இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார்.
செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார். ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்; வேதியியல் குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட சிரியாவைப் பாதுகாத்தார்.
எகிப்தை மீண்டும் தன் பக்கம் இழுத்தார்; குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் கோலகலமாக அரங்கேற்றினார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைய முயன்ற உக்ரேனைத் தடுக்கும் முயற்ச்சியில் அவர் ஆப்பிழுத்த குரங்கு போல் ஆனாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2004-ம் ஆண்டில் இருந்து நேட்டோ நாடுகளும் இரசியாவும் உக்ரேனில் யார் ஆட்சியில் இருப்பது என்பது தொடர்பாக திரைமறைவு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இரசிய ஆதரவு விக்டர் யனுக்கோவிச்சிற்கு எதிராக உக்ரேனிய மக்களை கிளர்ச்சி செய்யப்பண்ணி அவரை உக்ரேனை விட்டு விரட்டுவதில் நேட்டோ நாடுகளின் சதி இரசியச் சதியை வெற்றி கொண்டது.
இரசியா தலைமையிலான யூரே ஏசியன் பொருளாதார ஒன்றியத்தில் உக்ரேனும் ஓர் உறுப்பு நாடாக இருப்பது அவசியம் என்பதாலும் இரசியாவின் கடற்படைக்கு கிறிமியா அவசியம் என்றபடியாலும் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் உக்ரேன் மீது 2014 போர் தொடுத்து கிறிமியாவைக் கைப்பற்றியதுடன் உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கினார்.
இதன் பின்னரும் உக்ரேன் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் முயற்ச்சி தொடர்ந்த படியால் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரண்டாம் படையெடுப்பை நடத்தினார்.
உக்ரேன் மீதான புட்டீனின் 2022 படையெடுப்பு 2014 படையெடுப்பைப் போல் இலகுவானதாக அமையவில்லை.
அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரேனியப் படையினருக்கு 2014இன் பின்னர் தீவிர பயிற்ச்சி வழங்கியிருந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களையும் வழங்கியிருந்தனர்.
பிழையாகிப் போன திட்டங்கள்
உக்ரேன் மீது சிறப்புப் படை நடவடிக்கை என்னும் பெயரில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் செய்யும் ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும் போது புட்டீன் போட்ட பல திட்டங்கள் பிழைத்துப் போயின என்று மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து கொண்டிருந்தாலும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக இரசியாவால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புட்டீனின் நம்பிக்கை வீண் போகவில்லை.
2022 பெப்ரவரி ஆரம்பமான உக்ரேன் போரில் ஒரு இலட்சம் படையினரைப் பலிகொடுத்தும் தனது போர்த்தாங்கிகளில் அரைவாசியை இழந்தும் இரசியவால் காத்திரமான வெற்றி எதையும் பெற முடியவில்லை.
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரை இழந்தும் மின்சார உற்பத்தியில் 40% சிதைந்தும் பல்லாயிரக் கணக்கான வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு எதிராக உறுதியாகப் போராடிக் கொண்டிருப்பதால் எத்தரப்பு போரில் வெல்லும் எப்போது போர் முடியும் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது.
புட்டீன் எண்ணிய எண்ணமெங்கே?
ஆகக் கூடியது இரு வாரங்களில் அல்லது ஆகக் குறைந்தது மூன்று நாட்களில் முடிக்க புட்டீன் திட்டமிட்ட உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கை ஓராண்டாகியும் அவரது இலக்கு எட்டப்படவில்லை.
இரசியாவின்று கடுமையான இழப்பை ஏற்படுத்துவதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. 142,860 இரசியப் படையினரைக் கொன்றதாகவும் மூன்று இலட்சம் இரசியப்படையினரைக் காயப்படுத்தியதாகவும் உக்ரேனியர்கள் சொல்கின்றனர்.
மேலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு ஏற்படுத்திய இழப்புக்கள்:
போர் விமானங்கள் 298
உலங்கு வானூர்திகள் 287
போர்த்தாங்கிகள் 3310
கவச வண்டிகள் 6545
சேணேவிகள் (Artilleries) 2327
பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் 469
படகுகள் 18
எரிபொருள் தாங்கிகளும் மற்ற ஊர்திகளும் 5196
விமான எதிர்ப்பு குண்டுச் செலுத்திகள் 243
ஆளிலி விமானங்கள் 2016
வழிகாட்டல் ஏவுகணைகள் 873
ஒராண்டு இறுதியில் உக்ரேன் சென்ற ஜோ பைடன்
20-02-2023 அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேனுக்கு ஒரு பயணத்தை செய்திருந்தார்.
உக்ரேனிய மக்களையும், படையினரையும் உற்சாகப் படுத்தும் நோக்கமாக அவர் தனது பயணத்தை மேற் கொண்டிருக்கலாம்.
மேலும் 500மில்லியன் டொலர் உதவி உக்ரேனுக்கு கிடைக்கவிருக்கின்றது. ஹிமார்ஸ் ஏவுகணைச் செலுத்திகள், ஜவலின் ஏவுகணைகள், சுடுகலன்கள் என பல தரப்பட்டவற்றை உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்க முன்வந்துள்ளது.
ஆனால் உக்ரேன் தற்போது வற்புறுத்தும் F-16 போர் விமானங்கள் வழக்கப்படவில்லை. ஏற்கனவே 700 போர்த்தாங்கிகள் கவச வண்டிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட சேணேவிகள் (Artilleries), ஐம்பதிற்கு மேற்பட்ட மேம்பட்ட ஏவூர்தி செலுத்திகள் (Rocket Launchers) போன்றவற்றை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியதாக உக்ரேனில் வைத்து அமெரிக்கத் தலைவர் ஜோ பைடன் சொன்னார்.
உக்ரேனை இரசியா கைப்பற்றினால் போலந்து, ஹங்கேரி, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்.
அத்துடன் உலகின் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் இரசியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். இதனால் இந்த நாடுகள் உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்குகின்றன.
1. தன்னால் பொருளாதாரத் தடைக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியும்.
2. இரசியர்கள் தனக்கு ஆதரவாக நிற்பார்கள் என புட்டீன எதிர்பார்த்தது நடக்கின்றது. இரசிய மக்களின் 80% ஆதரவு அவருக்கு உள்ளது. இது எந்த ஒரு முன்னணி நாட்டுத் தலைவருக்கும் இல்லாத ஆதரவு.
உண்மை அறிய முடியாத போர்
உக்ரேன் போரின்போது:
1. பொய் தாராளமாகச் சொல்லப்படுகின்றது.
2. இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு.
3. உக்ரேனியப் பொருளாதாரம் 2022இல் 30% வீழ்ச்சி. 30% மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
4. உணவும் பொருள் விலையும் எரிபொருள் விலையும் உலகில் அதிகரித்துள்ளது.
5. இரசியாவில் இருந்து முளைசாலிகளும் முதலீட்டாளர்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
புட்டீன் வெற்றி பெற்றால்
1. மேற்கு நாடுகள் என அழைக்கப்படும் வட அமெரிக்க மற்றும் மேர்கு ஐரோப்பிய நாடுகளும் நிலை நிறுத்த முயலும் விதிசார் உலக ஒழுங்கிற்கு பேரிழப்பு
2. தேர்தல் மூலம் வெற்றி பெறும் தன்முனைப்பு ஆட்சியாளர்களுக்கு பெரும் ஊக்கம்.
3. சீனா தைவானைக் கைப்பற்ற ஊக்குவிக்கப்படலாம்
4. அணுக்குண்டுகளை வைத்துக் கொண்டு மிரட்ட நினைப்பவர்களுக்கு ஊக்கம்.
5. இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுக்க மாட்டாத நிலையில் உள்ளர்.
6. போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.
7. எத்தரப்பு வெற்றி பெறும் என்று சொல்ல முடியாத நிலை
8. எப்போது போர் முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாத நிலை.
9. இரசியாவிடம் படைக்கலன் தட்டுப்பாடு மோசமடைகின்றது. 2023 ஜூன் மாதம் போர் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதைத் தவிர்க்க சீனாவை புட்டீன் மனம் மாறச்செய்து சீனாவிடமிருந்து படைக்கலன்களை இரசியா வாங்க வேண்டும்.
10. நேட்டோ நாடுகளின் சுடுகலன் தட்டுப்பாடு உருவாகின்றது. அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
கருங்கடல் தானிய முன்னெடுப்பு (Black Sea Grain Initiative)
உக்ரேன் போரில் இத்தனை விடாப்பிடிகளுக்கும் நடுவில் இரண்டு நாடுகளும் உணவு ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளன.
இரசியாவில் இருந்தும் உக்ரேனில் இருந்தும் கருங்கடலூடாகச் செல்லும் உணவுக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் பங்களிப்புடன் செய்து கொண்ட பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொண்டன. உக்ரேனும் இரசியாவும் துருக்கி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடாக பேச்சு வார்த்தைகள் பலவற்றை நடத்தி வருகின்றன.
பெலரஸ் நாட்டிலிருந்து உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி ஆட்சி மாற்றம் செய்யும் நோக்கத்துடன் முன்னேறிய இரசியப் படையினரை தாம் விரட்டியதாக உக்ரேனியர்கள் பெருமையடைவதுடன் போரில் தம்மால் இரசியாவைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அறுபது கிலோ மீட்டர் நீளமான போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் கொண்ட இரசியாவின் பெரும் படையணி 2022 மார்ச் மாதம் உக்ரேனின் வட பகுதியில் இருந்து பின்வாங்கியது.
இரண்டு வாரங்களுக்குள் உக்ரேன் போரை முடித்து விடலாம் என நம்பிய இரசியர்களுக்கு ஏமாற்றத்தையும் பலநாட்கள் உக்ரேனியப் படையினர் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என எதிர்பார்த்த நேட்டோ நாடுகளுக்கு வியப்பையும் உக்ரேனியர்கள் கொடுத்தனர். உக்ரேனின் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் குடிசார்-கட்டுமானங்களில் மீதும் புட்டீன் நடத்தும் அட்டூழியத் தாக்குதல்கள் அவரை ஒரு போர்க்குற்றவாளியாக்கி விட்டது.
சிஐஏயின் பத்து விழுக்காடு தள்ளுபடி
அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏயின் இயக்குனர் பில் பேர்ண்ஸ் இரசிய jஉளவுத்துறைப் பொறுப்பாள சேர்கி நருஸ்க்கின்னை 2022 நவம்பரில் இரசியத் தலைநகர் மொஸ்க்கோவில் சந்தித்து உக்ரேன் போரை முடிவிற்கு கொண்டுவர பேச்சி வார்த்தை நடத்தினார்.
அவரது பயணத்தில் உக்ரேன் தொடர்பாக தாங்கள் உக்ரேன் இல்லாமல் பேச முடியாது என்பதால் இரசியா அணுக்குண்டுகளைப் பாவித்ஹ்டால் அமெரிக்காவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசினோம் என்றார் சிஐஏ இயக்குனர் பில் பேர்ண்ஸ். ஆனால் அவர் இரசியா உக்ரேனின் நிலப்பரப்பில் 10%ஐ வைத்துக் கொண்டு போரை நிறுத்துவதை அமெரிக்கா விரும்புவதாக இரசியாவிடம் அவர் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இரசியா அதற்கு தயாராக இல்லை. முழு டொன்பாஸ் பிரதேசமும் கிறிமியா குடா நாடு இரசியாவிற்கு சொந்தமானது என்பதே இரசியாவின் இறுக்கமான நிலைப்பாடாக இருக்கின்றது.
மழுங்குமா புட்டீனின் எரிபொருள் படைக்கலன்?
இரசியப் பொருளாதாரம் புட்டீன் உக்ரேன் மீது தொடுத்த போரினால் பாதிப்படையாமல் உலக எரிபொருள் விலை அதிகரிப்பு கை கொடுத்தது.
2022இறுதி 2023ஆரம்ப மாதங்களில் உலக குளிர்கால நிலை எதிர்பார்த்ததிலும் பார்க்க மிதமானதாக இருந்தது.
அத்துடன் மக்கள் வீட்டில் இருந்து பணிசெய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் 2023உலக எரிபொருள் விலை பெரிதளவில் அதிகரிக்காமல் நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு நாடுகளின் பணவீக்கம் சீர் செய்யப்பட வாய்ப்புண்டு. உக்ரேன் தோற்கடிக்கப் பட முடியாத நாடு என நேட்டோ நாடுகள் நம்புகின்றன.
புட்டீனை அடக்க உக்ரேன் சிறந்த போர் முனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. 2022இல் இரசியாவின் பொருளாதாரம் 2.2%ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023இல் 0.3% மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உக்ரேனுக்கு தொடர்ச்சியான் உதவிகள்
நேட்டோ நாடுகள் தாம் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களின் தரத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் படைக்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரசியப் படையினரால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் புட்டீன் 2023 பெப்ரவரி 21-ம் திகதி ஆற்றிய உரையில் அவர் உக்ரேனைக் கைப்பற்றும் முயற்ச்சியில் பின்வாங்கப் போவதில்லை என மார் தட்டியுள்ளார்.
ஆனால் உக்ரேன் போர்க்கள சூழல் அவருக்கு உகந்ததாக இல்லை. ஆப்கானிஸ்த்தானில் பத்து ஆண்டுகளில் சோவியத் படையினருக்கு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க உக்ரேனில் ஓராண்டுப் போரில் இரசியாவிற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகள் இனி உக்ரேனை தமது புதிய படைக்கலன்களை பாவிக்கும் தேர்வுக் களமாக மாற்றினால் இரசியா கிறிமியாவையும் இழக்கும் நிலை ஏற்படலாம்.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் மஹ்மூட் நகரைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இரசியாவின் கூலிப்படைகள் அளவிற்கு அதிக உயிரழப்பை சந்தித்துள்ளன.
இரசியக் கூலிப்படையின் தளபதி இரசியாவின் படைத்தளபதி மீது குற்றம் சுமத்துகின்றார். கூலைப்படைத் தளபதியின் கைகள் ஓங்குவது புட்டீனிற்கே உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
கூலிப்படைத் தளபதி புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்ச்சிக்கலாம். புட்டீனைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் அவருக்கான ஆதரவைப் பேணுவார்கள் எனச் சொல்ல முடியாது.
இரசிய மக்களின் பெரும்பகுதியினர் புட்டீனிற்கு ஆதரவாக தற்போது உள்ளனர். போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் அந்த ஆதரவுத் தளம் வலிமை இழக்கின்றது. சீன அதிபர் 2023 மார்ச் மாதம் இரசியாவிற்கு செய்யவிருக்கும் பயணத்தில் இரசியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்ய இணங்காவிடில் புட்டீனின் நிலை வலிமை மிகவும் குறையலாம்
அணுக்குண்டு மிரட்டல்
புட்டீன் அடிக்கடி விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல் உலகின் பெரும்பகுதி அழிவை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அதை அவர் கைவிடவில்லை.
இந்திய சீன ஆட்சியாளர்கள் இந்த அணுக்குண்டு மிரட்டலையும் போர் நீடிப்பதையும் விரும்பவில்லை. உலக அரங்கில் புட்டீனுக்கு காத்திரமான ஆதரவுத் தளம் இல்லை.
தனது எல்லையில் நேட்டோ நாடு இருக்கக் கூடாது என போரை புட்டீன ஆரம்பித்தார். ஆனால் இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணையவிருக்கின்றன.
முன்னாள் உளவாளியான புட்டீன் அரசுறவியலாளராக வளரவில்லை.
-வேல்தர்மா-