கிரிக்கெட் போட்டியில் பந்து எல்லையைத் தாண்டினால் அது பவுண்டரி எனப்படும். ஒரு பவுண்டரி அடித்தால், அதை அடிக்கும் வீரரின் கணக்கில் (அல்லது அணியின் கணக்கில்) நான்கு ரன்கள் சேரும்.

ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஒரு பவுண்டரி அடித்தால் சிலரது வங்கி கணக்குகளுக்கு ரூ.50 ஆயிரம் வருகிறது.

அதேபோல் ஒரு போட்டியில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர். இதன் மூலம் அணிக்கு 6 ரன்கள் கிடைத்தன. ஆனால், வேறு சிலருக்கோ, அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்தால் வேறு சிலருக்கு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என பணம் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து நடக்கும் பந்தய மோசடி இது.

ஐபிஎல் சீசன் கிரிக்கெட் பிரியர்களை மகிழ்வித்து வருகிறது. பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடக்கும் போட்டிகளைக் கண்டு ரசித்தனர்.

அதேநேரம், சிலர் இந்தப் போட்டிகளில் யார் அதிக ரன் அடிப்பார் எனப் பந்தயம் கட்டுகின்றனர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் பந்தயம் கட்டும் கும்பலை போலீசார் கைது செய்ததை அடுத்து இதுகுறித்த விவாதம் வேகமெடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் பந்தயம் கட்டும் சம்பவங்கள்

ஒவ்வோர் ஆண்டும் ஐபிஎல் சீசன் வரும்போது இதுபோன்ற பந்தயங்கள் மூலம் ஏராளமான பணம் கை மாறுகிறது.

இப்படி கட்டப்படும் பந்தயம் என்பது ஏதோ ஓர் அம்சத்தில் மட்டும் நின்றுவிடவில்லை என்கின்றனர் விளையாட்டு ஆய்வாளர்கள்.

மொத்த ஸ்கோர், இன்னிங்ஸ், விக்கெட்டுகள், தனிநபர் ஸ்கோர், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கியமான வீரர்கள் ஒரு போட்டியில் எவ்வளவு அடித்துள்ளனர், அவர் எத்தனை ரன்களில் வெளியேறுவார்,

பந்து வீச்சாளர்களால் ஒரு ஓவரில் எத்தனை ரன்கள் கொடுக்கப்படுகின்றன, இன்னிங்ஸின் கடைசி ஓவரின் கடைசி பந்து என்ன, முழுப் போட்டியிலும் எத்தனை பவுண்டரிகள் அடிக்கப்படுகின்றன, எத்தனை சிக்ஸர்கள் அடிக்கப்படுகின்றன,

பவர் பிளேவில் எத்தனை ரன்கள் எடுக்கப்படுகின்றன, ஒரு போட்டியில் எத்தனை வைடுகள் மற்றும் நோபால்கள் வீசப்படுகின்றன என ஒவ்வொரு விஷயத்திலும் சூதாட்டம் நடக்கிறது.

போட்டி நடைபெறும்போது மட்டுமின்றி, தொடங்குவதற்கு முன்னரும் பந்தயங்கள் கட்டப்படுகின்றன.

ஓர் அணியில் கடைசி 11 பேர் விளையாடுவது குறித்தும் பந்தயம் கட்டப்படுகிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் சில கேமிங் செயலிகளும் வெளிவந்துள்ளன. அவற்றில் நேரடி பந்தயம் நடந்து வருகிறது.

பந்தயம் குறித்து கிரிக்கெட் ஆய்வாளர் வெங்கடேஷ், பிபிசியிடம் பேசிய போது பல விஷயங்களை விளக்கினார்.

“ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சில செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வேறு வடிவத்தில் அவை பந்தயம் கட்டுபவர்களுக்குக் கிடைக்கின்றன.

கேமிங் செயலிகளுடன் ஏராளமான பந்தயம் கட்டும் செயலிகளும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பந்தயம் கட்டுபவர்களுக்கு இவை எளிதாகக் கிடைக்கும்.

சைபர் கிரைம் போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை கட்டுப்படுத்த முடியும். “போட்டியில் அடிக்கும் ரன்களுக்கு மட்டுமில்லாமல் டாஸ் போன்ற விஷயங்களிலும் பந்தயம் கட்டப்படுகிறது,” என்றார் அவர்.

ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில் பந்தயம் கட்டும் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ்வர் ரெட்டி மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் காட்டுகின்றனர்.

தலைகீழாக மாறி வரும் பண்ணை வீடுகள்

பந்தயம் என்றென்றும் பரிணாம வளர்ச்சியடைந்து வருவது சமீபத்திய சில வழக்குகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முன்னதாக, பார்கள், பப்கள் மற்றும் தனியார் வீடுகளில் பந்தயம் கட்டும் செயல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளை முற்றுகையிட்டு சூதாட்டத்தைத் தொடர்கின்றனர்.

இங்கு சுமார் 20 முதல் 25 சாதாரண போன்கள், நான்கு அல்லது ஐந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மடிக்கணினிகள் நிறுவப்பட்டுள்ளன.

சமீபத்தில், சைபராபாத் காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் சூதாட்டம் நடத்திய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வங்க்கக் கணக்கில் இருந்த ரூ. 30 லட்சம் பணம் முடக்கப்பட்டது.

“ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள பண்ணை வீடுகளில் சூதாட்டம் நடப்பதாகத் தகவல்கள் வெளியானதால் கடந்த சில நாட்களாக பண்ணை வீடுகளில் கவனம் செலுத்தினோம்,” என்கிறார் ராஜேந்திரநகர் துணை காவல் ஆணையர் ஜெகதீஸ்வர் ரெட்டி.

மேலும் அவர் கூறுகையில், “ஹைதராபாத் நகரில் அதிக கண்காணிப்பு இருப்பதால் பந்தய கும்பல்கள் பண்ணை வீடுகளைத் தேர்வு செய்துள்ளளன,” என்றார்.

போட்டி முடிந்துவிட்டால் பந்தய பணத்தைப் பிடிக்க முடியாதா?

பந்தயம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. போட்டி முடிந்ததும் இந்தப் பந்தய நடவடிக்கைகள் முற்றிலுமாக நின்றுவிடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சைபராபாத் காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பெட்டா பஷீராபாத்தில் உள்ள ஐபிஎல் சூதாட்டத் தளத்தில் சிறப்பு அதிரடிக் குழு (எஸ்ஓடி) போலீசார் சோதனை நடத்தினர்.

போட்டி நடந்து கொண்டிருந்தபோதே இந்த நடவடிக்கை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் ராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “போட்டி முடிந்தவுடன் ஆன்லைனில் பணம் அனுப்பப்படும். பின்னர் எங்கும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. போட்டி முடிந்த பிறகு பணத்தைப் பிடிப்பது கடினம். அதனால்தான் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே அவர்களைப் பிடிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது,” என்றார்.

ஒரு கால் என்றால் ரூ.1 லட்சம்

சூதாட்டத்தில் பந்தயம் கட்ட இந்த சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறியீட்டு மொழியைப் பயன்படுத்துகின்றனர். அந்த குறிப்பிட்ட சொற்களைக் கொண்டே பேசுகின்றனர்.

அவற்றின் அடிப்படையிலேயே பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு விரல் என்றால் ரூ.1000, எலும்பு என்றால் ரூ.10 ஆயிரம், கால் என்றால் ஒரு லட்சம் ரூபாய் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

வெற்றி பெறும் அணி அல்லது வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள அணி பறவை எனப்படும். தோற்கும் அணி உணவு என்று அழைக்கப்படுகிறது.

மேலும், பந்தயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சில யூட்யூப் சேனல்கள், டெலிகிராம் இணைப்புகள் உள்ளன. இவை கிரிக்கெட் போட்டியின் வெற்றியாளர்களை முன்கூட்டியே கணிப்பதோடு பந்தயம் கட்டுபவர்களுக்கு குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றன.
பிற நாடுகளின் செயல்பாடுகள்

கிரிக்கெட் பந்தய நடவடிக்கைகளுக்கு எந்தவித கட்டுப்பாடு இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது.

இதற்காக டெல்லி, மும்பை, ஹைதராபாத், கோவா போன்ற இடங்களில் இருந்து, பந்தய செயலிகளை இயக்கும் குற்றவாளிகள் பந்தயத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் பந்தயங்கள் கட்டப்படுகின்றன. இவை அனைத்தும் ஆன்லைனில் நடப்பதால், இவர்களைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

டெல்லி, மும்பை, ஹைதராபாத்தில் பந்தய செயலிகளை இயக்கும் குற்றவாளிகள்செயல்பட்டு வருவதாக பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர்களுக்கு உதவி புரியவும் பல பணியாளர்கள் உள்ளனர். பந்தயம் கட்டுவது முதல் வெற்றிபெற்ற பிறகு பணம் அனுப்புவது வரை அனைத்தும் ஆன்லைனில் கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற விதங்களில் செய்யப்படுகின்றன. இதனால் அவர்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

கிரிக்கெட்டில் சூதாட்டம் என்பது ஒரு விஷயத்தில் மட்டும் நின்றுவிடவில்லை
எளிதாக பணம் சம்பாதிக்கும் ஆசை

இளைஞர்கள் ஏன் பந்தயத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்வி இங்கே முக்கியமானது. இதற்கு போலீசார் கூறும் ஒரே பதில் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க நினைப்பது.

எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூதாட்டத்தில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். பிறகு அது அடிமையாக்கிவிடுகிறது.

முன்பெல்லாம் நகர்ப்புறங்களில் மட்டுமே இதுபோன்ற பழக்கங்கள் இருந்தன. தற்போது கிராமங்களுக்கும் இதுபோல் பந்தயம் கட்டும் பழக்கம் பரவியுள்ளது.

மே 18 அன்று, ஷாத்நகர் அருகே உள்ள நர்லகுடா தாண்டாவை சேர்ந்த 19 வயது இளைஞர் பந்தயத்தில் பணம் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் பூர்கம்படுகு மண்டலம் பாண்டவுலா பஸ்தியை சேர்ந்த சாய் கிஷன் என்ற மற்றொரு இளைஞரும் பத்து நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

பகுதி நேர வேலை செய்து வந்த அவர், பந்தயத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்ததால் உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும், பந்தயம் கட்டுவதில் கட்டுப்பாடு இல்லாத நிலை உள்ளது. சிலர் கடன் வாங்கி பந்தயம் கட்டுகின்றனர். அங்கு பணத்தை இழந்து, மீட்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

இது ஜாலியாக ஆரம்பித்து பின்னர் போதையாக மாறி பந்தயம் கட்டுபவர்களில் பெரும்பாலானோரை சீரழிப்பதாக ராஜேந்திரநகர் காவல் உதவி ஆணையர் கங்காதர் கூறுகிறார்.

பிபிசி தமிழ்: செய்தி- https://www.bbc.com/tamil/articles/cglnx5k8v7xo

 

Share.
Leave A Reply

Exit mobile version