ஹைதராபாத்தில் விநாயகருக்கு படைக்கப்பட்ட ‘கணேஷ் லட்டு’ ஏலம் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
பந்தலகுடா ஜாகிர் அருகே கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் உள்ள விநாயக மண்டபத்தில் படைக்கப்பட்ட லட்டு ஒரு கோடியே 87 லட்சம் ரூபாக்கு விற்பனையானது. இது ஹைதராபாத்தில் சாதனை அளவாகும்.
கடந்த ஆண்டும் அங்கே ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு லட்டு ஏலம் போனது.. இந்த வில்லாக்களில் ‘பணக்காரர்கள்’ அதிகமாக இருக்கிறார்களா? இங்கு ஏலம் எப்படி நடக்கிறது?
லட்டு ஏலம் எப்படி நடக்கிறது?
ரிச்மண்ட் வில்லாவில் நடக்கும் லட்டு ஏலம் ஒரு வித்தியாசமான கதை. இந்த லட்டு ஏலத்தில் ஒருவர் மட்டும் பங்கேற்கமாட்டார்கள்.
சுமார் 150 பேர் நான்கு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். நான்கு குழுவினரும் ஏலம் கேட்பார்கள். ஆனால், ஏலத்தில் வென்ற குழு மட்டுமல்லாமல், ஏலத்தில் வெல்லாத குழுக்களும் அத்தொகையை செலுத்த வேண்டும். அதுதான் இங்கே ‘ட்விஸ்ட்’.
அதாவது, நான்கு குழுக்கள் கொண்ட ஒரு குழு 25 லட்சத்துக்கும், மற்றொரு குழு 26 லட்சத்துக்கும், மற்றொரு குழு 27 லட்சத்துக்கும், கடைசிக் குழு 28 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தால், 28 லட்சத்திற்கு கேட்ட குழுவுக்கு ஏலம் செல்லும். இருப்பினும், நான்கு குழுக்களும் தங்கள் ஏலத் தொகையை குழுவிடம் செலுத்த வேண்டும்.
ஆகவே, ரிச்மண்ட் வில்லாவில் நான்கு குழுக்களும் ‘கணேஷ் லட்டு’க்கு கொடுத்த மொத்தத் தொகை ஒரு கோடியே 87 லட்சம்.
வெற்றி பெற்ற குழுவிற்கு மட்டுமே அந்த லட்டு சொந்தமில்லை. வில்லாக்களில் உள்ள அனைவருக்கும் லட்டு விநியோகிக்கப்படுகின்றது.
இந்த பணத்தை வைத்து என்ன செய்வார்கள்?
லட்டு ஏலத்தில் கிடைக்கும் பணம் அனைத்தும் சேவைப் பணிகளுக்கு செலவிடப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூறுகிறது. இதற்காக ஆர்.வி. தியா அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த லட்டு ஏலத்தில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் அந்த அறக்கட்டளைக்கு செல்லும்.
நான்கு குழுக்கள் சேர்ந்து இந்த ஏல பணத்தை வழங்கும்
அறக்கட்டளையில் உள்ள தன்னார்வலர்கள் இந்த பணத்தை ஹைதராபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சேவைப் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
பிற தொண்டு நிறுவனங்களுக்கு செய்யப்படும் உதவி பணமாக வழங்கப்படுவதில்லை. மாறாக, பொருட்கள் வடிவில் தான் வழங்கப்படுகிறது.
தங்கும் வசதி, மருத்துவக் கட்டணம், மாதாந்திர பொருட்கள் போன்றவை இந்த பணத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அந்த அறக்கட்டளை உதவுகிறது.
“இந்த தொண்டு நிறுவனங்கள் அவசர கதியில் தேர்ந்தெடுக்கப்படாது. இதுதொடர்பாக ஒரு குழுவாக நாங்கள் நிறைய ஆய்வு செய்கிறோம்.
இத்தகைய அரசு-சாரா தொண்டு நிறுவனங்களை நாங்கள் நேரில் சென்று பார்க்கிறோம். அவர்களுடைய கணக்குகளை சரிபார்ப்போம்.
இதில், எந்த சூழ்நிலையிலும், எங்கும் முறைகேடு நடக்காது. நாம் கொடுக்கும் பணத்தில் 100% அவர்களுக்குத் தேவை இருக்க வேண்டும், அதை அவர்கள் 100% பயன்படுத்துவார்கள் என்று நம்பிய பிறகே செலவு செய்கிறோம்” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூறுகிறது.
என்னென்ன சேவைகள் செய்யப்படுகின்றன?
“பணத்தை செலவு செய்த பின்னர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். எல்லாவற்றையும் பதிவு செய்து, எங்களுக்கு பணம் கொடுத்த நன்கொடையாளர்களுக்கு அந்த விவரங்களை வழங்குவோம்.
மற்ற தொண்டு நிறுவனங்களைப் போலன்றி, நாங்கள் நன்கொடைகளை எங்களின் இயக்கச் செலவுகளுக்குப் பயன்படுத்துவதில்லை.
அதாவது நாம் உதவப்போகும் என்.ஜி.ஓக்கள் நல்லதா இல்லையா, பணம் நன்றாக செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பார்ப்பதற்கு ஆகும் செலவும் மிக அதிகம். இதில் நமது பயணம் போன்ற செலவுகளும் அடங்கும்.
ஆனால் அதையெல்லாம் சொந்தப் பணத்தில்தான் செய்வோம்” எனக்கூறும் அறக்கட்டளை தன்னார்வலர் ரஞ்சன், நன்கொடையாளரின் பணம் 100% தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடையும் என்று கூறி இந்த செயல்முறையை விளக்கினார்.
“நன்கொடை சரியான இடத்திற்குச் செல்லுமா என்று தெரியாமல் பலர் தானம் செய்ய விரும்புவதில்லை. தானம் செய்ய உங்களுக்கு வசதி இருந்தாலும், அது சரியான இடத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்ய வழியில்லை.
மேலும், நன்கொடை வழங்குவதற்கு முன்பாகவும் ஏதேனும் செலவு செய்ய வேண்டிவரும் என்ற சந்தேகமும் எழுகிறது. எங்கள் செலவில் உங்கள் பணத்தை 100% பிரச்னை இல்லாமல் சரியான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் பொறுப்பு.
விநாயகர் வழிபாட்டை முன்னிட்டு லட்டு ஏலம் விடுகிறோம். எங்கள் வில்லாக்களில் உள்ள அனைத்து மதத்தினரும் இதில் பங்கேற்கின்றனர்.
சுமார் 150 பேர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் இந்தப் பணம், ஆண்டு முழுவதும் செலவிடப்படுகிறது. வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார் ரஞ்சன்.
உத்தராகண்ட், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 150 குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தில் பாதி இந்த லட்டு ஏலப் பணத்தில் இருந்து செலுத்தப்படுவதாக கமிட்டி தெரிவித்துள்ளது. கபில்தேவ் நடத்தும் என்ஜிஓ சார்பில் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை கட்டுவதற்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று ரஞ்சன் கூறினார்.
ஏலம் புகழ் பெற்றது எப்படி?
‘‘இங்கே 2016-ல் 25 ஆயிரம் ரூபாய்க்கு லட்டு ஏலம் தொடங்கியது. அப்போதும் நாங்கள் சேவைக்காக செலவு செய்தோம். நாங்கள் செலவழித்த விதம், கமிட்டியின் செயல்பாடு, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பார்த்து ஏலத்தில் பணம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
2016-ல் 25 ஆயிரம், பிறகு 2 லட்சம், 10 லட்சம், 40 லட்சம், 60 லட்சம், கடந்த ஆண்டு ஒரு கோடியே 20 லட்சம், இந்தாண்டு ஒரு கோடியே 87 லட்சத்திற்கு ஏலம் சென்றது” என்று ரஞ்சன் விளக்கினார்.
ஏலத்தில் பங்கேற்கும் அனைவரும் ஒரே தொகையை வழங்குவதில்லை. சேவையை பார்த்து வில்லாவுக்கு எதிரே உள்ள உள்ள டீக்கடை உரிமையாளர் 6 ஆயிரம் ரூபாயை அளித்தது, தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்ததாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமை ஹுசைன் நகரில் ஆயிரக்கணக்கிலான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன
இந்த வில்லாக்களில் தெலுங்கு மக்களுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வசிக்கின்றனர்.
தங்களின் விருப்பத்திற்கேற்ப இந்த அறக்கட்டளைக்காக அவர்கள் பணியாற்றுகின்றனர். பெண்கள் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அறங்காவலர்களாக உள்ளனர்.
அவர்கள் கார்பரேட் சந்தாக்களை பெற்றுக்கொள்வதில்லை. தங்களின் சொந்தப் பணத்தை வழங்குபவர்களிடமே வாங்குகின்றனர். இவை அனைத்தும் rvdiyatrust.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ரிச்மண்ட் மட்டுமின்றி ஹைதராபாத்தில் பல இடங்களில் லட்டு ஏலம் பெரிய அளவில் நடைபெற்றது. ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பாலாபூர் லட்டு இம்முறை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த லட்டுவை பாஜக தலைவர் கொலானா சங்கர ரெட்டி ஏலத்தில் எடுத்தார். கடந்த ஆண்டு 27 லட்சத்துக்கு இந்த லட்டு விற்பனையானது. 1994-ஆம் ஆண்டு முதல், இந்த லட்டு ஏலம் விடப்படுகிறது.
மடப்பூர் மை ஹோம்ஸ் பூஜா சொசைட்டியும் லட்டுவை அதிக விலைக்கு விற்றது. இந்த லட்டுவை கொண்டப்பள்ளி கணேஷ் என்பவர் 29 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த லட்டு கடந்த ஆண்டு 25 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் சென்றது.
– பிபிசி செய்தி-