தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

“நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்” என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக “மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது” என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருக்கும் விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த 11-ஆம் தேதி வீடு திரும்பினார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார்.

செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் மருத்துவமனை சென்ற விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் காலமானார். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகிறது.

தலைவர்கள் இரங்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கம்பீரமான நடிப்பு கோடிக் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது.

ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர், மக்கள் சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது, அதை நிரப்புவது கடினம். அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடன் எனக்கு இருந்த நட்பை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.” என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் பதிவில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அவர் நல்ல திரைப்படக்கலைஞர், நல்ல அரசியல் தலைவர், நல்ல மனிதர், நல்ல சகோதரர், ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

சிபிஎம் தலைவர் பாலகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில், “அவர் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எதையும் நேர்மையாக, தைரியமாக பேசக்கூடியவர். ஒரு எளிய மனிதன் போல பழகுபவர். சில நாட்களாக சிகிச்சையில் இருந்தார், அப்போது நலம் விசாரித்தேன். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

பெரும் கலைஞனை இழந்துள்ளேன். என் பாடலை அழகாக பாடிய கதாநயகன், என் நீண்ட கால நண்பரை இழந்துள்ளேன். எரிமலை எப்படி பொறுக்கும் என்று சிவந்த கண்களோடு பேசிய அவர் மறைந்து விட்டார். திரையில் நல்லவர், அரசியலில் வல்லவர். சினிமாவிலும் அரசியலிலும் டூப் போடாமல் இருந்தார்.

கலைஞர் மறையட்டும் ,ஜெயலலிதா மறையட்டும், அதன் பிறகு அரசியல் பற்றி யோசிக்கலாம் என்று பலர் யோசித்த போது, அவர்கள் இருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை எட்டிவிட்டார். ஒரு மதுரைக்காரரை இழந்து விட்டேன்.

விஜயகாந்த் எதையுமே என்னிடம் மறைத்ததில்லை. எனக்கு பிடித்த தலைவர்கள் பற்றிய பிடிக்காத கருத்துகளை என்னிடம் கூறுவார். பணிவை, கனிவை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவருடைய மண்டபம் இடிபடக் கூடாது என்று கலைஞரிடம் வாதிட்டவர்களில் நானும் ஒருவர்.

விஜயகாந்த் காலமானார்

இயக்குநர் பேரரசு பேசுகையில், “அவரை முதலில் பார்த்த போது, இரண்டு நாட்கள் சார் என்று கூப்பிட்டேன். அதன் பிறகு சார் என்று கூப்பிட மனசு வரல. அண்ணன் என்று கூப்பிட ஆரம்பித்தேன். அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அவர் ரசிகர்களை நேசிப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் ரசிகர்கள் யாரிடமும் முகம் சுழிக்க மாட்டார். அனைவரிடமும் நின்று பேசுவார்.

ஷூட்டிங்கில் சில சமயம், “இன்னிக்கு எங்க வீட்டிலிருந்து சாப்பாடு வருகிறது. வேற யார் கிட்டயும் சொல்லாதீங்க” என்று கூறிவிடுவார். அனைவருக்கும் அன்பாக போட்டு மகிழ்வார். காரவேன் கலாச்சாரத்தை வெறுத்தார். அனாவசிய செலவுகளை செய்ய மாட்டார். உதவி இயக்குநர்கள் 50க்கும் மேற்பட்டோரை இயக்குநர்களாக வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.”

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியபோது, “என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் உண்டு என தெரியும். அண்ணன் விஜயகாந்த் எத்தனையோ நாட்கள் என்னை அழைத்து வயிறார உணவு அளித்திருக்கிறார். எவ்வளவோ படங்களுக்கு என்னை சிபாரிசு செய்திருக்கிறார். இன்று அவர் இல்லை எனும்போது ஒன்றும் புரியவில்லை. அப்படி ஒரு நல்ல ஆத்மா.

மிகுந்த கம்பீரத்துடன், ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்புடன் இருந்தவர். உடன் இருந்து அதையெல்லாம் பார்த்துவிட்டு, இப்போது அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அப்படியே அமர்ந்திருக்கிறேன். என்னுடைய தாய் போல தான் அவர், இப்போது அவரைச் சென்று பார்க்கக்கூடிய தைரியம் வருமா எனத் தெரியவில்லை. ஒன்று சொல்ல முடியும், போய் மீண்டும் எங்கள் கேப்டனாக வாருங்கள் என்று சொல்ல முடியும். அவரது ஒரு ரசிகனாக கண்ணீர் அஞ்சலியை அவரது பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறினார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது இரங்கல் பதிவில், “தேசிய முற்போக்கு திராவிடக் கழக கட்சியின் நிறுவனத்தலைவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், திரைப்பட நடிகருமான கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

அவர் என்னுடன் நெருங்கி பழகிய நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

அரசியலிலும் திரைத்துறையிலும் சாதித்த விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திமுக, அதிமுக என திராவிட கட்சிகளால் ஆளப்பட்ட தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றாக தேமுதிக அமைந்தது.

திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக வந்திருப்பதாக அறிவித்த விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2009 மக்களவை தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டார்.

கட்சி தொடங்கி ஓராண்டிலேயே 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் 8.4% வாக்குகள் பெற்றிருந்தார். 2009 மக்களவை தேர்தல்களில் 10.3% வாக்குகள் பெற்றிருந்தார்.

ஆனால், அதன் பின் கூட்டணி அரசியலில் ஈடுபட்டார். அப்போது, தேமுதிகவுக்கு கிடைத்த வந்த ஆதரவு சரிந்தது. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் 7.9% வாக்கு சதவீதமும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் 5.1% வாக்கு சதவீதம் பெற்றது தேமுதிக. அடுத்து நடைபெற்ற 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில்2.4% வாக்குகளும்., 2021ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் 0.43% வாக்குகள் பெற்றார்.

விஜயராஜ், விஜயகாந்தாக மாறியது எப்படி ?

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்ற விஜயகாந்த். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாமல், விஜயகாந்த் தினமும் நண்பர்களுடன் இணைந்து தியேட்டருக்குச் சென்று எம். ஜி. ஆர் திரைப்படங்கள் பார்ப்பது வழக்கம்.

“ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்களை ஒவ்வொரு காட்சியையும் விளக்குமளவிற்கு சினிமாவின் மீது ஆர்வமானார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் சென்னைக்குச் சென்று சினிமாவில் சாதிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்.” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

சென்னை வந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பல நிராகரிப்புகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.

திரைத்துறையில் சாதனை படைத்த விஜயகாந்த்

1979ம் ஆண்டு “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1980-ல் வெளியான “தூரத்து இடி முழக்கம்” மற்றும் 1981-ல் வெளியான “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார் . திரைப்படங்கள் மூலம், கிராமப்புறங்களில் விஜயகாந்துக்கு இருந்த ஆதரவின் காரணமாக அவர் கருப்பு எம் ஜி ஆர் என்று அழைக்கப்பட்டார். இந்த ஆதரவே, அரசியலில் அவரது ஆரம்ப கால வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது.

1991ம் ஆண்டு வெளியான “கேப்டன் பிரபாகரன்” என்ற திரைப்படத்தின் வெற்றியே, அவருக்கு கேப்டன் என்ற பட்டத்தை பெற்று தந்தது. 1992-ல் வெளியான “சின்ன கவுண்டர்” திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படமாகும்.

அவருக்கு 2001ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. 2002-ல் வெளியான “ரமணா” திரைப்படத்துக்காக தமிழ்நாடு அரசு திரைப்பட விருது பெற்றார்.

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவன் மகன்’, ‘கேப்டன் பிரபாகரன்’,’வானத்தைப் போல’, ‘தவசி’, ‘ரமணா’ என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தின் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கினார்கள். அவை பெரும்பாலும் வசூலைக் குவித்தன.

“54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்”

“தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்” என்று தயாரிப்பாளர் சிவா ஒருமுறை கூறியிருக்கிறார்.

“சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்” என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் டி. சிவா.

பிபிசி தமிழ்

Share.
Leave A Reply

Exit mobile version