காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜாங்க ரீதியான மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளன. கனடாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எதிர்வினை ஆற்றி உள்ளன.
இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் ‘மிகவும் கவலையளிக்கிறது’ என அமெரிக்கா கூறியுள்ளது.
கனடாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. எனினும் இதுதொடர்பாக கனேடிய அரசாங்கம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது எனவும் பிரிட்டன் கூறியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங்கின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனின் எதிர்வினை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கனடா மற்றும் இந்த மூன்று நாடுகளும் ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ (Five Eyes Alliance) எனப்படும் புலனாய்வு அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்த உளவு அமைப்பில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது நாடு நியூசிலாந்து. இந்தியா- கனடா விவகாரத்தில் நியூசிலாந்து இதுவரை எதிர்வினை ஆற்றவில்லை.
1946 இல் இரண்டாம் உலகப் போரின்போது ‘ஃபைவ் ஐஸ்’ ஒப்பந்தத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
‘Five Eyes Intelligence Alliance’ ( ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’) என்றால் என்ன?
ஃபைவ் ஐஸ் அலையன்ஸ் என்பது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு இடையே உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாகும். இந்த ஐந்து நாடுகளுக்கும் ஆங்கிலம் பொதுமொழியாக உள்ளது.
பிபிசி பாதுகாப்புப் பிரிவு செய்தியாளர் கோர்டன் கொரேரா கூறுகையில், பல தசாப்தங்களுக்கு முன் 1946 இல் இரண்டாம் உலகப் போரின் போது இந்த ஒப்பந்தத்துக்கான அடித்தளம் போடப்பட்டது.
ஆனால் அந்த நேரத்தில் இந்த உளவுத் துறை ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் இதன் பெயர் UKUSA ஒப்பந்தம் என்றே அழைக்கப்பட்டது. அதன்பின் 1948 இல் கனடாவும், 1956 இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தன.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நேரத்தில், தகவல் தொடர்புகளை இடைமறித்து, குறியீட்டு மொழியில் அனுப்பப்படும் செய்திகளைப் புரிந்துகொள்வதற்கும், கிட்டத்தட்ட அனைத்து உளவுத்துறை தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், நாளடைவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இணைந்து கொண்டதால் இந்தக் குழு ‘ஃபைவ் ஐஸ்’ ‘Five Eyes என்று அழைக்கப்பட்டது.
பனிப்போர் நிகழ்ந்த காலத்தில், சோவியத் யூனியனின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதும் என ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ (‘Five Eyes Intelligence Alliance’) உளவு அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்தது.
உலகளவில் மிக வெற்றிகரமான உளவு கூட்டமைப்பில் ஒன்றாக ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ திகழ்கிறது.
‘Five Eyes Intelligence Oversight and Review Council’ என்ற பெயரில் 2017 இல் இந்த கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது
ஃபைவ் ஐஸ்சின் முக்கிய பணிகள் என்ன?
ஃபைவ் ஐஸ் அலையன்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை பரிசீலனை செய்யும் நோக்கில், ஒரு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளின்படி, எந்த உறுப்பு நாடுகளின் அதிகாரிகளும் கவுன்சிலின் ஒரு பகுதியாக இருப்பார்கள்; அவர்கள் அனைவருக்கும் இதில் சமமான பங்கேற்பு இருக்கும்.
மேலும் இதில், ‘ஃபைவ் ஐஸ்’ ஒப்பந்த நாடுகள், பொதுவான நலன்கள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், கண்காணிப்புக்கான சிறந்த நடைமுறைகளை முயற்சிக்கவும் இயலும்.
தேவைப்பட்டால், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத நாடுகளையும் உளவு அமைப்பில் அங்கும் வகிக்கும் நாடுகள் தொடர்பு கொள்ள முடியும்.
குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவுன்சில் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த கவுன்சிலின் செயலகம் அமெரிக்காவில் உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை பகிரங்கமாக கண்டித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ நாடுகள் மறுத்துவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
உளவு அமைப்பில் விரிசல்
நிஜ்ஜார் கொலை விவகாரத்தை முன்வைத்து, இந்தியா – கனடா இடையே தற்போது எழுந்துள்ள மோதலில், ஃபைவ் ஐஸ் அமைப்பு நாடுகள் இதுநாள் வரை நடுநிலை வகிப்பதாகவே தெரிகிறது. இந்த விவகாரத்தில் நியூசிலாந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை பகிரங்கமாக கண்டித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ நாடுகள் மறுத்துவிட்டதாக, ஆதாரங்களை மேற்கோள்காட்டி, அமெரிக்க நாளிதழமான ‘வாஷிங்டன் போஸ்ட்’ அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், இந்த உளவு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் ஜி20 உச்சி மாநாட்டுக்கு முன்பு, இந்தியாவிடம் தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்னையை எழுப்பியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா – கனடா விவகாரத்தில் ஃபைவ் ஐஸ் கூட்டமைப்பு நாடுகளின் எதிர்வினை என்ன என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடம் செய்தியாளர்கள் அண்மையில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ உளவுத் துறை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் நான் பேசுவதில்லை” என்று பதிலளித்திருந்தார்.
காலிஸ்தான் இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக, ‘Five Eyes Intelligence Alliance’ அமைப்பிடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவல்கள் தொடர்பாக, அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ஃபைவ் ஐஸ் நாடுகள் எப்போதும் ஒரே குரல் பேசியதில்லை
‘ஃபைவ் ஐஸ்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள் எப்போதும் ஒரே குரலில் பேச வேண்டுமென்ற அவசியமில்லை. கடந்த காலங்களில் இந்தக் கூட்டணியின் நாடுகள் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தன.
சீனாவின் உய்குர் முஸ்லிம்களின் பிரச்னையும் அதில் ஒன்று. 2021 ஆம் ஆண்டில், இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நான்கு நாடுகளும் சீனாவுக்கு எதிராக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன, அதில் சின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் முஸ்லிம்களை மோசமாக நடத்துவது குறித்து விமர்சிக்கப்பட்டது.
தென் சீனக் கடலில் சீனாவின் ‘ஆக்கிரமிப்பு’, ஹாங்காங்கில் ஜனநாயகம் நசுக்கப்படுவது மற்றும் தைவானுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த நாடுகள் கவலை தெரிவித்தன.
ஆனால் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் நியூசிலாந்து, சீனாவை எதிர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தது.
எனவே, சீனாவை விமர்சித்த மேற்கத்திய நாடுகளை ஆதரிக்க நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் நனையா மஹுதா மறுத்துவிட்டார்.
அப்போது அவர், “இந்த முறையில் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், உளவு அமைப்பின் பங்கை விரிவுபடுத்துவது எங்களுக்கு சங்கடமாக உள்ளது” என்று நனையா மஹுதா கூறியிருந்தார்.
ஃபைவ் ஐஸ் நாடுகளுக்கு சீனா மிரட்டல்
கடந்த 2020 இல், ஹாங்காங் பிரச்னையில் ஃபைவ் ஐஸ் அமைப்பு நாடுகள் சீனாவை கண்டித்திருந்தன. அங்கு ஜனநாயகம் நசுக்கப்படுவதாகவும் அவை குற்றம்சாட்டியிருந்தன.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளின் ஃபைவ் ஐஸ் அலையன்ஸை சீனா மிரட்டியது.
சீனாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கத் துணிந்தால், அதன் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
“ சீனா எப்போதும் எந்தப் பிரச்னையையும் தொடங்கியதில்லை. ஆனால் அதேநேரம் எந்தப் பிரச்னையை கண்டும் அஞ்சுவதில்லை. அவர்களுக்கு ஐந்து கண்களா அல்லது பத்து கண்களா என்பது முக்கியமில்லை” என்று அப்போது சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.
இந்தியாவை சேர்க்க திட்டம்
செப்டம்பர் 2021 இல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒரு சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் ‘ஃபைவ் ஐஸ்’ ஒப்பந்தத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவு இடம்பெற்றிருந்தது.
இதில் தென் கொரியா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளை ‘ஃபைவ் ஐஸ்’ ஒப்பந்தத்தில் புதிய உறுப்பு நாடுகளாக சேர்க்க முன்மொழியப்பட்டது.
‘ஃபைவ் ஐஸ்’ ஒப்பந்தத்தில் இந்த நாடுகளைச் சேர்ப்பதன் மூலம், உளவுத் தகவல்கள் பகிர்வு அதிகரிக்கப்படும் என்றும் இந்த வரைவில் கூறப்பட்டிருந்தது.
கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், கனடா செய்தி நிறுவனமான CTVக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது அவர், காலிஸ்தான் இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக, ‘Five Eyes Intelligence Alliance’ அமைப்பிடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்’ என்று டேவிட் கோஹன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிபிசி தமிழ் செய்தி-
https://www.bbc.com/tamil/articles/cv2k0d57k98o