இப்போதும் அடிக்கடி இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்துவார்கள். பதிலுக்கு ஹிஸ்புல்லாவின் செல்வாக்குப் பகுதியான தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேல்.

உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று… உலகின் மிகத் திறமையான உளவுத்துறை… இத்தனையும் இருந்தும் இஸ்ரேல் ஏன் இத்தனைக் காலம் ஹமாஸை சமாளிக்க முடியாமல் திணறியது? இன்று ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸா பகுதியில் ஆயிரக்கணக்கான

பாலஸ்தீனர்களை ஏன் கொல்கிறது? காரணம், இஸ்ரேலுக்கு அங்கு எதிரிகள் அதிகம். நாடுகளுடனான நேரடிப் போரில் சில நாள்களில் அதனால் வென்றுவிட முடியும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் ஈவு இரக்கமின்றி குண்டுமழை பொழிந்து குழந்தைகளைக்கூட சாகடிக்கின்றனர்.

 

இப்போதுகூட அவர்கள் வெறுமனே ஹமாஸுடன் மட்டுமே யுத்தம் செய்யவில்லை. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து ஒரு பக்கம் தாக்குதல் நடத்துகின்றன. அவர்களுக்குப் பதிலடி கொடுக்க டமாஸ்கஸ் மற்றும் அலப்போ நகரங்கள் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் பாதிக்கபட்ட இஸ்ரேலிய வீடு

இன்னொரு பக்கம் வடக்கே லெபனான் எல்லைக்கு அப்பால் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்துகின்றனர்.

ஹமாஸுக்கு இஸ்ரேல் ராணுவத்துக்குமான மோதல் ஆரம்பித்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி ஒரு மாத காலத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 40 பேர் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இறந்திருக்கின்றனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் கணிசமான இழப்பை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸருல்லாவை ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரௌரியும், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவர் ஜியாத் அல்-நகாலாவும் சமீபத்தில் சந்தித்தனர்.

எல்லோரும் இணைந்து இஸ்ரேலை வெற்றிகொள்வது எப்படி என்று அவர்கள் உரையாடியதாக சொல்லப்பட்டது.

ஹமாஸை விட தனது மிக ஆபத்தான எதிரியாக ஹிஸ்புல்லா அமைப்பையே பார்க்கிறது இஸ்ரேல். ஹிஸ்புல்லா ஒரு விநோதமான அமைப்பு. அது ஓர் அரசியல் கட்சியாகவும் இருக்கிறது, ஆயுதம் தாங்கிய அமைப்பாகவும் இருக்கிறது.

தற்போது லெபனான் நாட்டை ஆளும் கூட்டணியின் அங்கமாக இருக்கிறது ஹிஸ்புல்லா. அதன் ஆயுதப்படையை அரசே அங்கீகரித்து சட்டம் இயற்றியுள்ளது. சொல்லப் போனால், லெபனான் ராணுவத்தைவிட பெரிய அமைப்பாக அங்கு ஹிஸ்புல்லா இருக்கிறது.

கிட்டத்தட்ட ஆயுதப் பயிற்சி பெற்ற ஒரு லட்சம் வீரர்கள் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். பல நாடுகளில் தீவிரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டாலும், லெபனானில் தீவிரமாகச் செயல்படுகிறது ஹிஸ்புல்லா. சொந்தமாக டி.வி ஸ்டேஷன் நடத்தும் அளவுக்கு செல்வாக்காக இருக்கிறது.

ஈரான் மற்றும் சிரியா ஆதரவுடன் வளர்ந்தது அந்த அமைப்பு. ஹிஸ்புல்லாவிடம் ஒன்றரை லட்சம் ராக்கெட்கள் இருப்பதாக இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது.

இதுதவிர நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அந்த அமைப்பிடம் உள்ளன. சமீப ஆண்டுகளில் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஹைடெக் அமைப்பாகவும் அது வளர்ந்திருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2006-ம் ஆண்டில் இஸ்ரேல் ராணுவத்துடன் 34 நாள்கள் போர் செய்த அனுபவம் அதற்கு உண்டு.

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவிக்கச் சொல்லி போராட்டம்

இப்போதும் அடிக்கடி இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்துவார்கள். பதிலுக்கு ஹிஸ்புல்லாவின் செல்வாக்குப் பகுதியான தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேல்.

நவம்பர் 3-ம் தேதி தன் ஆதரவாளர்களுக்கு வீடியோ மூலம் உரை நிகழ்த்தினார் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸருல்லா. அவர் இஸ்ரேல் மீது போர் அறிவிப்பு செய்யப் போகிறார் என்று பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆனால், ஹமாஸின் நெருங்கிய கூட்டாளியான அவர் வெளிப்படையான போர் அறிவிப்பு செய்யவில்லை. ‘‘நாங்கள் ஏற்கெனவே இஸ்ரேல் மீது போர் தொடங்கிவிட்டோம்.

காஸாவில் நேரடியாக தரைப்படைகளை அனுப்பி இஸ்ரேல் ஆக்கிரமித்துப் போரிட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்’’ என்ற எச்சரிக்கையுடன் மட்டும் அவர் நிறுத்திக்கொண்டார்.

காலம் காலமாக இப்படி பல அமைப்புகளுடன் இஸ்‌ரேல் மோதி வருகிறது. அவற்றுள் சில:

அல்-அக்ஸா மார்டயர்ஸ் பிரிகேட்ஸ் (al-Aqsa Martyrs’ Brigades):

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் செயல்பட்டுவந்த இந்த அமைப்பை இஸ்‌ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்றவை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளன.

யாசர் அராபத் ஆரம்பித்த ஃபதா அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுத்து, பாலஸ்தீன இடைக்கால அரசாங்கத்தை நடத்திவருகிறது.

பாலஸ்தீனப் பிரச்னைக்கு அந்த இடைக்கால அரசு மூலம் தீர்வு காணமுடியாத கோபத்தில், ஃபதா கட்சியின் தீவிரமான தலைவர்கள் சிலர் இணைந்து அல்-அக்ஸா மார்டயர்ஸ் பிரிகேட்ஸ் அமைப்பை நிறுவினர்.

இந்த அமைப்புக்கு ஃபதா கட்சியிலிருந்து நிதியுதவி போவதை இஸ்‌ரேல் கண்டுபிடித்தது. பாலஸ்தீனப் பிரதமராக இருந்த அகமது குரேய் கடந்த 2004-ம் ஆண்டில் வெளிப்படையாகவே, ‘‘எங்கள் ஃபதா கட்சியின் ஓர் அங்கம்தான் அல்-அக்ஸா மார்டயர்ஸ் பிரிகேட்ஸ்.

அவர்களைப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. அந்தக் குழுவின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுப்பொறுப்பு ஏற்கிறோம்’’ என்று அறிவித்தார்.

அல்-அக்ஸா மார்டயர்ஸ் பிரிகேட்ஸ் (al-Aqsa Martyrs’ Brigades) – 2010 File Photo

இஸ்‌ரேலில் பல தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திய அல்-அக்ஸா மார்டயர்ஸ் பிரிகேட்ஸ் அமைப்புடன் கடந்த 2007-ம் ஆண்டு இஸ்ரேல் அரசு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது.

இதன்படி அந்த அமைப்பின் 300 பேர் பாலஸ்தீன இடைக்கால அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். அவர்கள் பாலஸ்தீன பாதுகாப்புப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இரண்டு அல்-அக்ஸா அமைப்பினரை இஸ்ரேல் போலீஸ் கைது செய்ய, சமாதான உடன்படிக்கையிலிருந்து விலகியது அந்த அமைப்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரு தாக்குதலை அல்-அக்ஸா நடத்தியது.

The Popular Resistance Committees:

பாலஸ்தீன இடைக்கால அரசானது, இஸ்ரேல் நாட்டின் ஏஜென்ட் போல செயல்பட்டு பாலஸ்தீன மக்களை ஒடுக்குகிறது என்ற கோபத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது.

பாலஸ்தீனத்தில் உதிரிக் குழுக்களாக செயல்பட்ட பல ஆயுதக்குழுக்களும் இணைந்து அமைத்த கூட்டணி போன்றது இது. யாசர் அராபத் உருவாக்கிய ஃபதா கட்சியில் இருந்த ஜமால் அபு சம்ஹதானா என்பவர் இந்த அமைப்பை நிறுவினார்.

இது ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி மற்றும் ஆயுத உதவியில் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இதன் ஆயுதக்குழுக்கள் பல்வேறு தற்கொலைப்படைத் தாக்குதல்களை இஸ்ரேலிலும் பாலஸ்தீனப் பகுதியிலும் நடத்தின.

யூதர்களை மட்டுமின்றி, பாலஸ்தீன இடைக்கால அரசில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட இஸ்லாமியர்களையும் மக்கள் விரோதிகளாகக் கருதி அழித்தது இந்த அமைப்பு.

குறிப்பாக யாசர் அராபத்தின் உறவினர் ஒருவரையே கொன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காஸா பகுதியில் சுரங்கங்களை ஏற்படுத்தி, அவற்றின் வழியே இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் போர் உத்தியை ஆரம்பித்து வைத்தது இந்த அமைப்புதான்.

கடந்த 2013-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இதன் தலைவர்கள் பலரையும் கைது செய்து, இதன் நடவடிக்கைகளை முடக்கியது.

என்றாலும், காஸா பகுதியில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளுக்கு அடுத்து மூன்றாவது வலிமையான அமைப்பாக இது கருதப்படுகிறது.

தற்போது காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம், The Popular Resistance Committees ஆயுதப் பிரிவின் தலைவரான ரஃபாத் அபு ஹிலால் என்பவரைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

Palestinian militants from Al Nasser Brigades, an armed wing of the Popular Resistance Committees (PRC)

பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத்:

பாலஸ்தீனப் பகுதியில் இயங்குவதிலேயே மிகவும் தீவிரமான குழுவாக இதை இஸ்ரேல் கருதுகிறது.

ஹமாஸை விடவும் இஸ்ரேல் என்ற தேசத்தைக் கடுமையாக வெறுப்பவர்கள் இந்த அமைப்பினர்.

ஹமாஸ் அமைப்புடன் கூட்டணி அமைத்து பல தாக்குதல்களை இப்போது நிகழ்த்தி வருகிறது இஸ்லாமிக் ஜிகாத். கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்‌ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூரத் தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினரும் இணைந்து பங்கேற்றனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு சில பணயக் கைதிகளைப் பிடித்து வந்தனர்.

எகிப்து நாட்டில் எகிப்தியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு உருவானபோது அதில் பாலஸ்தீனர்களும் இணைந்து பங்கேற்றனர்.

எகிப்து அதிபர் அன்வர் சதாத்தை அந்த அமைப்பு கொன்றது. அதைத் தொடர்ந்து, அதிலிருந்த பாலஸ்தீனர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

அவர்கள் காஸா திரும்பிவந்து பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத்தை ஆரம்பித்தனர். ஆரம்ப கட்டங்களில் சிரியா இதற்கு நிதியுதவி தந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்கள் கொடுத்து பயிற்சியும் அளித்தனர். கடந்த 2014 முதல் ஈரான் அரசு இதற்குப் புரவலராக இருக்கிறது.

ஹமாஸ் அமைப்புக்கு காஸாவைத் தாண்டி மேற்குக்கரை பகுதியில் பெரிதாக செல்வாக்கு இல்லை. ஆனால், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் இரண்டு பகுதிகளிலும் இயங்கிவருகிறது.

கடந்த 1984 முதல் இஸ்ரேல் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திவரும் அமைப்பு இது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் இதன் தலைமை அலுவலகம் இருக்கிறது. லெபனான், ஈரான் மற்றும் சூடான் நாடுகளில் அலுவலகங்கள் வைத்து இயங்குகிறது இந்த அமைப்பு.

‘வெளிநாட்டில் எங்கள் நம்பர் 1 எதிரி ஹிஸ்புல்லா அமைப்பு என்றால், உள்நாட்டில் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புதான்’ என்று இஸ்ரேல் உளவுத்துறை அறிவித்திருக்கிறது.

இதை நிறுவிய Fathi Shaqaqi என்பவரை கடந்த 95-ம் ஆண்டு மால்டா நாட்டில் வைத்து இஸ்ரேல் உளவுத்துறை கொன்றது. தற்போது இந்த அமைப்பின் செக்ரட்டரி ஜெனரலாக ஜியாத் அல்-நகாலா (Ziyad al-Nakhalah) இருக்கிறார்.


பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத்

இதன் பல தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டாலும், 30 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்குகிறது.

இந்த அமைப்பில் சுமார் 8,000 ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் ‘காசிம் ராக்கெட்’ என்ற பெயரில் ராக்கெட்களை உருவாக்கி இஸ்ரேல் மீது ஏவுவதைப் போலவே பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தனியாக அல்-குத்ஸ் ராக்கெட் என்ற பெயரில் ராக்கெட்களை உருவாக்கித் தாக்குகிறது.

ஹமாஸ் அமைப்பே இடையில் சில ஆண்டுகள் இஸ்‌ரேலுடன் சமாதானம் பேசி அமைதியாக இருந்தபோதும்கூட பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தாக்குதல் நடத்தியபடி இருந்தது.

அதனால்தான் இஸ்‌ரேல் இதைக் கண்டு பயப்படுகிறது. பாலஸ்தீனப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு கோடைக்கால முகாம் நடத்துகிறது இந்த அமைப்பு. ‘யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடப்பது நிலத்துக்கான மோதல் மட்டும் இல்லை. இது மத மோதல்’ என்று அந்த முகாமில் பாடம் எடுக்கிறார்கள்.

யூத எதிர்ப்பை குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். ராணுவச் சீருடையை அணிய வைத்தும், தற்கொலைப்படை நபர் போல பெல்ட் கட்டியும் ஒத்திகை பார்க்க வைக்கிறார்கள். இதுதான் இஸ்ரேலை இன்னும் அச்சத்தில் ஆழ்த்துகிறது.

சபிரீன் இயக்கம் (The Sabireen Movement):

பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பிலிருந்து பிரிந்துவந்து ஹிஷாம் சலீம் என்பவர் ஆரம்பித்த அமைப்பு. இடையில் இஸ்லாமிக் ஜிகாத்துக்கும் ஈரான் அரசுக்கும் மோதல் வந்தபோது, ஈரானே ஜிகாத்தை உடைத்து சபிரீன் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தது. இதுவும் இஸ்‌ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியே வளர்ந்தது.

சபிரீன் இயக்கம் (The Sabireen Movement)

தங்களுக்குப் போட்டியாக இதை ஈரான் வளர்க்கிறதோ என்ற சந்தேகம் ஹமாஸ் அமைப்புக்கு எழுந்தபோது சபிரீன் இயக்கம் சிக்கலுக்கு ஆளானது.

2015-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இதனை ‘காஸா மக்களுக்கு எதிரான அமைப்பு’ என்று அறிவித்தது.

இந்த அமைப்பினரைக் கைது செய்து, அவர்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது ஹமாஸ். அத்துடன் இந்த அமைப்பு முடங்கிப் போனது. ஹிஷாம் சலீமுக்கு ஈரான் அடைக்கலம் கொடுத்து அழைத்துக்கொண்டது. இந்த அமைப்பில் இருந்த பலரும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத்தில் சேர்ந்துவிட்டனர்.

பாலஸ்தீனப் பகுதியில் இயங்கும் இதுபோன்ற மற்ற அமைப்புகள் எதற்கும் இல்லாத தனித்துவம் ஹமாஸ் அமைப்புக்கு உண்டு. அதுதான் இன்று யுத்தக்களத்தில் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக அதை நிறுத்தியிருக்கிறது.

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 10: Mossad மட்டுமா? உலகம் முழுக்க நீண்டிருக்கும் இஸ்ரேலின் உளவுக்கரங்கள்!

Share.
Leave A Reply

Exit mobile version