ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது.

முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் பதிரனா 3 விக்கெட்டும், மதூஷன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 42 ஓவரில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

குசால் மெண்டிஸ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமரவிக்ரமா 48 ரன்னில் அவுட்டானார்.

குசால் மெண்டிஸ் 91 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் அசலங்கா பொறுப்புடன் ஆடி 49 ரன்னுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், இலங்கை அணி கடைசி பந்தில் 252 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

 

Share.
Leave A Reply

Exit mobile version