இந்தியாவின் ரயில்வே துறை மிக வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, புல்லட் ரயில்களை (Bullet Trains) இயக்கவும் இந்தியா தயாராகி கொண்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத் இடையே இயக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்திய மக்கள் மத்தியில் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்த புல்லட் ரயில், வரும் 2026ம் ஆண்டிற்குள்ளாக பயணிக்க தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த ஒரு புல்லட் ரயிலுடன் இந்திய அரசு நிற்க போவதில்லை. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை தொடர்ந்து, சென்னை-பெங்களூர்-மைசூர் வழித்தடத்தில் மேலும் ஒரு புல்லட் ரயில் (Chennai-Bangalore-Mysore Bullet Train) இயக்கப்படவுள்ளது.

இது ஏற்கனவே நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

தென் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படும் இந்த புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக தற்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புல்லட் ரயில் திட்டம், 463 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது உள்ள தண்டவாளங்களில் இந்த புல்லட் ரயிலை இயக்க முடியாது.

எனவே இதற்கென தனியாக பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த தனி பாதையில், மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இருக்கும்.

மெட்ரோ ரயில்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். மெட்ரோ ரயில்களுக்கு என எப்படி மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் என தனி வழித்தடம் இருக்கிறதோ, அதேபோல் இந்த புல்லட் ரயிலும் தனி வழித்தடத்தில் பயணிக்கும்.

இந்த பாதை, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் வழியாக செல்லும்.

தமிழ்நாட்டில் 132 கிலோ மீட்டர், ஆந்திராவில் 73 கிலோ மீட்டர் மற்றும் கர்நாடகாவில் 258 கிலோ மீட்டர் என ஒட்டுமொத்தமாக 463 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்கப்படவுள்ளது.

இதில் சுரங்கம் அமைக்கப்படவுள்ள தொலைவு சுமார் 30.50 கிலோ மீட்டர் ஆகும். சென்னையில் 2.50 கிலோ மீட்டர்,

சித்தூரில் 12 கிலோ மீட்டர், பெங்களூர் நகர பகுதியில் 14 கிலோ மீட்டர் மற்றும் பெங்களூர் ரூரல் பகுதியில் 2 கிலோ மீட்டர் என மொத்தம் 30.50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

இந்த புல்லட் ரயில் மொத்தம் 11 இடங்களில் நின்று செல்லும். அவை சென்னை, பூந்தமல்லி, சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா மற்றும் மைசூர் ஆகியவை ஆகும்.

இந்த பகுதிகள் மட்டுமல்லாது, இதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புல்லட் ரயில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் பயணிக்க கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

எனினும் இதுவும் அதிவேகம்தான் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து மைசூருக்கு வெறும் அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து மைசூர் செல்வதற்கு வெறும் 1.30 மணி நேரம் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த புல்லட் ரயில் திட்டம் தென் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்பது எங்களுடைய கருத்து.

ஆனால் இது பிரம்மாண்டமான திட்டம் என்பதால், அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த புல்லட் ரயில் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version