ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளி மாணவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தன்பாலின ஈர்ப்பு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் மேல் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் விருத்தாசலம் அருகேயுள்ள பள்ளியில் ப்ளஸ் டு படித்து வந்தார்.

வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார் மோகன்.

அப்போது சிறுநீர் கழிப்பதற்காக பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்ற மோகன், `என்னை விட்டுடு’ என அலறியிருக்கிறார்.

அவரது அலறலைக் கேட்ட அவரின் நண்பர், மோகனை நோக்கி ஓடினார். அப்போது மேல் புளியங்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், மோகனைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனின் நண்பர், ஆனந்தை தடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் அதற்குள் மோகனின் மார்பு, வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்

ஆனந்த். மோகன் நண்பரின் அழுகையைக் கேட்டு பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் கிடந்த மோகனை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அங்கு மோகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “கொலைசெய்யப்பட்ட மோகனும், ஆனந்தும் நண்பர்கள். பொறியியல் படிப்பை முடித்த ஆனந்த், தமிழ்நாடு அரசின் மின் துறையில் பெண்ணாடம் பகுதியில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும்போது மோகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆனந்துதான் அடிக்கடி மோகனை விருத்தாசலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்திருக்கிறார்.

காலில் மாவுக்கட்டைப் பிரிக்கும் நாளன்று ‘உனக்கு ஒரு பரிசுப் பொருள் வைத்திருக்கிறேன். என் வீட்டுக்கு வா’ என்று மோகனிடம் கூறியிருக்கிறார் ஆனந்த்.

அதனடிப்படையில் அவர் வீட்டிற்கு சென்ற மோகனை, ஓர் அறைக்கு அழைத்துச் சென்ற ஆனந்த், தன்பாலின ஈர்ப்புடன், உறவுக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.

அப்போது ஆனந்தை திட்டிவிட்டு தன் வீட்டுக்குச் சென்ற மோகன், தன் பெற்றோரிடம் இது குறித்துக் கூறியிருக்கிறார்.

அப்போது ஒருநாள் இன்ஸ்டாகிராமில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டி ‘இந்தப் பெண்னை நீ காதலிப்பது எனக்குத் தெரியும்’ என்று மோகனை மிரட்டியிருக்கிறார் ஆனந்த்.

அதில் கோபமடைந்த மோகன், ஆனந்தின் செல்போனைப் பிடுங்கி உடைத்திருக்கிறார். அது குறித்து மோகனின் பெற்றோரிடம் முறையிட்ட ஆனந்தின் பெற்றோர், புதிய செல்போன் வாங்கித் தருமாறு கேட்டிருக்கின்றனர்.

அப்போது, ‘உன் பிள்ளைதான் என் மகனை தன்பாலின உறவுக்கு அழைத்திருக்கிறான். செல்போன் வாங்கித் தர முடியாது’ என்று மோகனின் பெற்றோர் கூற, அதிலிருந்து மோகனின் மீது கோபமாக இருந்திருக்கிறார் ஆனந்த்.

மோகனை பழிவாங்குவதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த், இன்று சிறுநீர் கழிக்கச் சென்ற மோகனைக் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டார். வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் ஆனந்தைப் பிடித்துவிடுவோம்” என்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version