நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது அதிக நம்பிக்கை வைத்து நிறைவேற்று அதிகாரத்தையும் சட்டவாக்க அதிகாரத்தையும் புதிய ஆட்சியாளர்களிடம் வழங்கிவிட்டார்கள். முன்னைய ஆட்சியாளர்களின் அதிகார முறைகேடுகள், ஊழல், இலஞ்சம், தவறான பொருளாதார அணுகுமுறைகள், தேவையற்ற அரச செலவுகள் போன்ற பல்வேறு குறைபாடுகளின் விளைவாகவே நாடு கையறு நிலைக்கு தள்ளப்பட்டது என்றும், எனவே ஆட்சியதிகாரத்தை தம்மிடம் தந்தால் இவை எதுவுமற்ற சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என்றும் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தே மக்கள் அவர்களை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவற்றுள்ளும் குறிப்பாக மத்திய வங்கி மோசடி, ஆட்சியாளர்களினால் தவறான வழிகளில் பெறப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்களை நாட்டுக்கு கொண்டுவருதல், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், சர்வதே நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுபரிசீலனை, அரிசி போன்ற முக்கிய உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் இறக்குமதியைத் தடைசெய்தல், உணவுப் பொருட்கள், மின்சாரம் மற்றும் எரிபொருட்களின் விலைகளைக் குறைத்தல் போன்றனவே தேசிய மக்கள் சக்தியின் தேர்தற்கால முக்கிய வாக்குறுதிகளாக அமைந்திருந்தன.
இவற்றை நம்பி ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்கள் இப்போது அவற்றை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மக்களின் இயல்பான இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடுமாறத் தொடுங்கிவிட்டது போல தெரிகிறது.
புதிய அரசாங்கந்தானே விட்டுப்பிடிப்போம் என மக்கள் பொறுமை காத்தாலும்கூட எதிர்க்கட்சிகள் விடுவதாகவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தற் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் அதற்கெதிரான அவர்களின் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தி கேள்விகளை அவர்கள் மீது அடுக்கிவருவதை அவதானிக்க முடிகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகமுக்கியமான ஒன்று சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்பது.
அவற்றுள் வரிக்குறைப்பு, சம்பள அதிகரிப்பு, மக்களுக்கான மானியங்கள் போன்றவை முக்கியமாக மக்களால் எதிர்பார்க்கப்படுபவை. ஆனால் நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் எந்தவித மாற்றங்களோ அன்றி மீளாய்வு தொடர்பான எந்தவித முன்னெடுப்புகளோ இல்லாமல் அவ்வாறே அது தொடர்ந்து பேணப்படுகிறது.
உண்மையில் நாணய நிதியத்துடனான உடன்படிக்கை வாசகங்களை மீளாய்வு செய்வது இலகுவானதொன்றல்ல. சில நெகிழ்வுத்தன்மை இருப்பினும் அந்நிதியம் தான் குறித்த அடிப்படை பொருளாதார இலக்குகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் ஒருபோதும் சம்மதிக்காது.
வரிக்குறைப்பு, சம்பள அதிகரிப்பு மற்றும் மானியங்கள் அரசின் வரவு-செலவுத்திட்டப் பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடியவை. நாட்டின் வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5% க்குக் கீழ் மட்டுப்படுத்த வேண்டுமென்பது நிதியத்தின் மைய நிபந்தனைகளில் ஒன்று. எனவே அதனைப் பாதிக்கக் கூடிய சம்பள அதிகரிப்பு, வரிக்குறைப்பு, மானியங்கள் அல்லது அதுபோன்ற எவற்றிலும் அந்நிதியம் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கும். அதை இலங்கை அரசாங்கம் மீறுமானால் அதன் கடனைத் தொடர்ந்து பெறுவது கடினம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தந்தின் மூலம் சரியான தடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நாட்டை அந்நிதியத்துடன் முரண்படுவதன் மூலம் நாட்டுக்கு மட்டுமல்ல தமது ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்பது தேசிய மக்கள் சக்தியினருக்குத் தெரியாததொன்றல்ல.
தேர்தலில் வெற்றி பெறுவதே பிரதான இலக்கு என்பதால் பரப்புரையில் வீறாப்பாக பேசி விட்டதன் விளைவை இப்போது அவர்கள் உணர்கிறார்கள். சம்பள உயர்வைக் கோரிய அரச பணியாளர்களுக்கு புதிய வரவு-செலவுத்திட்டத்தில் அது வழங்கப்படும் என்று கூறியதால் தற்காலிகமாக அமைதியடைந்துள்ளார்கள். வரும் வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்ச்சி ஒன்று இடம்பெறும் எனினும், அது அரச பணியாளரை எவ்வளவு தூரம் திருப்திப்படுத்தும் வகையில் அமையும் என்பது கேள்விக்குறி.
அதுபோலவே வரிக்குறைப்புக்கான வாய்ப்பு குறைவு என்பதுடன், சில துறைகளில் வரியதிகரிப்புக்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. இதேவேளை, நாட்டில் ஐந்து வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் பட்டதாரிகள் உட்பட அதிகரித்தளவில் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். மறுபுறத்தில் அரச துறைகளில் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் உள்ளதால் அதனை எப்படிக் குறைப்பது என்று அரசாங்கம் சிந்திக்கிறது. அதனால் புதிய அரசாங்கத்துக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தின்பின் சவால்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கும் எனலாம்.
அதேபோல தேர்தல் காலத்தில் வீறாப்புடன் மக்ளுக்கு வாக்களித்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், அரசியல்வாதிகளின் ஊழல்கள் போன்றவற்றைக் கண்டறிந்து தண்டிப்போம் போன்ற விடயங்களும் தாங்கள் நினைத்துபோல அவ்வளவு இலகுவான விடயமல்ல என்பதை புதிய அரசாங்கம் உணரத் தொடங்கியுள்ளது.
“போதாக்குறைக்கு சும்மா எங்கள் மீது சேறுபூசுவதை விடுத்து முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று நாமல் ராஜபக்ஷ புதிய ஆட்சியாளருக்கு சவாலும் விடுத்துள்ள ஒரு சூழ்நிலையில் அவ்விடயங்களிலான முன்னெடுப்புகள் மிக மெதுவாகவே நகர்வதை அறியமுடிகிறது.
தற்போதைக்கு அது தொடர்பான விசாரணைகள் நடப்பதாக வெளிப்படுத்தப்பட்டாலும் கூட குறிப்பிட்ட காலத்திற்குள் சூத்திரதாரிகளை நீதிமன்றின் முன் நிறுத்தாவிடில் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் இழக்கவேண்டி வரும்.
விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவோ அல்லது வாகனங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலமோ அல்லது சட்டரீதியற்ற இறக்குமதி வாகனங்கள் சிலவற்றைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது சிலரைக் கைது செய்து பிணையில் விடுவதன் மூலமோ மக்களை நீண்டகாலம் ஏமாற்ற முடியாது.
இறுதி நேரத்தில் ரணிலினால் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட மதுக்கடைகளுக்கான அனுமதியை இரத்துச் செய்வோம், அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவோம் என்று கூறியவர்களால் அந்தச் சிறிய விடயத்தையே சரியாகக் கையாள முடியாத போது ஈஸ்டர், மத்திய வங்கி,ராஜபக்ஷ ஊழல்கள் போன்ற சிக்கலான விடயங்களை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளப் போகிறார்கள் என்ற ஐயம் மக்களிடையே எழுவதைத் தடுக்கமுடியாது.
தேர்தல் பரப்புரைகளில் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்களித்தது போல் அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான சாத்தியம் புதிய வரவு- செலவுத் திட்டத்தில் குறைவு என்பதை தற்போது அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால நிதியறிக்கை கட்டியம் கூறி நிற்கிறது.
இவ்வறிக்கையின்படி நான்கு மாதங்களுக்கான ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட 1400 பில்லியன் ரூபா. இதேயளவுதான் ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்றும் அப்படியானால் நீங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதி எங்கே போனது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் கேள்வியெழுப்பியுள்ளது இங்கு அவதானிக்கத்தக்கது.
அதுமட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து நாம் கடன்பெற மாட்டோம், தரகுக்கூலி அடிப்படையில் முன்னர் பெறப்பட்ட ஐ.எஸ்.பி கடனை நாம் திருப்பிச் செலுத்தமாட்டோம் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தி அக்கடனை அடைப்பதறகாகவே 1000 மில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கியுள்ளது.
அதுமட்டுமன்றி இந்நான்கு மாதத்தில் உச்ச அளவாக 4000 மில்லியன் ரூபா கடனை உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெறுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி அத்தியாவசியமற்ற துறைகளான புத்தசாசன அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றுக்கு 270 மில்லியன், 700 மில்லியன் ரூபாவுக்கு குறையாமல் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் முக்கிய துறைகளான விவசாயம் 67 பில்லியன், கைத்தொழில் 5 பில்லியன், கடற்றொழில் 7 பில்லியன், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு 4 பில்லியன் ரூபாக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கணக்கறிக்கையில் பெரும்பகுதி பட்ட கடனை அடைப்பதற்கான முதலும் வட்டியுமாக அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் மொத்த செலவான 2600 பில்லியனில் கிட்டத்தட்ட 1200 பில்லியன் ரூபா கடன்மீள் கொடுப்பனவாக அமைந்துள்ளது. இது மொத்தச் செலவினத்தில் 46% க்கும் மேலானது. அதைவிட இன்னும் திருத்தியமைக்கப்படாத கடன் மீள்கொடுப்பனவுக்காக 1000 பில்லியன் ரூபா வேறாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து கடனிலிருந்து நாட்டை மீட்போம் என்று கூறியவர்கள் தொடர்ந்தும் நாட்டைக் கடனிலேயே மிதக்க விடப்போகிறார்கள் என்பது மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் நாடு இன்றுள்ள பொருளாதார நிலையில் அரசாங்கத்துக்கு இதைத்தவிர வேறு தெரிவுகள் எவையுமில்லை.
இதேவேளை எதிர்பார்க்காத வகையிலான செலவுகளும் அரசாங்கத்துக்குச் சவாலாக மாறிவருகிறது. சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏறுமுகமாக உள்ளன. குறிப்பாக அரிசி, தேங்காய் போன்றவற்றின் விலைகள் சாதாரண மக்களுக்குச் சவாலாக மாறிவிட்டன. அரிசியின் இறக்குமதியை நிறுத்துவோம் என்று கூறியவர்களே அதனை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அதுமட்டுமன்றி தற்போதைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டயீடு வழங்க வேண்டியிருப்பதுடன், எதிரகாலத்தில் அரிசிக்கான விலை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. தேங்காயும் அப்படியே.
மறுபுறத்தில் என்றுமில்லாத வகையில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு ரில்வின் சில்வா கூறிவரும் கருத்துக்கள் பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது. ரில்வின் சில்வாவின் கூற்றுக்கள் தொடர்பாகத் தமிழ் மக்களைச் சமாளிப்பதும் அரசுக்கு இன்னொரு சவாலாக மாறிவருகிறது.
தேர்தல் காலத்தில் வெற்றி ஒன்றே இலக்கு என்றவகையில் வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளிவீசுவது புதினமானதல்ல. ஆனால் வழமையாக அவ்வாறு ஏமாற்றப்பட்ட மக்கள் வழமைக்கு மாறாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது அவர்கள் மேலுள்ள நம்பிக்கையால்தான்.
அவர்களும் யதார்த்தத்தைப் புரிந்தும் புரியாமலும் மக்களுக்கு வாக்குறுதியளித்து ஆட்சியையும் கைப்பற்றிவிட்டார்கள். ஆனால் சொல்வது எளிது செய்வது கடினம் என்பது இப்போதுதான் அவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது. இப்போது உள்ளதைவிட வருங்காலத்தில் இன்னும் பல புதிய சவால்களுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கவேண்டி ஏற்படும். இப்போதே திணறத் தொடங்கியுள்ள அரசாங்கம் அப்போது தாக்குப்பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
கந்தையா அருந்தவபாலன்