பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக கூறியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “இரான் அரசாங்கம் எதிர்பாராத வகையில் மிகத் தீவிரமாகப் பிளவுபட்டுள்ளது என்ற உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோரின் கோரிக்கையின் பேரிலும், இரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரையில், அந்நாட்டின் மீதான எங்களது தாக்குதலை நிறுத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, நமது ராணுவம் முற்றுகையைத் தொடரவும், மற்ற அனைத்து அம்சங்களிலும் தயார் நிலையிலும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

அத்துடன், அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எவ்வகையிலாயினும் நிறைவடையும் வரையில், நான் போர்நிறுத்தத்தை நீட்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நன்றி

, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் டிரம்ப் (கோப்புப்படம்)

போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார்.

ஷெபாஸ் ஷெரீஃப் தன் எக்ஸ் தளத்தில், “எங்கள் கோரிக்கையை ஏற்று, ராஜீய ரீதியிலான முயற்சிகள் முன்னோக்கிச் செல்ல ஏதுவாக போர் நிறுத்தத்தை நீட்டித்த அதிபர் டிரம்புக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எழுதினார்.

அவர் மேலும் கூறுகையில், “நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தொடர்ந்து பாடுபடும். இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டி, இந்த மோதலுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இருப்பினும், இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பதை பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெளிவுபடுத்தவில்லை.

முன்னதாக, பேச்சுவார்த்தைக்கு இரான் தயாராக இல்லாததால், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தார்.

நிபந்தனைகள் என்ன?

இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள்:

• இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடந்த 8ம் தேதி இரு வாரத்துக்கு நிபந்தனை அடிப்படையிலான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. அந்த போர் நிறுத்தம் இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்கு வரவிருந்தது.

• அந்த போர் நிறுத்த ஒப்பந்தம், வளைகுடாவில் எண்ணெய் மற்றும் மற்ற சரக்கு ஏற்றுமதிகளுக்கு முக்கியமான கடல்வழி பாதையாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையை தெஹ்ரான் திறக்கும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

• இரு வாரங்களுக்கு இரானிய ராணுவ ஒருங்கிணைப்பின் மூலம் ஹோர்மூஸ் நீரிணை வாயிலாக கப்பல்கள் பயணிக்க இரான் ஒப்புக்கொண்டது.

• அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்கு பயணித்தார். ஆனால், பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்கு பின் ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில் அவர் மீண்டும் வாஷிங்டன் திரும்பினார்.

• எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாத நிலையில், இரான் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையில் ஈடுபட்டது. அதேசமயம், இரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் வங்கிகள் மீது தடைகள் ஏற்படுத்தப்படும் என்ற எச்சரிக்கை உட்பட அதிகாரிகள் பொருளாதார அழுத்தத்தை அதிகப்படுத்தினர்.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்

 

அதேசமயம், இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் தளமாக விளங்கும் லெபனானுக்கும் இடையேயான மோதல் தொடர்பாகவும் தனியே ஒரு போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

ஏப்ரல் 16 அன்று இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையே 10 நாள் போர் நிறுத்தத்தை அதிபர் டிரம்ப் அறிவித்தார். 1993ம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் நேரடி பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

“லெபனானில் ஏற்பட்ட போர்நிறுத்தத்துக்கு இணங்க,” ஹோர்மூஸ் நீரிணை “முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக” இரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்; ஆனால், அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கிக்கொள்ளாததால், மறுநாளே தெஹ்ரான் அந்த நீரிணையை மீண்டும் திடீரென மூடியது.

திட்டமிடப்பட்ட, உடனடியான அல்லது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, எந்த நேரத்திலும், தற்காப்புக்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான தனது ‘உரிமையை’ இஸ்ரேல் தக்கவைத்துக்கொள்ளும் என்று ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

ஹெஸ்பொலா மற்றும் பிற அனைத்து “சட்டவிரோத அரசு சாரா ஆயுதக் குழுக்களும்” இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்கு, லெபனான் “தகுந்த நடவடிக்கைகளை” மேற்கொள்ள வேண்டும் என்றும் இது குறிப்பிடுகிறது.

இரான் விவகாரத்தில் தான் மேலும் கால அவகாசம் பெற்றுக்கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் செவ்வாயன்று அறிவித்ததன் மூலம், தெஹ்ரான் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் அல்லது புதன்கிழமை போர் மீண்டும் தொடங்கும் என அவர் நிர்ணயித்திருந்த காலக்கெடு ஒத்திவைக்கப்பட்டது.

போர்நிறுத்தத்தை நீட்டித்ததன் மூலம், தெஹ்ரானுக்கு எதிராகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்த தனது எச்சரிக்கைகளை தற்போதைக்கு நிறைவேற்ற வேண்டாம் என டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஆனால், வரும் நாட்கள் அல்லது வாரங்களில் ஏதோ ஒரு தருணத்தில், அதே முடிவை மீண்டும் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்படுவார் என்பதையும் இது உறுதி செய்துள்ளது.

அது எப்போது நிகழும் என்பது தெளிவாக இல்லை. செவ்வாய்க்கிழமையன்று, புதிய போர்நிறுத்த நீட்டிப்பு சரியாக எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை;

மாறாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு “ஒருங்கிணைந்த முன்மொழிவை” முன்வைக்க இரானுக்குத் தான் கூடுதல் அவகாசம் அளிப்பதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக, போரைத் தீவிரப்படுத்துவது குறித்த தனது எச்சரிக்கைகளிலிருந்து டிரம்ப் பின்வாங்கியது,

அவர் இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் நாளுக்கு நாள் அதிக ஆர்வம் காட்டுவதையே உணர்த்துகிறது.

என்ன நடந்தது?

முன்னதாக, பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய விரிவான தாக்குதல்களில் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் மோதல் மூண்டது.

இதற்குப் பதிலடியாக, இரான் வளைகுடாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

மோதல் விரைவாக தீவிரமடைந்து, லெபனான் வரை பரவியது. இதனால், அனைத்து தரப்பிலும் உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்தன.

அதன்பிறகு, அமெரிக்காவும் இரானும் ஏப்ரல் 7 முதல் இரண்டு வார கால நிபந்தனைக்குட்பட்ட போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version