சிலருக்கு நாக்கில் வெள்ளையாகப் படியக்கூடும். இதற்கு முக்கியக் காரணம் வாய் சுகாதாரமின்மை தான். நாக்கின் மேல்புறத்தில் சிறுசிறு இழை போன்ற அமைப்பு இருக்கும். இதனால்தான் நாக்கு சொரசொரப்பாக இருக்கும். இழை போன்ற சுவை அரும்புகள்தான் நாம் சாப்பிடும் உணவின் சுவையை நமக்குத் தெரிவிக்கும்.
வாய்ப்பகுதி சுத்தமில்லாமல் இருப்பது, நோய்த்தொற்று, நாக்கில் அழுக்குப் படிவது போன்ற காரணங்களால் அந்த இழை போன்ற அரும்புகள் அளவுக்கு அதிகமாக வளரும். இதனை ‘ஹைப்பர்டிராபி’ (Hypertrophy) என்பார்கள்.
இவை அதிகமாக வளர்வதால் என்ன சாப்பிட்டாலும் நாக்கில் சென்று படியத் தொடங்கும். சிலருக்கு நாக்கின் சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும். அது பார்ப்பதற்கு வரைபடம் (Map) போல இருக்கும். இதனை ‘ஜியோகிராஃபிக் டங்’ (Geographic Tongue) என்பார்கள். விட்டமின் பி குறைபாட்டினால் இது ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, நிறைய மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, அறுவை சிகிச்சை செய்திருக்கும்போது உள்ளிட்ட காரணங்களால், வாயில் இருக்கும் நல்ல பக்டீரியாக்கள் குறைந்து, பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு நாக்கில் வெள்ளையாகப் படியும்.
அதுதவிர, பால்வினை நோய்களான ஹெச்.ஐ.வி, சிஃபிலிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாக்கில் வெள்ளையாகப் படிய வாய்ப்புள்ளது.
மேலும், நீண்ட நாள் வெள்ளையாகப் படிந்திருப்பது புற்றுநோயாகவோ வேறு பிரச்சினையின் அறிகுறியாகவோ கூட இருக்கலாம். ஆகவே, பல் துலக்கும் போது, கட்டாயம் நாக்கையும் தேய்த்துக் கழுவ வேண்டியது அவசியமாகும்.
ஆனால், சுத்தப்படுத்திய பிறகும் நாக்கில் வெள்ளையாகப் படிந்திருப்பது அகலவில்லை என்றாலோ, நாக்கை சுத்தப்படுத்தும்போது இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
அதேநேரம், உலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும் ‘டங் க்ளீனரை’ (Tongue Cleaner) தொடர்ந்து நாக்கின் மீது பயன்படுத்தும்போது, சுவை அரும்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவை மொத்தமாக அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது. அவை அளவுக்கு அதிகமாக வளரும்போது என்ன சாப்பிட்டாலும் நாக்கில் அழுக்கு போல படியும்.
மேலும், மவுத் வொஷ் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக்கூடாது. மவுத்வொஷில் சேர்க்கப்பட்டிருக்கும் அல்கஹோல், வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும். அதிகபட்சம் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் பயன்படுத்தலாம். தினமும் இரண்டு, மூன்று முறை பயன்படுத்துவது வறட்சியை ஏற்படுத்தும்.
மேலும், அதிக மவுத் வொஷ் பயன்பாடு வாயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அடுத்து, பல் பிரச்சினைக்கு சிகிச்சை எடுக்கும்போது பல் மருத்துவர் மவுத் வொஷ் பயன்படுத்த அறிவுறுத்தினால் மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த மவுத் வொஷை எப்படி, தண்ணீருடன் எந்த விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் பின்பற்ற வேண்டும்.
மேலும், நாள் முழுவதும் சாப்பிடும் உணவு அனைத்தும் நாக்கிலும் படியும். அதனால் பற்களை சுத்தப்படுத்துவது போல நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். பல் துலக்கிவிட்டு நாக்கை சுத்தப்படுத்தவில்லை என்றால் வாயிலிருக்கும் துர்நாற்றம் போகாது. இது தெரியாமல் பலர் பற்களை மட்டும் சுத்தம் செய்வார்கள். ஆனால் எப்போதெல்லாம் பல துலக்கின்றோமோ அப்போதெல்லாம் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, காலை, இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் பல்துலக்கும் போது, நாக்கையும் சேர்த்து சுத்தப்படுத்த வேண்டும். அதுபோல், சாப்பிட்டதற்குப் பிறகு விரல் வைத்து நாக்கை சுத்தப்படுத்துவதும் நல்லது.
இவ்வாறு, வாய்சுகாதாரத்தை பேணும் போது, நாக்கில் வெள்ளைப் படிதல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரும்.