ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு தீவிர விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (12) குறித்த 9 ஈரானிய பிரஜைகளுக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த ஈரானிய பிரஜைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அக்குறணை கடற்பரப்பு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் 100 கிலோ ஹெரோயினுடன் சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் சோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டு சுமார் 84 கிராம் பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி ரணராஜாவினால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version