உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
தேவநம்பிய தீசன் [Devanampiyatissa] அரசராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து, பேரரசன் அசோகன் அவருக்கு பரிசுகள் அனுப்பியதுடன், இரண்டாவது முடிசூட்டு விழா நடத்தும் படியும் வேண்டுகிறார்.
எனவே தேவநம்பிய தீசன் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முடிசூட்டு விழாவை முதலாவது நடந்து ஆறு மாதத்தால் நிறைவேற்றினார். இங்கு தான் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது.
அந்த காலத்தில் கடல் மார்க்கமான தூர இடத்து நாட்டுக்கு நாடு [அல்லது போக்குவரத்து] வியாபாரம் மிக குறைவு. மேலும் தாம்ரலிப்தா [port Tamralipti] துறை முகத்தில் இருந்து எதாவது ஒரு கப்பல் புறப்படுவதை காண்பதும் இன்னும் ஒரு பிரச்சனை.
இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது. அது மட்டும் அல்ல, அன்றைய காலத்தில் காற்றின் துணையுடன் தான் கப்பல்கள் நகர்ந்தன. எனவே போவதற்கு தென்மேற்கு பருவக்காற்றும், திரும்பி வருதலுக்கு வடகிழக்கு பருவக்காற்றும் தேவை.
அது மட்டும் அல்ல, அவர்கள் ஏறத்தாழ 300 மைல்கள், மகத இராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம் [Pataliputra] போக நடக்கவும் வேண்டும். இது ஒரு பக்க தூரமே. எனவே, எல்லா காலநிலையும் சரியாக இருந்தால், ஒரு சுற்று பயணத்தை முடிக்க ஒரு ஆண்டு ஆவது கழியும். அது மட்டும் அல்ல, தேவநம்பிய தீசன் அனுப்பிய பரிசு பொருட்களுடன் வந்த தூதுவர்கள், அங்கே, பாடலிபுத்திரத்தில் ஐந்து மாதம் நின்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
எனவே முதலாவது முடிசூட்டு விழாவின் பின் இலங்கையை விட்டு வந்தவர்கள், ஐந்து மாதம் தங்கிய பின், அசோகனின் செய்தியுடன் எப்படி ஆறு மாதத்துக்குள் திரும்பி போனார்கள் என்பது நம்பமுடியாத கற்பனையே!
பெயர் ‘திஸ்ஸ ‘ [Tissa] ஒரு பொதுவான புத்த நாடுகளில் உள்ள ஒரு சொல்லாகும். ஆனால் அதே பெயர் கொஞ்சம் நீளமாக, உதாரணமாக திசைநாயகம் / திஸ்ஸநாயகம் , திசைவீரசிங்கம் / திஸ்ஸவீரசிங்கம், [Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc ] போன்ற பெயர்கள் தமிழ் மக்களிடமும் உண்டு.
அது மட்டும் அல்ல, இதை ஒப்புவிப்பது போல, 2014 / 2015 ஆண்டு, கீழடி தொல்பொருள் ஆய்வில், பெயர் திஸ்ஸ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த தொல்பொருளின் காலம் ஏறத்தாழ கி மு 300 இல் இருந்து கி மு 400 என கணிக்கப்பட்டும் உள்ளது.
தேவநம்பிய தீசனின் காலமும் கி மு 247 இல் இருந்து கி மு 207 என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், புத்த மதத்திற்கு மாறமுன், அவன் சிவனை வழிபடுபவனும் ஆவான். மேலும் கீழடி பானை ஓடுகளில் காணப்பட்ட பெயர்கள்: உத்திரன், ஆதன், சாத்தன், திஸ்ஸன், சுரமா [Uthiran, Aathan, Saathan, Tissan, Surama etc] போன்றவை ஆகும். இங்கு கடைசியில் உள்ள ‘ன்’ [‘N’] எடுக்கப்பட்டு திஸ்ஸ ஆக மாறி உள்ளது எனலாம். ஒரு காலத்தில் தமிழரும் புத்த மதத்தை தழுவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது
தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது.
அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது.
அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை போலும். ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka]
மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது விஜயனின் வருகையோடு தான் இலங்கையின் வரலாறு தொடங்குகிறது என்பதில் பிடிவாதமாக உள்ளது.
அதனை மெய்ப்பிக்க தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னர், தேவர்களது அரசன் இந்திரனை அழைத்து விஜயன் கூட்டாளிகளோடு லங்காவில் [இலங்கையில்] கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக எனக் கட்டளை இட்டார் என்கிறது.
என்றாலும் வெவேறு கப்பல்களில் ஏற்றப்பட்ட அவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகளைப் பற்றி புத்தரும் அக்கறை எடுக்கவில்லை, மற்றும் விஜயனும் அவனது கூட்டாளிகளும் அக்கறை எடுக்கவில்லை ? அது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது ? ஏனென்றால் அவர்கள் நாடு கடத்தப்பட்டது, விஜயனும் கூட்டாளிகளும் செய்த பாவங்களாலேயே, மற்றும் படி அவர்கள் அப்பாவிகள், அப்படி என்றால் யாரை முதலில் அக்கறை செலுத்தவேண்டும். நீங்களே சொல்லுங்கள்?
மேலும் இலங்கைத் தீவுக்கு, புத்த பெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்கர் அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டவும், வட இலங்கையில், நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்கும் மூன்றாவதாக, கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக மன்னனின் வேண்டுதலை ஏற்றும் வருகை தந்ததாக கூறுகிறது. எனவே இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்களும் நாகர்களும் என்பது தெளிவாகிறது.
இலங்கையை இயக்கர்குல மன்னனும், சிவ பக்தனுமான இராவணன் ஆண்டான் என, கி மு 5ஆம் நூறாண்டில் எழுதிய ராமாயணம் என்ற இதிகாச கதையும் கூறுகிறது. இது ஏறத்தாழ மகாவம்சத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது.
அதேவேளை வரலாற்று ரீதியாக புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் போனார் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும்.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத தேரர்கள் எப்படி காமினிக்கு புத்த மார்க்கத்தை நம்பாதவர்களை கொல்லலாம் என போதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது? இன்றும் இப்படியான மனப்போக்கை நாம் இன்னும் காண்கிறோம்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]