Site icon ilakkiyainfo

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா – அமெரிக்கா

இலங்கை தன் நண்பன் என சீனா குறிப்பிட்டுக் கொள்கிறது. இதனை இலங்கை மக்கள் செயல்வடிவில் காண எதிர்பார்த்துள்ளார்கள்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தாமதப்படுத்தாமல் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கைக்கான உத்தரவாதம் வெகுவாக அவசியம். சர்வதேச நாணய நிதியம் விவகாரத்தில் சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக அல்ல என அமெரிக்கா சீனாவை சாடியுள்ளது.

சீனா – இலங்கை நல்லுறவில் தலையிடுவதை விட இலங்கைக்கு அமெரிக்கா உண்மையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் இலங்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது யார் என சீனா அமெரிக்காவின் கருத்திற்கு பதிலடி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இலங்கை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள பின்னணியில் இலங்கையை முன்னிலைப்படுத்தி சீனாவும் அமெரிக்காவும் முரண்பட்டுக் கொள்வதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் 200 மில்லியன் ரூபா செலவில் 75 ஆவது சுதந்திர தினம் கௌரவமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர மாற்று வழிமுறைகள் ஏதும் இல்லை என்பது அரசாங்கத்தின் தாரக மந்திரமாக காணப்படுகிறது.

நாணய நிதியத்தின் நிதியுதவி ஒத்துழைப்பு எதிர்வரும் மாதம் 31 ஆம் திகதிக்குள் கிடைக்கப்பெறும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எதிர்பார்ப்பு நிறைவேறாவிடின் 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் காணப்பட்ட வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறலாம் என அரசாங்கம் எதிர்வு கூறியுள்ளது.

பங்காளாதேஷ் நாட்டின் பொருளாதார நிலைமை இலங்கையின் பொருளாதார பாதிப்பு வரை தீவிரமடைவதற்கு முன்னர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியதன் பின்னர் பங்களாதேஷ் சர்வதேச நாணய நிதியத்தை நாடி 3.3 பில்லியன் டொலர் நிதியுதவிக்கான அனுமதியை அண்மையில் பெற்றுக்கொண்டது.

இலங்கையின் இரு தரப்பு கடன் வழங்குநர்களில் 53 சதவீதமான கடன் சீனாவிற்கு வழங்க வேண்டும்.

இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சீனாவின் சீனாவின் ஒத்துழைப்பு சான்றிதழ் அவசியமாகும்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த இரு வருட கால அவகாசம் வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அந்த இரு வருட கால அவகாசம் எவ்வகையினா திட்டமிடலை அடிப்படையாக கொண்டது என்று இதுவரை குறிப்பிடப்படவில்லை.

சீனாவின் இருந்த இரண்டு வருடகால காலவகாசம் திருப்திகரமானதாக அமையாது என பல்வேறு தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

சீனாவின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி சீனா – அமெரிக்கா முரண்பட்டுக் கொள்வதை சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் சீனாவின் இரண்டுகால ஆண்டு காலவகாசம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தினார்.

துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் கொள்ளுப்பிட்டி மூவன்பிக் ஹோட்டலில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி’ இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடன் மறுசீரமைப்பு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் சீனாவின் உதவி இலங்கைக்கு போதுமானதாக இல்லை’ என்றார்.

இச்சந்தர்ப்பத்தில் நூலண்ட் இந்தியாவின் ஒத்துழைப்பை வரவேற்றுள்ளமை அவதானிக்க முடிகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் தற்போது மிக நெருக்கமாக செயற்படுவதை பல்வேறு விவகாரங்களில் அறிய முடிகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ‘இலங்கை தன் நண்பன் என சீனா குறிப்பிட்டுக் கொள்கிறது.இதனை இலங்கை மக்கள் செயல்வடிவில் காண எதிர்பார்த்துள்ளார்கள்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தாமதப்படுத்தாமல் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலங்கைக்கான உத்தரவாதம் வெகுவாக அவசியம்’என சர்வதேச ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்காக அமெரிக்கா தூதுவரின் கருத்திற்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் காட்டமான பதிலை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் சீனா குழப்பம் ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் அமெரிக்கப்பிரதிநிதி தம்மைத்தாமே சுயபரிசீலனை செய்துபார்க்கவேண்டும் என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், எமது அபிவிருத்தியில் யார் குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள் என்பதை எந்தவொரு வெளிநாட்டினதும் தலையீடின்றிப் புரிந்துகொள்ளும் அளவிற்கு சீன மற்றும் இலங்கை மக்களுக்குத் திறன் இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

‘சீனா, சீனா, சீனா!’ அமெரிக்க  தூதுவர்  இந்த மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்திருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் சீனா ‘குழப்பம் விளைவிப்பதாகக்’ குற்றஞ்சாட்டுகின்றார்.

உரியவாறான அடிப்படைகள் எவையுமற்ற இத்தகைய வாதத்தை முன்வைப்பதற்கு முன்னதாக அமெரிக்கப்பிரதிநிதி தனக்குள்ளேயே இந்தக் கேள்விகளைக் கேட்டுப்பார்த்திருக்கவேண்டும்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கொள்கைத் தீர்மானங்களில் வீட்டோ அதிகாரத்துடன்கூடிய அதிக பங்குகளை வைத்திருப்பது யார்? 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை அச்சிட்டது யார்?

இலங்கையின் வெளியகக்கடன்களில் உயர் வட்டிவீதத்துடன்கூடிய 40 சதவீதமான கடன்களுக்குச் சொந்தக்காரர்களான தனியார் கடன்வழங்குனர்கள் யார்?

இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் இலங்கைக்கு எதிராகத் தமது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தவர்கள் யார்?’

இலங்கை மக்களுக்கு உதவுவதாகக் கூறுகின்ற அமெரிக்கா அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பதை அறிந்துகொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் கொண்டிருக்கக்கூடும்.

சர்வதேச உதவிக்கான அமெரிக்க முகவரகத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகளுக்கு முன்னரான ‘அரசியல் நிபந்தனைகள்’ என்னவென்றும் அவர்கள் கேள்வி எழுப்பக்கூடும்.

அமெரிக்கப்பிரதிநிதி முதலில் தம்மைத்தாமே சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்பதாக பிறர்மீது குற்றஞ்சுமத்துவது கபடமான செயலல்லவா?

இலங்கைக்கு உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா இதுவரையில் ஏன் செயற்திறனான தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை?

அல்லது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதை விடுத்து, வருடாந்தம் அச்சிடுகின்ற டொலர்களில் பெருந்தொகையான டொலர் நிதியை ஏன் இலங்கைக்கு வழங்க முன்வரவில்லை?

எனவே எமது அபிவிருத்தியில் யார் குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள் என்பதை எந்தவொரு வெளிநாட்டினதும் பிரசங்கமின்றிப் புரிந்துகொள்ளும் அளவிற்கு சீன மற்றும் இலங்கை மக்களுக்குத் திறன் இருக்கின்றது என சீன தூதரகம் கடுமையாக சாடியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட சீனா தொடர்பில் குறிப்பிட்ட கருத்திற்கு சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் சாளர்  மாவோ நிங் ‘சீனா – இலங்கை நல்லுறவில் தலையிடுவதை விட இலங்கைக்கு அமெரிக்கா உண்மையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கைக்கான கடன் நிவாரணத்திற்கான உத்தரவாதத்தை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி வழங்கியுள்ளது. இதனை இலங்கையும் ஏற்றுக்கொண்டு சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது என பதிலளித்துள்ளார்.

பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு சீனா வழங்கும் ஒத்துழைப்பை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பல சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்துள்ளமை அவதானிக்க முடிகிறது.

இலங்கை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு மேம்படுவதையும், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான முரண்பட்ட கருத்து தாக்குதல்கள் தீவிரமடைவதும் நீண்டு செல்கிறது.

Exit mobile version