தரகளுள் (Oligarchs) யூதர்களும் உள்ளனர். அவர்கள் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளனர். இரசியாவிலும் உக்ரேனிலும் வாழும் யூதர்களை இஸ்ரேலுக்கு குடி பெயரச் செய்வதில் இஸ்ரேல் அதிக அக்கறை காட்டுகின்றது. தனது நாட்டின் மக்கள் தொகையை கூட்டுவதற்கு இரசியாவின் ஆதரவு இஸ்ரேலுக்கு தேவைப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரேன் தொடர்பான வாக்கெடுப்புக்கள் வந்த போது இஸ்ரேல் உக்ரேனுக்கு ஆதரவாக வாக்களித்தது. உக்ரேன் மீதான இரசிய ஆக்கிரமிப்பை இஸ்ரேல் கண்டித்தும் இருந்தது. ஆனால் இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

 

போர்முனைகளிற்கு நிபுணர்களை அனுப்பும் இஸ்ரேல்

இஸ்ரேல் வேறு நாடுகளிடையே நடக்கும் போரில் திரைமறைவில் ஈடுபடுவதுண்டு. 1999இல் இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் நடந்த கார்கில் போரில் இஸ்ரேலிய வான் படையினர் திரைமறைவில் ஈடுபட்டனர்.

இந்தியாவிடம் அப்போது GPS முறைமை இல்லை இஸ்ரேலிய விமானிகள் அதனுடன் பறந்து பாக்கிஸ்த்தானியப் படையினரின் நிலை பற்றி இந்தியாவிற்கு தகவல் வழங்கியது.

இந்தியாவிடமிருந்த மிராஜ்-2000H விமானங்களில் பாவிக்கக் கூடிய லேசர்-வழிகாட்டல் ஏவுகணைகளை இந்தியாவிற்கு இஸ்ரேல் வழங்கியது.

தனது விமானிகளுக்கு போர்ப்பயிற்ச்சி வழங்குதல், தனது படைக்கலன்களையும் தொழில் நுட்பங்களையும் போர் முனையில் பாவித்தல் இஸ்ரேலுக்கு எப்போதும் தேவைபடுகின்றது.

அந்த அடிப்படியில் இந்தியாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் இஸ்ரேல் உதவி செய்தது. இஸ்ரேலிடம் ஆளிலிகளையும், எறிகணைகளையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடிய Iron Beam என அழைக்கப்படும் லேசர் படைக்கலன்கள் உள்ளன.

இவை மிகவும் செலவு குறைந்த படைக்கலன்களாகும். முன்பு காசா நிலப்பரப்பில் இருந்து செயற்படும் கமாஸ் அமைப்பினரின் $500 பெறுமதியான ஆளிலிகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேல் $50,000 பெறுமதியான ஏவுகணைகளைப் பாவிக்க வேண்டி இருந்தது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய லேசர் படைக்கலன்கள் இதுவரை ஒரு சரியான போர் முனையில் தேர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை.

அமெரிக்காவில் அதிருப்தி

இஸ்ரேலில் நடந்த ஒரு மாநாட்டில் உக்ரேனிய அதிபர் இஸ்ரேலிடம் படைக்கலன்கள் வழங்க வேண்டுகோள் விடுக்கும் காணொலி ஒன்று ஒளிபரப்பப் பட்டது.

அதில் அவர் இரசியா ஈரான் அணுக்குண்டு தயாரிக்க உதவி செய்யும் என எச்சரித்திருந்தார். இருந்தும் 2022 ஒக்டோபர் 24-ம் திகதி திங்கட் கிழமை இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் தாம் உக்ரேனுக்கு படைக்கலன்கள் அனுப்பப் போவதில்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் உக்ரேனுக்கு வான் தாக்குதலை அறிந்து மக்களை எச்சரிக்கும் முறைமையை மட்டும் வழங்க முன்வந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற மக்களவையின் உளவுத்துறைக்குப் பொற்ப்பான குழுவின் தலைவர் மைக்கேல் ரேணர் இஸ்ரேல் உக்ரேனுக்கு உதவி செய்யாமையால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் இஸ்ரேலுக்கு எறியியல் ஏவுகணைகளை (Ballistic Missiles) வழங்க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன..

Smash 2000 Plus System – மனம் மாறியதா இஸ்ரேல்?

ஈரானின் படைக்கலன்களை இரசியா வாங்கி அவற்றை வெற்றீகரமாக இரசியா பாவிக்கத் தொடங்கியமை இஸ்ரேலின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

முதலில் உக்ரேனில் இரசியா பாவித்த ஈரானின் ஷாஹிட்-136 ஆளிலிகள் (Drones) பற்றி தான் திரட்டி வைத்திருந்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் உக்ரேனுக்கு வழங்கியது.

இரசியா ஏவிய ஷாஹிட்-136 ஆளிலிகளில் (Drones) 70% உக்ரேன் அழித்தமைக்கு அத்தகவல் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

ஈரானின் ஷாஹிட்-136 ஆளிலிகளை இலகுவில் அழிக்கக் கூடிய Smash 2000 Plus System எனப்படும் படைக்கலன்களை இஸ்ரேல் உக்ரேனுக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே Smash 2000 Plus System படைக்கலன்களை வாங்கியுள்ளன.

அது ரடார், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பாவித்து பெரும்பாலும் தானியங்கியாக செயற்படக்கூடிய ஒரு படைக்கலனாகும்.

இதன் செயற்கை நுண்ணறிவுப் பாவனையால் அது செயற்படும் முறைமையை ஒரு சூடு-ஒரே அடி (One shot One Hit) எனவும் Smart Shooter Anti-Drone System எனவும் அழைக்கின்றார்கள்.

மிகச் சிறிய ஆளிலி வானூர்திகளையும் அது துல்லியமாக தாக்கி அழிக்கின்றது. இதை போர்வீரர் கையில் வைத்தும் இயக்கலாம்.

சிறு விமானங்களில் இருந்தும் ஆளில்லா விமானங்களில் இருந்தும் இயக்கி வானிலும் தரையிலும் உள்ள அசையும் மற்றும் நிலையான இலக்குகளை இரவிலும் பகலிலும் துல்லியமாகத் தாக்கி அழிக்கலாம்.

75கிலோ எடையும் 95செண்டி மீட்டர் நீளமும் கொண்ட இலகு படைக்கலனாக Smash 2000 Plus System அமைந்துள்ளது.

Smash 2000 Plus System செயற்படும் விதம்

Smash 2000 Plus System முதலில் பறக்கும் அல்லது நிலையாக இருக்கும் இலக்கை ஒரு காணொளிப்பதிவு செய்யும்.

பின்னர் அதை செயற்கை விவேகம் மூலம் அதன் அசைவை துல்லியமாக கணிக்கும். பின்னர் அதை அழிப்பதற்கான படிமுறைகளை (Algorithms) உருவாக்கி அதன்படி இலக்கை நோக்கி சுடுகலனை வீசும். இவையாவும் தானாகவும் மிக மிகச் சிறிய நேரத்திலும் செயற்படுத்தப்படுகின்றது.

இரசியாவின் செலவு மேலும் அதிகரிக்குமா?

ஆளிலிகளைப் பாவித்து எதிரியின் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்துவது மலிவானதாகும். இதனால் ஈரானின் ஆளிலிகளை இரசியா வாங்கி உக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பாவித்தது.

ஒக்டோபர் மாதம் 31-ம் திகதி இரசியா உக்ரேன் மீது வீசிய சுமார் எழுபது ஏவுகணைகளின் மொத்தப் பெறுமதி எழு நூறு மில்லியன் டொலருக்கும் அதிகமானதாகும்.

அந்த ஏவுகணைகள் ஏற்படுத்திய சேதங்களுக்கு ஈடான சேதத்தை ஒரு மில்லியன் டொலருக்கும் குறைவான செலவுடன் ஈரானின் ஷாஹிட்-136 ஆளிலிகள் செய்தன. இஸ்ரேலின் Smash 2000 Plus System இரசியாவின் ஆளிலிப் பாவனையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

வல்லரசுகளின் போட்டிக்களமாகிய உக்ரேன் படைக்கலன்களைத் தேர்விற்கு உள்ளாக்கும் களமாகவும் மாறிவருகின்றது. பலியாகிக் கொண்டிருப்பதும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிக் கொண்டிருப்பதும் அப்பாவி உக்ரேனியர்களே!

Share.
Leave A Reply

Exit mobile version