நியூ யார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பெண் நிருபர் ஆர்வ மிகுதியில் மைக்கை நீட்டிய போது, அது டிரம்ப் முகத்தில் இடித்தது.
இதனால், ஒரு நிமிடம் டென்ஷன் ஆன டிரம்ப், சிரித்தபடியே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவும் நிலையில், நெட்டிசன்கள் டிரம்பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தனது அதிரடி அறிவிப்புகள் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கம் அளித்து வருகிறார்.
பதவியேற்றது முதல் எப்போது என்ன செய்ய காத்திருக்கிறாரோ என பல்வேறு நாடுகளும் அஞ்சும் அளவுக்கு தினம் தினம் எதாவது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக அளவில் பரபரப்பை எகிற வைத்து வருகிறார்.
செய்தியாளர் செய்த செயல்
இதனால் டிரம்ப் அளிக்கும் சின்ன சின்ன பேட்டிகள் கூட சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. இதனால், அவரது பிரஸ் மீட்டும் பிற எந்த அமெரிக்க அதிபர்களை விட கொஞ்சம் கூடுதல் பரபரப்புடன் காணப்படுகிறது.
இத்தகைய சூழலில், தான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது டிரம்பை எரிச்சல் அடையச் செய்யும் விதமாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:-
டிரம்ப் கொடுத்த ரியாக்ஷன்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாஷிங்டன் டிசி நகரில் இருந்து விமானம் மூலமாக வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். விமானப்படைக்கு சொந்தமான விமான தளத்தில் இருந்து டிரம்ப் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதற்கு முன்பாக டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது டிரம்பை பேட்டி எடுக்கும் ஆர்வத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், மைக்கை நீட்டும் போது அது தவறுதலாக டிரம்ப் முகத்தில் பட்டுவிட்டது.
இதனால், டிரம்ப் ஒரு நொடி டென்ஷன் ஆனார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இவர் இன்று தொலைக்காட்சியில் வரப்போகிறார்.
இன்று மிகப்பெரிய செய்தியாக இவர்தான் இருக்க போகிறார் என்று தனது கோபத்தை அந்த ரிப்போர்ட்டரிடம் காட்டிய டிரம்ப், நீங்கள் அதை பார்த்தீர்களா? என்று அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் கேட்டு சிரித்தபடி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.
இந்த விவகாரம் அத்தோடு முடிந்தாலும் கூட, சமூக வலைத்தளங்களில் இதை வைத்து நெட்டிசன்கள், காரசாரமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், “இதைப்பார்த்ததும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ‘இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அமெரிக்க நாட்டின் அதிபரிடம் இவ்வளவு அஜாக்கிரதையாக நடந்து கொள்ள முடியுமா? மைக்கில் ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய பொருள் இருந்து இருந்தால் என்ன ஆகும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், “ஒரு வேளை டிரம்பிற்கு அடுத்த சில மணி நேரங்களில் ஏதாவது ஆனது என்றால் நான், மைக்கால் இடித்த நபரைத்தான் நான் குறை சொல்வேன்” என்றார்.
இது பற்றி விசாரிக்க வேண்டும்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த விவகாரத்தை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மைக்கில் விஷம் கூட வைக்க முடியும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதேபோல டிரம்ப்பின் ஆதரவாளரும் அரசியல் ஆர்வலருமான லார லூமர் என்பவர் கூறும் போது, “இந்த பூம் மைக்கை டிரம்பின் முகத்திற்கு இவ்வளவு நெருக்கமாக ஒரு ரிப்போர்ட்டரால் எப்படி கொண்டு போக முடியும். இது சரியானதாக தெரியவில்லை. இது பற்றி விசாரிக்க வேண்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.