நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற சாம்பியன் அணிகளை வீழ்த்தியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் என்ன செய்யப்போகிறது,
இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் திட்டத்திற்கு எதிராக என்ன செய்யப்போகிறது என்ற கேள்விகளுக்கு இடையே போட்டி தொடங்கப்பட்டது.
நல்ல தொடக்கம் கிடைத்தும் கோட்டைவிட்ட இலங்கை!
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு அபாரமான ஒரு பந்தில் கருணரத்னேவை விரைவாகவே வெளியேற்றிய ஃபாரூக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் அடுத்து கைக்கோர்த்த பதும் நிஷாங்கா மற்றும் கேப்டன் குசால் மெண்டீஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் பதும் நிஷாங்காவை 46 ரன்கள் அடித்திருந்த போது வெளியேற்றினார் அஸ்மதுல்லா.
ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஆப்கானிஸ்தான் உடைத்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த மெண்டீஸ் மற்றும் சமரவிக்ரமா இருவரும் நிதானமான ஆட்டத்தைவெளிப்படுத்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அடுத்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, இலங்கை அணி நல்ல டோட்டலை நோக்கி நகர்ந்தது.
சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியை அடுத்தடுத்த ஓவர்களில் குஷாலை 39 ரன்னிலும், சமரவிக்ரமாவை 36 ரன்னிலும் தொடர்ச்சியாக வெளியேறிய முஜீப் ஆப்கானிஸ்தான் அணியை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.
139 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாற, அதற்கு பிறகு பந்துவீச வந்த ஃபாருக்கீ இலங்கை அணியை எழவே விடாமல் அடிக்கு மேல் அடி கொடுத்தார்.
அடுத்து வந்த எந்த வீரர்களையும் நிற்கவே விடாமல் அடுத்தடுத்து வெளியேற்றிய ஃபாரூக்கி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தின். ஃபாருக்கின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே எடுத்தது.
3 வீரர்கள் அரைசதம்! நினைத்ததை செய்துகாட்டிய ஆப்கானிஸ்தான்!
242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, சிறப்பான ஃபார்மில் இருக்கும் மதுஷங்கா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
நல்ல ஃபார்மில் இருக்கும் குர்பாஸ் 0 ரன்னில் வெளியேறினாலும், தங்கள் திட்டத்தில் சரியாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
2வது விக்கெட்டுக்கு ஷத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா ஜோடி 73 ரன்கள் சேர்க்க அடுத்த விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை அணி தடுமாறியது. விக்கெட்டை நோக்கி மீண்டும் பந்துவீச வந்த மதுஷங்கா 39 ரன்னில் நிலைத்து நின்ற ஷத்ரானை வெளியேற்றி அசத்தினார்.
Sl vs Afg
ஆனால் என்ன தான் மதுஷங்கா சிறப்பாக செயல்பட்டாலும், மற்ற எந்த இலங்கை வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கான பவுலிங்கை வெளிப்படுத்தவில்லை.
உடன் இலங்கை அணி மோசமான கிரவுண்ட் ஃபீல்டிங்கும் செய்ய, சிறப்பாக செயல்பட்ட ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாகிதி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த ஆப்கானீஸ்தான் அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்தது.
ரஹ்மத் ஷா 62 ரன்னில் வெளியேற இறுதியாக களத்திற்கு வந்த அஸ்மதுல்லா ஓமர்ஷாய் சிக்சர் பவுண்டரிகாக பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என துவம்சம் செய்த ஓமர்ஷாய் 73 ரன்கள் அடித்து அசத்த, 45.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Afghanistan has strategically broken down the target into fragments, and Coach Jonathon Trott is outlining the plan on the whiteboard to achieve it by the 48th over. 👌👌#Afghanistan #AFGvsSL pic.twitter.com/ud2hDj2uC3
— Zaryab Khan (@ZaryabMmd) October 30, 2023
இலக்கை துரத்த ஆப்கானிஸ்தான் வகுத்த திட்டம்!
போட்டியின் இடையே பத்து-பத்து ஓவர்களாக இலக்கை எப்படி துரத்துவது, குறிப்பிட்ட இடைவெளியில் எவ்வளவு ரன்கள் அடிப்பது என முன்கூட்டியே திட்டம் வகுத்த ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. ஆப்கானிஸ்தான் திட்டம் வகுத்த ரன்களின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறது.
அவர்கள் குர்பாஸை விரைவாகவே இழந்தாலும் பயப்படவில்லை, மாறாக அவர்களுடைய திட்டத்தில் திடமாக செயல்பட்டனர்.
பல முன்னாள் சாம்பியன் அணிகள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு மற்ற சிறிய அணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.