ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இளம்பெண் ஒரு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பெண்ணின் உடலை குற்றவாளி பல்வேறு இடங்களில் துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கிறார்.
ஜம்முவின் சொய்புக் புட்காமைச் சேர்ந்த தன்வீர் அகமது கான். இவரது 28 வயது சகோதரி ஒருவர் கடந்த 8ம் தேதியிலிருந்து காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே இளம்பெண்ணுடன் யார் யாரெல்லாம் பழக்கத்தில் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்களை சேகரித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஷபீர் என்பவர் பக்கம் காவல்துறையினர் கவனம் திரும்பியுள்ளது.
ஷபீர் திருமண வரன்களை அமைத்துகொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இப்படிதான் தன்வீர் அகமதுவின் குடும்பத்திற்கு அறிமுகமாகியுள்ளார்.
தன்வீரும் தனது சகோதரிக்கு மாப்பிள்ளை வேண்டும் என்ற கேட்ட ஷபீர் ஓரிரு நாட்களில் ஒரு இளைஞரின் புகைப்படத்தை கொடுத்து, இந்த இளைஞன் குடும்பத்திற்கு சரிப்பட்டு வருவான் என்று கூறியுள்ளார்.
நட்பு
தன்வீர் வீட்டில் எல்லோரும் ஓகே சொல்ல அவரது சகோதரி மட்டும் மாப்பிள்ளை பிடிக்கில்லை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து திருமணம் தள்ளி போயுள்ளது. இந்நிலையில், ஷபீரும் இளைஞர்தான் என்பதால் தன்வீரின் சகோதரிக்கும் இவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வது, ஊர் சுற்றி பார்ப்பது என்று இருந்திருக்கின்றனர்.
ஆனால் ஷபீர் ஒரு கட்டத்தில் தன்வீரின் சகோதரியை காதலிக்க தொடங்கியுள்ளார். கடந்த ஒரு சில மாதங்களாக இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் கடந்த மாதம் ஷபீர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
காதல்
ஆனால் இதற்கு தன்வீரின் சகோதரி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, ஷபீருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
இதை எதிர்பார்க்காத ஷபீர் இது தொடர்பாக இளம்பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார். சண்டை தீவிரமடைந்த நிலையில், இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் கடந்த 8ம் தேதி ஷபீர் தன்வீரின் சகோதரியை செல்போனில் அழைத்து தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு இளம்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் இதுதான் கடைசி முறை என்றும், இதன் பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் ஷபீர் கெஞ்சியுள்ளார்.
கொலை
இதனையடுத்து தன்வீரின் சகோதரியும் இதற்கு ஒப்புக்கொள்ள 8ம் தேதி மதிய வேளையில் ஷபீரின் வீட்டிற்கு அவர் சென்றிருக்கிறார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஷபீர், அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் இளம்பெண் கறாராக மறுக்கவே இருவருக்கு இடையில் வாக்குவாதம் எழுந்திருக்கிறது.
இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷபீர் அருகில் இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்வீரின் சகோதரி அதே இடத்தில் சரிந்துவிழுந்துள்ளார.
டெல்லி
பாணியில் பின்னர் இவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அதனை அருகில் இருந்த காட்டில் புதைத்திருக்கிறார்.
சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் காவல்துறையினர் தற்போது ஷபீரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அருகிலிருந்த காட்டு பகுதியிலிருந்து தன்வீரின் சகோதரியின் உடல் பாகங்கள் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே டெல்லியில் இதேபோல ஒரு சம்பவம் நடந்த நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரிலும் இதேபோன்று கொடூர கொலை நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.