தாரமங்கலத்தில் 24 வயது பட்டதாரி பெண், 54 வயது தொழிலாளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவியை பிரித்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விமலா (24) என்ற பட்டதாரி பெண், கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது.

ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள், தனது மகளை கிருஷ்ணன் கடத்திச் சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் இருவரையும் போலீசார் தேடிவந்தனர்.

இதையறிந்த விமலா – கிருஷ்ணன், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு விமலாவின் உறவினர்கள் அவரை தங்களுடன் திரும்பி வர கட்டாயப்படுத்திய நிலையில், அவர் அதற்கு மறுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவரும் மேஜர் என்பதாலும், காதல் கணவருடன் செல்வதாகக் கூறியதாலும், பெண்ணின் விருப்பப்படி கிருஷ்ணனுடன், விமலாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version