கடந்த சனிக்கிழமை டெல்-அவிவ் நகரில் கூட்டு செய்தியாளர் மாநாடு நடந்தது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் பாதுகாப்பு அமைச்சர் காலண்ட்டும் பங்கேற்றார்.
ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டியே தீருவோம் என்றார்கள்.
உலக நாடுகள் போர் நிறுத்தம் கோரலாம். தேவையேற்பட்டால், அந்த நாடுகளையே எதிர்த்து நிற்கப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் சூளுரைத்தார்.
அவர்களது திடசங்கற்பம் அடுத்து வரும் நாட்களில் வெளிப்பட்டது. சுற்றிவளைக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனர்கள் கதறக் கதற, காஸாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
காஸாவின் வடக்கில் இருந்து பலஸ்தீனர்களை தெற்குப் பக்கம் விரட்டினார்கள்.
தெற்கிலும் தாக்குதல் நடத்தினார்கள். ஆஸ்பத்திரிகளை முற்றுகையிட்டார்கள். முக்கியமான ஆஸ்பத்திரிக்குள் சரமாறியாக குண்டுமழை பொழிந்தார்கள்.
காஸா நிலப்பரப்பை முற்றுமுழுதாக தமது வசமாக்கும் முயற்சியின் இராணுவ நகர்வுகள்.
ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான தளங்களை நிர்மூலமாக்கி பலவீனப்படுத்தும் முனைப்பு இஸ்ரேலியப் படைகளிடம் தீவிரமாக இருந்தது.
குறுகிய நிலப்பரப்பிற்குள் இயங்கி, இஸ்ரேலியப் படைகளை கதிகலங்க வைக்கும் ஆயுத இயக்கம். வல்லரசுகளின் அரசியல் ஆதரவையும், ஆயுதங்களையும் பெற்று அணுவாயுதங்களுடன் திகழும் வலுவான தேசிய இராணுவம்.
இஸ்ரேலியப் படைகளால் ஹமாஸ் இயக்கத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கி விட முடியுமா?
இந்தளவு இராணுவ வல்லமை மிக்கதாக இருந்தால், இஸ்ரேலியப் படைகளால் ஏன் ஹமாஸை இன்னமும் தோற்கடிக்க முடியாமல் போனது?
காஸாவை சுற்றி எழுப்பப்பட்ட கொங்கிறீட் வேலிகள். அதில் பொருத்தப்பட்ட அதிநவீன உளவுபார்த்தல் மற்றும் கண்காணிப்புக் கருவிகள்.
இவற்றையெல்லாம் தாண்டி, ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் முக்கியமானது.
அந்தத் தாக்குதலின் நீட்சியாக, 365 கிலோமீற்றர் சதுர நிலப்பரப்பில் இருந்து கொண்டு, இஸ்ரேலின் முக்கியமான நிலைகளை தாக்கியழிக்கும் ஹமாஸின் ஆயுதபலம் கொஞ்ச நஞ்சமல்ல. அது உலகத்தையே அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியது.
இது எப்படி சாத்தியம்? ஹமாஸ் இயக்கத்தின் வலுவான ஸ்தாபன கட்டமைப்பா? இராணுவ ரீதியான ஆற்றல்களா? அதன் சுரங்கக் கட்டமைப்பின் மூலம் கிடைக்கும் அனுகூலங்களா? இவையெல்லாவற்றையும் விட, கோட்பாட்டு ரீதியாக கட்டமைக்கப்பட்ட விடுதலை நாட்டமா?
ஹமாஸ். விரிவாகச் சொன்னால், ஹர்க்கத்துல் முக்காவம்மா அல்-இஸ்லாமியா (Harakat al-Muqawama al-Islamiya). ஒரு நற்பணி இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு, பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு போட்டியாக இஸ்ரேலிய அரசாங்கத்தால் போஷித்து வளர்க்கப்பட்ட அமைப்பு.
இன்று இஸ்ரேலிய தேசத்தை இல்லாதொழித்து, முன்னர் பலஸ்தீனமாக இருந்த மண்ணில் அரேபிய இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்காக அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டம் நடத்தும் இயக்கமாக பரிணமித்துள்ளது. இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறது.
ஆரம்பத்தில், அரசியல், இராணுவம், கோட்பாடு என்ற பிரிவுகளைக் கொண்டதொரு இயக்கமாக ஹமாஸ் திகழவில்லை.
1990களில் தான் வலுவான இராணுவப் பிரிவு முக்கியமானதொரு அமைப்பாக பரிணமித்தது. இது இன்று இஸ்ஸதீன் அல்-கசாம் படையணியென குறிப்பிடப்படுகிறது.
ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாக பேணப்படுகின்றன.
இருந்தபோதிலும், சில வெளிநாட்டு இராணுவ புலனாய்வு அமைப்புகள், இஸ்ஸதீன் அல்-கசாம் படையணி பற்றி தாம் அறிந்த விடயங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றன.
ஹமாஸின் தாக்குதல் படையணி 15,000 முதல் 20,000 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கக்கூடும் என மூலோபாய கற்கைளுக்கான சர்வதேச நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாமென கூறும் ஆய்வுகளும் உண்டு.
இஸ்ஸதீன் அல்-கசாம் படையணியில் உள்ள தாக்குதல் பிரிவுகளில் பெரும்பாலும் காலாட்படைகளே உள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இது ஒக்டோபர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் புலனானது.
தாங்கிகளை நிர்மூலமாக்கும் ஏவுகணைகளையும் ஹமாஸ் பயன்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகள் பெரும்பாலும் ஈரான் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டவை. இவை எவ்வாறு காஸாவிற்குள் கொண்டு வரப்பட்டன என்பது மேலைத்தேய நாடுகளுக்கும் புரியதாத புலனாய்வுப் புதிர்.
காஸாவின் மீது இஸ்ரேல் விதித்த தடைகள் காரணமாக, ஹமாஸ் ஆயுதப் பிரிவிடம் கவச வாகனங்கள் கிடையாது.
இதன் காரணமாக, சாதாரண வாகனங்களைப் பயன்படுத்தியே ஹமாஸ் இயக்கம் படைகளையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றதாகத் தெரிகிறது.
இஸ்ரேலிய மண்ணின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அவதானிக்கையில், ஹமாஸ் இயக்கம் வான்வழியாக தாக்குதல் நடத்தக்கூடிய படைப்பிரிவுகளை பயன்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
புலனாய்வு அமைப்புக்களை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விடயம், ஹமாஸ் ஆயுதபாணிகள் பயன்படுத்திய பரா-கிளைடர்ஸ் (Paragliders).
காற்றில் சறுக்கிச் செல்லக்கூடிய பறக்கும் கருவிகள். இது தவிர, இருவர் பயணிக்கக்கூடிய மிகச்சிறிய வணிக விமானங்களையும் ஹமாஸ் இயக்கம் பயன்படுத்தியிருக்கிறது. இவை குறைந்த வேகத்தில் தாழப் பறப்பதால், இவை இஸ்ரேலியப் படைகளின் ராடர் திரைக்குள் சிக்காமல் போன சந்தர்ப்பங்கள் ஏராளம்.
சந்தையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட ஆளில்லா சிறு விமானங்கள் போன்றவற்றையும் ஹமாஸ் இயக்கம் வெற்றிகரமாக பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இவற்றின் மூலம், இஸ்ரேலியப் பீரங்கிகள் மாத்திரமன்றி, படைவீரர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய ஆயுதங்கள் எங்கேயிருந்து ஹமாஸ் இயக்கத்திற்கு கிடைக்கின்றன என்ற கேள்வி பூதாகரமாக வெளிக்கிளம்புகையில், மேலைத்தேய புலனாய்வு அமைப்புக்கள் ஈரான் மீது விரலை நீட்டுவது வழக்கம்.
இருந்தபோதிலும், இஸ்ரேலிய, அமெரிக்க அரசுகளால் இந்தக் குற்றச்சாட்டை எப்போதும் வெளிப்படையாக நிரூபிக்க முடிந்தது கிடையாது.
எவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன என்ற கேள்வி எழும்பட்சதத்தில், காஸாவில் இருக்கும் சுரங்க வலைப்பின்னல் பற்றி பேசப்படும்.
காஸாவில் நிலப்பரப்பிற்குக் கீழே பல மைல்கள் நீளம் வரை நீடிக்கும் சுரங்க வலைப்பின்னல், 1980களில் முதலாவது பலஸ்தீன எழுச்சியின்போது உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், வெளியில் இருந்து அத்தியாவசியப் பொருட்களையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வரக்கூடிய பிரதான மார்க்கங்களாக திகழ்வது யாவரும் அறிந்த விஷயம்.
இந்த வலைப்பின்னல் ஆயுதமோதல்களின்போது மூலோபாய ரீதியில் முக்கியமான வகிபாகத்தை எடுத்துக் கொள்கிறது.
இரகசிய இராணுவ செயற்பாடுகளை முன்னெடுக்கவும், எதிர்பாராத தாக்குதல்களை நடத்தவும், யாருக்கும் தெரியாமல் வேறு பிராந்தியங்களுக்கு தப்பித்துச் செல்லவும் இந்த வலைப்பின்னல் உதவியாக இருக்கிறது.
இந்தக் சுரங்க வலைப்பின்னலில் தான் ஹமாஸ் இயக்கத்தின் கட்டளையிடும் நிலையங்களும், துருப்புக்கள் தங்கியிருக்கக்கூடிய முகாம்களும், ஆயுதங்களை சேமித்து வைக்கக்கூடிய களஞ்சியசாலைகளும் உள்ளதாக இஸ்ரேலிய தரப்பு நம்புகிறது.
காஸாவின் வடபகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் பரந்துபட்ட சுரங்க வலைப்பின்னல் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த வலைப்பின்னலை தமது வசமாக்க இஸ்ரேலியப் படைகள் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் அல்-ஷிபா வைத்தியசாலையை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள், அதற்குக் கீழேயுள்ள சுரங்க வலைப்பின்னலைப் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தன.
காஸாவின் வடபகுதியை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேலியப் படைகள் கொண்டு வந்தாலும் கூட, சுரங்க வலைப்பின்னலுக்குள் நுழைதல் என்பது மிகவும் அபாயகரமான விடயமே. நுழைந்தால் எதுவும் நடக்கலாம்.
சுரங்க வலைப்பின்னல் என்பது காஸாவின் பொருளாதாரத்தை தீர்மானித்த கட்டமைப்பு என்பதால், அதனை ஒரேடியாகத் தகர்த்து விடுவதும் சாத்தியமற்றது.
இந்த விடயத்தில் இஸ்ரேலியப் படைகள் நிச்சயமற்ற, சங்கடமான நிலையை எதிர்கொள்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
படைவலுச் சமநிலையில் ஹமாஸ் இயக்கத்தை விடவும் இஸ்ரேலுக்கு கூடுதலான அனுகூலங்கள் இருந்தாலும், ஆண்டாண்டு கால ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய காஸா பலஸ்தீனர்களின் மனோதிடத்தை வெல்ல முடியாது.
கடந்த 17 வருடங்களாக வேலிபோட்டு அடைத்து வைத்து தம்மை இல்லாதொழிக்க இஸ்ரேல் முனைந்தபோது, தம்மை வாழ வைத்தது ஹமாஸ் இயக்கம் தானென்ற உணர்வு காஸா மக்களுக்கு உண்டு.
இந்த உணர்வு கூட்டாக பீறிட்டெழும் சந்தர்ப்பத்தில், எந்தவொரு படைப்பலத்தையும் முறியடிக்கும் ஆற்றல் காஸாவில் உள்ள பலஸ்தீனர்கள் மத்தியில் உருவாகும்.
இதை இஸ்ரேலிய் படைகள் மாத்திரமன்றி உலக நாடுகளும் அறிந்தே வைத்திருக்கின்றன என்பதால் தான், இதுவரை காலமும் இஸ்ரேலால் பலஸ்தீனர்களை முற்றுமுழுதாக தோற்கடிக்க முடியாதுள்ளது.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-