அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, நேற்று (30) 17 வயதுடைய தந்தை (ஒலுவில்) மற்றும் தாய் (நிந்தவூர்) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 17 வயதுடையவர்கள் மற்றும் திருமணமாகாத காதல் ஜோடி என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுக்கு பிறந்த குழந்தையை, தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கைவிட முடிவு செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, குழந்தையின் தாய் வீட்டில் குழந்தையை பிரசவித்தார். இதனை அறிந்த தந்தை, குழந்தையை தான் வளர்ப்பதாகக் கூறி பெற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் தனது உறவுக்கார பெண்ணை தொடர்பு கொண்டு, ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட குழந்தையை கண்டெடுத்ததாகவும், அதை வளர்க்க முடியுமா எனவும் கேட்டார். அந்த உறவுக்கார பெண்ணும் சம்மதித்தார். ஆனால், குழந்தையின் தொப்புள்கொடி முறையாக வெட்டப்படாததால் இரத்தம் கசிந்தது.

இதனையடுத்து, குழந்தை ஒலுவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது, குழந்தை கைவிடப்பட்டதாக கதை பரவியது.

அதன் பின்னணியில், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version