உக்ரேன் மீதான படையெடுப்பு ஒரு வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. கிரிமியப் பாலம் மீதான உக்ரேனின் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா ஆரம்பித்த நீண்ட தூர எறிகணை தாக்குதல்களால் உக்ரேனின் மின்சார சேவை முற்று முழுதாக செயலிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மின் விநியோகம், எரிவாயு விநியோகம் என்பவை தடைப்பட்டுள்ள சூழலில் பொது மக்கள் பெருந்துயரத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தாமதமாக கிடைத்த செய்திகளின்படி, உக்ரேனின் சக்தித் துறையில் சுமார் 40 விழுக்காடு ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அதேவேளை இத்தகைய தாக்குதல்களை மேலும் தொடரும் உத்தேசத்துடனேயே ரஷ்ய படைத்துறை உள்ளதாகவும் தெரிகின்றது.
இந்நிலையில் மேலும் இலட்சக்கணக்கான உக்ரேன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை தோன்றியுள்ளது.
ஐரோப்பாவை பொறுத்தவரையில் பனிக் காலத்தை கழிப்பதற்கு இல்லங்களில் சூடேற்றிகள் இருப்பது அவசியமானது. இல்லாவிடில், நோய்வாய்ப்படாமலேயே மனிதன் குளிரில் விறைத்து மரணத்தை தழுவும் நிலை உருவாகும்.
எனவே, உக்ரேன் மக்கள் ஆகக் குறைந்தது பனிக் காலம் முடியும் வரையிலாவது நாட்டை விட்டு வெளியேறி, தமது உயிர்களை காத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது.
போரின் ஆரம்ப நாட்களில் தாம் கைப்பற்றிய கார்சான் நகரை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில் அந்த நகர் மீண்டும் உக்ரேன் வசமானாலும் கூட போர்முனை மிகவும் மந்தமாக இருப்பதாகவே தெரிகிறது.
பனிக்காலத்தில் படை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமானது. குளிரான காலநிலையில் இராணுவத்தினர் முன்னேறிச் செல்வதில் உள்ள சிரமங்களுக்கும் அப்பால் பனிப் பொழிவுகளின்போது, முன்னேறும் படையினருக்குத் தேவையான விமானப் படை உதவிகளையோ எறிகணை உதவிகளையோ துல்லியமாக வழங்க முடியாது.
தவிர, கனரக வாகனங்களுக்கான எரிபொருள்கள் உறைந்துபோகும் அபாயமும் உள்ளது.
ஆனால், இத்தகைய சூழலிலும் வெற்றிகரமாக போரிடும் ஆற்றலையும் அனுபவத்தையும் இரண்டு நாடுகளினதும் படையினர் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ரஷ்ய படைகள் இத்தகைய போரில் அதிக அனுபவத்தை கொண்டுள்ளனர் என்பது இரகசியமான செய்தியல்ல.
எனவே, அடுத்து வரும் மாதங்கள் தற்போது உள்ளதை போலவே மந்தமான போர்முனைகளைக் கொண்டதாக விளங்குமா அல்லது மேற்குலகு உட்பட இராணுவ வல்லுநர்கள் எதிர்பார்க்கும் வகையில் ரஷ்யா புதிய உத்தியுடன் உக்கிரமான படை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மறுபுறம், உக்ரேனில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படும் அகதிகளை வரவேற்க ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.
ஐ.நா. சபையின் தகவல்களின் பிரகாரம், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வரையான உக்ரேனியர்கள் அடுத்துவரும் நாட்களில் நாட்டை விட்டு வெளியேறலாம் என தெரிகின்றது.
ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக உள்ள நிலையில் மேலும் இரு மடங்கு எண்ணிக்கையானோரின் வெளியேற்றம் என்பது அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள நாடுகளுக்கு பெரும் சுமையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
உக்ரேன் அகதிகளை பராமரிப்பதில் உள்ள பொருளாதாரச் சுமை என்பதற்கும் அப்பால், போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட உணவு மற்றும் பாவனைப் பொருட்களின் விலையேற்றம் என்பவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போருக்கான தமது ஆதரவை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பல மாதங்களையும் கடந்து நீடிக்கும் போர், போர் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் உண்மைக்கு மாறான செய்திகள், உக்ரேன் தரப்பில் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் என்பவை ஐரோப்பிய மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.
அனைத்துக்கும் அப்பால் வேறு செய்தி மூலங்களில் இருந்து உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளும் மக்கள் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதுடன், ரஷ்யா தெரிவிப்பதை போன்று நேட்டோ இராணுவ கூட்டணியின் திட்டமிட்ட தொடர்ச்சியான ஆத்திரமூட்டலே ரஷ்யப் படையெடுப்புக்கு காரணம் என நம்பவும் தலைப்பட்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, அண்மையில் ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றை ஆதாரமாக கொள்ளலாம்.
சோசலிச நாடாக முன்னர் விளங்கிய கிழக்கு ஜெர்மனி பகுதியில் இவ்வாறு கருதுவோரின் எண்ணிக்கை 59 சதவீதமாக உள்ளது.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டோரில் மூன்றிலொரு விழுக்காடு மக்கள் வரலாற்றுக் காலம் முதலே ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரேன் இருந்து வந்துள்ளது என கருதுவதுடன், உக்ரேன் மண்ணில் அமெரிக்கா அபாயகரமான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களையும் கொண்டிருந்தது என்பதையும் நம்புகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதே நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தியதை விடவும் அதிக எண்ணிக்கையானோர் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தமை நோக்கத்தக்கது.
கிட்டத்தட்ட இதேபோன்ற மனோநிலையே ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் உருவாகி வருகின்றது.
குறிப்பாக, உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கும் விடயத்தில் மக்களின் ஆதரவு குறைந்து வருகின்றது. இந்த ஆதரவு இத்தாலியில் 41 சதவீதமாகவும், ஜெர்மனியில் 57 சதவீதமாகவும், பிரான்ஸில் 62 சதவீதமாகவும் உள்ளது.
மறுபுறம், அதிகரித்துவரும் விலைவாசிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் பேரணிகளும் இடம்பெற தொடங்கியுள்ளன.
ஒக்டோபர் 29இல் செக் குடியரசின் தலைநகர் பராக்கில் இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இத்தனைக்கும் செக் குடியரசு, உக்ரேன் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றமை நோக்கத்தக்கது.
நவம்பர் 5இல் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்ட மக்கள் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரியதுடன், உக்ரேனுக்கான ஆயுத வழங்கலை முடிவுக்குக் கொண்டுவருமாறும் கோரினர்.
இதுபோன்ற பேரணிகள் ஜெர்மனியின் பல நகரங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போராக உக்ரேன் போரை புறமொதுக்கிவிட முடியாது. ஏனெனில், உலகின் அனைத்து நாடுகளையும் ஏதோவொரு விதத்தில் சிறதளவேனும் பாதிக்கும் ஒரு போராகவே இது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அமைதியை, சமாதானத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் பெருவிருப்பு.
ஆனால், சாதாரண மக்களின் இந்த விருப்பை வல்லரசு நாடுகள் புரிந்துகொள்வதாக இல்லை. அவை இன்னமும் தங்களின் வல்லாதிக்க கனவுகளிலேயே பயணம் செய்ய விரும்புகின்றன.
இத்தகைய கனவுகளால் வீணாவது பொது மக்களின் வரிப் பணம் மாத்திரமல்ல, வெகுமக்களின் சமாதான விருப்பும்தான்.
(சுவிஸிலிருந்து சண் தவராஜா)