இந்தியாவின் கேரளாவில் மணி அம்மா என்று அழைக்கப்படும் ராதாமணி (74) என்ற பெண் ஒரு வியத்தகு முன்மாதிரியாக மாறியுள்ளார்.
பேருந்துகள், கனரக வாகனங்கள், பாரந்தூக்கி வாகனங்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் (JCB, Excavators) உட்பட 11 வெவ்வேறு வாகனங்களுக்கான உரிமங்களைப் பெற்று, இந்தச் சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் ‘ஒரே பெண்’ என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த ராதாமணி, தனது 10ஆம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில், தான் யாரையாவது இடித்துவிடுவோமோ என்ற பயத்தில், ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் அமரக்கூட அஞ்சியதாகக் கூறுகிறார்.
ஆனால், அவரது கணவர் டி.வி. லால் என்பவரின் தொடர்ச்சியான ஊக்குவிப்பு மற்றும் தினசரி பயிற்சி மூலம் அவரது பயம் மெதுவாக நம்பிக்கையாக மாறியது.
1978ஆம் ஆண்டு தனது கணவர் ஒரு சாரதி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தபோது, ராதாமணிக்கு வாகனங்களை ஓட்டும் ஆர்வம் தோன்றியுள்ளது.
ஒரு சில பெண்களே வாகன சாரதிகளாக இருந்த அந்தக் காலத்தில், இவர் ஒரு பஸ் மற்றும் லொறியை செலுத்த கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
விரைவிலேயே, அவர் டிரெய்லர்கள், ஃபோர்க்லிஃப்ட்கள், கிரேன்கள், ரோட் ரோலர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் (Excavators) போன்ற பிற கனரக வாகனங்களையும் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றார்.
“அக்காலத்தில், ஒரு பெண் கனரக வாகனத்தை ஓட்டுவதைப் பார்த்து மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்” என்று ராதாமணி இந்திய ஊடகத்திடம் கூறியுள்ளார்.
2004ஆம் ஆண்டில் தனது கணவர் காலமான பிறகு, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் சாரதி பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை அவர் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
ராதாமணி அம்மாவின் இந்த அசாத்தியப் பயணம், புதியதாக ஒன்றைக் கற்க வயது ஒரு தடையல்ல என்பதையும், அச்சம் ஒருபோதும் யாரையும் தடுத்து நிறுத்தக்கூடாது என்பதையும் நிரூபிக்கிறது. இது “உங்களால் முடியாது” அல்லது “இந்த வயதில் இது உங்களுக்கு இல்லை” என்று கூறப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும், சுக்கானைப் பிடித்து உங்கள் சொந்தக் கதையை எழுதுங்கள் என்று சொல்வதற்குச் சமம்.

