பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது.

அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்று பாதுகாப்புப் படைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அங்கே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

இந்த துயரம் நேரிட்ட பகுதி ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கைபர் பக்டுன்க்வா மாகாணத்தில் இருக்கிறது.

மிக மோசமாக காயமடைந்த சிலர் மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வராண்டாவில் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிகிறது.

காயமடைந்த நிலையில் ஏராளமானோர் இருப்பதால் அனைவரையும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை எனறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பஜௌர் மாவட்ட மருத்துவமனையில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல் கட்சியின் பிராந்தியத் தலைவர் மவுலானா ஜியாஉல்லா இந்த வெடிப்பில் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிப்புக்குப் பிறகு எங்கும் அவலக்குரல்

பஜௌர் மாவட்டத்தில் கார் டெஸில் பகுதியில் குறிப்பிட்ட அந்த இஸ்லாமியக் கட்சி சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

கார் பகுதியில் துபை மொர் என்ற இடத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக மீட்பு சேவை 1122 அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பதால் இது சதிச்செயலா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version