Site icon ilakkiyainfo

ரணிலில் இராஜதந்திரம்

 

 

உலகத்தின் போக்கை சரியாக கணக்கிட்டு காய்களை நகர்த்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கில்லாடி.

2001இல் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு சர்வதேச அளவில் உருவாவதைச் சரியாக கணிப்பிட்டு, விடுதலைப் புலிகளுக்கு வலை விரித்தார்.

விடுதலைப் புலிகள் அப்போதைய அந்தச் சூழலை சரியாக மதிப்பீடு செய்யத் தவறியதால் தான், 2009இல் நந்திக்கடலில் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது.

சர்வதேச அரசியல் சூழமைவுகளை விடுதலைப் புலிகள் கவனத்தில் கொள்ளாமல், அதனை தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் உலகம் அதனை வேறு விதமாக பார்த்தது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு இணையாக விடுதலைப் புலிகளையும் பட்டியல் போடுகின்ற நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவே அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகள் தெரிந்தோ தெரியாமலோ அதில் கால் வைக்கப் போய், அழிவுகளில் முடிந்து போனது.

இப்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து, ஆட்சியைப் பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

அதில் முதன்மையானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தியெடுப்பது தான்.

அவரது பதவிக்காலம் முடிவதற்குள், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டால் தான், அடுத்த பதவிக்காலத்துக்காக குறிவைக்கலாம்.

பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என்று தன்னிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

ஆனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு இப்போது எதிர்பார்த்திருக்கின்ற முக்கியமான வழிமூலம், சர்வதேச நாணய நிதியம் மட்டும் தான்.

மற்றபடி எல்லா நாடுகளும் கைவிரித்து விட்டன. சர்வதேச நாணய நிதியம் ஊடாக, 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பக் கட்ட இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதும், அதனை இறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்வதில் இழுபறி நீடிக்கிறது.

கடன் வழங்குநர்களுடன் குறிப்பாக சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதில் காணப்படும் இழுபறிகளால் தான், இந்த நெருக்கடி தோன்றியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வது உறுதியாக இருந்தாலும், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தான் முக்கியமான- பிரச்சினைக்குரிய விவகாரமாகும்.

இந்த தருணத்தில் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலகம் ஒன்றை திறந்து வைத்திருக்கிறார்.

இது நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது. அதனை அடிப்படையாக வைத்து உண்மையிலேயே அந்த தீர்வை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது, அவ்வாறான ஒரு முயற்சியில் அரசாங்கம் இறங்கி விட்டது என்பதைக் காட்டுவதற்காகவோ -இந்தச் செயலகம் திறந்து வைக்கப்பட்டிருக்கலாம்.

இதைவிட அவர் வடக்குப் பயணத்தில் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பனவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தியிருக்கின்றார்.

எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில், பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட வறிய நாடுகளுக்கு, நிதியுதவிகளை வழங்க அபிவிருத்தியடைந்த நாடுகள் இணக்கம் தெரிவித்திருந்த போது தான், ஜனாதிபதி மன்னாரில் இந்த பசுமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் மற்றும் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு விரைவாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்போது, ஜனாதிபதி, வலியுறுத்தியிருக்கிறார்.

கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை முன்னெடுக்கவும் மீன்பிடி படகுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் வலுச்சக்தி முறையை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் வடக்கின் பொருளாதாரத்திலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடல்நீர் சுத்திகரிக்கும் திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வறட்சியான காலநிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்றும், நாட்டின் வன வளம் மற்றும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிய நீர்மின் திட்டங்களாக மாற்றக்கூடிய நீர்ப்பாசனக் கால்வாய்களை அடையாளம் காணுமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது உலகத்தின் கவனத்தை வடக்கின் மீது திருப்புகின்ற ஜனாதிபதியின் உயர்மட்ட இராஜதந்திரம்.

போரின் போதும் சரி, போருக்குப் பின்னரும் சரி, வடக்கும், கிழக்கும் சர்வதேச கவனிப்புக்குரிய இடங்களாகவே இன்றைக்கும் இருந்து வருகின்றன.

போரினால் சீரழிந்த வடக்கு, கிழக்கிற்கு உதவிகளை வழங்குவதற்கு இன்றைக்கும் சர்வதேச சமூகம் தயாராக இருக்கிறது.

அதற்கான திட்டங்களைத் தான் அரசாங்கம் முன்வைக்காமல் இருந்து வந்தது.

அதேவேளை இன்று உலகத்தை அச்சுறுத்தும் முக்கியமான பிரச்சினையாக காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் என்பன உள்ளன.

இவற்றின் காரணமாக, உலகளாவிய ரீதியாக இயற்கை அழிவுகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் குறைப்பதற்கு பசுமைத் திட்டங்களை நோக்கி உலகம் செல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

அண்மைய பருவநிலை மாநாடும் கூட அதனை இலக்கு வைத்து தான் இடம்பெற்றது.

இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்னரே, ரணில் விக்கிரமசிங்க பருவ நிலை மாற்றம் சார்ந்த சாதகமான சமிக்ஞைகளை உலகத்துக்கு வெளிப்படுத்த தொடங்கி விட்டார்.

அதனைச் சார்ந்து அவர் இரண்டு வெளிநாட்டவர்களை தமது ஆலோசகராக நியமித்திருந்தார்.

ஒருவர் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான முஹமட் நசீட். அவர், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பருவநிலை மாநாட்டுக்கும் சென்று வந்தார்.

அவரை ஏன் ரணில் விக்கிரமசிங்க ஆலோசகராக நியமித்தார், அவரது உதவியை ஏன் பெற்றுக் கொள்கிறார் என்ற குழப்பம் இன்னமும் பலருக்கு உள்ளது.

அதுபோலத் தான், தாம் பிரதமராக இருந்த போது விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தவும், போர் நிறுத்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கும், நோர்வேயினால் விசேட தூதுவராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹெய்மை, கொழும்புக்கு அழைத்து அவரையும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆலோசகராக நியமித்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.

எதற்காக இவரை அழைத்து இந்தப் பதவியைக் கொடுத்தார் என்ற கேள்வி அப்போது பலருக்கு இருந்தது.

எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர். அதற்கான ஐ.நா.வின் தூதுவராகப் பணியாற்றியவரும் கூட.

எனினும், அவர் பல்வேறு நாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டு 5 மில்லியன் டொலர்களை வீணடித்தார் என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து ஐ.நா பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

எரிக் சொல்ஹெய்ம் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபட்டவர். இப்போது தமிழக அரசுக்கும் ஆலோசகர். அவரை காலநிலை மாற்றம் குறித்த ஆலோசகராக நியமித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இரட்டை இலக்கை அடைய முனைகிறார்.

ஒன்று வடக்கை நோக்கிய தீர்வுகள் மற்றும் முதலீடுகள். இரண்டு இப்போது உலகம் உற்றுக் கவனிக்கும், அதிகளவில் ஆதரவளிக்கும் பசுமைத் திட்டங்கள்.

இந்த இரண்டு இலக்கையும் அடையும் நோக்கில் தான் ரணில் விக்கிரமசிங்கவின் இப்போதைய வடக்கு பயணம் இடம்பெற்றிருக்கிறது.

விடுதலைப் புலிகளை மடக்கிப் போடுவதற்கு அவர் முன்கூட்டியே வியூகம் வகுத்தது போலவே தான், இப்போது சர்வதேச உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அவர் வடக்கு மற்றும் பசுமைத் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்.

அவரது இந்த உத்தியும் சாதகமான பலனைப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால், அது தமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-என்.கண்ணன்-

Exit mobile version